அறிவு மேலாண்மை
அறிவு மேலாண்மை (Knowledge Management) என்பது, நிறுவனங்கள், தமது அறிவையும், அவற்றை அறிந்துகொண்ட முறை பற்றிய தகவல்களையும்; அடையாளம் காண்பதற்கும், உருவாக்குவதற்கும், வழங்குவதற்கும், பயன்படுத்துவதற்கும் கைக்கொள்ளுகின்ற நடைமுறைகளை உள்ளடக்கிய ஒன்றாகும். 1995 ஆம் ஆண்டிலிருந்து இது ஒரு தனித் துறையாக வளர்ந்துள்ளது.[1] இதனைக் கற்பிப்பதற்கான பல்கலைக்கழகப் பாட நெறிகளும்; தொழில்சார், கல்விசார் வெளியீடுகளும் உள்ளன. பல பெரிய நிறுவனங்கள் அறிவு மேலாண்மைக்கு என வளங்களை ஒதுக்குகின்றன. பொதுவாக நிறுவனங்கள் இதனை, தகவல் தொழில்நுட்பம், மனிதவள மேலாண்மை, வணிக வியூகம் போன்ற பிரிவுகளின் கீழ் நடைமுறைப்படுத்துகின்றன. தற்போது அறிவு மேலாண்மைத் துறை பல கோடிகள் மதிப்புள்ள உலகு தழுவிய சந்தை வாய்ப்பைக் கொண்டுள்ளது.
அறிவு மேலாண்மைத் திட்டங்கள் பொதுவாக, செயற்றிறன் மேம்பாடு, சாதகமான போட்டிநிலை, புத்தாக்கம், வளர்ச்சிக்கான நிகழ்முறைகள், அறிந்துகொண்டவற்றைத் திட்டங்களிடையே பயன்படுத்துதல், கூட்டு நடைமுறைகளின் பொதுவான வளர்ச்சி போன்ற நிறுவன இலக்குகளுடன் பிணைக்கின்றன. இது பொதுவாகக் கற்கும் நிறுவனங்கள், வாழ்நாள் கல்வி, தொடர் மேம்பாடு போன்ற கருத்துருக்களுடன் தொடர்புபட்டுக் காணப்படுகிறது. அறிவை மேலாண்மை செய்வதற்குக் கொடுக்கப்படும் கூடிய முக்கியத்துவமும்; அறிவு, தகவல், சைகைகள் முதலியவற்றின் தொடர்ச்சியான வருகைக்கான வழிகளை உருவாக்கி மேம்படுத்தும் போக்கும் அறிவு மேலாண்மையை, நிறுவனம்சார் அறிவுபெறல் என்பதிலிருந்து வேறுபடுத்துகின்றன. அறிவு மேலாண்மை, பெற்றதனை தக்க வைத்து சிந்தித்தறியும் அறிவாற்றல் தக்கவைத்தலையும் உள்ளடக்கியது.[2]
வரைவிலக்கணம்
[தொகு]அறிவு மேலாண்மை தொடர்பில், ஒருமனதான வரைவிலக்கணம் எதுவும் இன்றிப் பரவலான சிந்தனைப் போக்கு நிலவுகிறது. தனிப்பட்டவர் அல்லது சிந்தனைக் குழுக்களுக்கு ஏற்ப அறிவு மேலாண்மை குறித்த அணுகுமுறைகளும் மாறுகின்றன. இதனைப் பின்வரும் நோக்குநிலைகளில் இருந்து பார்க்கமுடியும்.
- நுட்பமைய நோக்கு: இது தொழில் நுட்பத்தை மையப்படுத்திய ஒரு நோக்கு ஆகும். இது அறிவுப்பகிர்வு / வளர்ச்சி மேம்பாட்டுக்கு வாய்ப்பானது.
- அமைப்புசார் நோக்கு: அறிவு நிகழ்முறைகளின் வசதிக்கு அமைப்புக்கள் எவ்வாறு வடிவமைக்கப்படவேண்டும், எத்தகைய அமைப்பு எவ்வாறான நிகழ்முறைகளுடன் ஒத்துபோகக் கூடியது போன்றவை சார்ந்த நோக்கு.
- சூழல்சார் நோக்கு: மக்களிடையேயான தொடர்பாடல், அடையாளம், அறிவு, சூழல் காரணிகள் போன்றவற்றை ஒரு சிக்கலான நெகிழ் தொகுதியாக (complex adaptive system) நோக்குதல்.[3][4]
தரவு, தகவல், அறிவு, மெய்யறிவு
[தொகு]பெறப்பட்ட தரவுகள், ஒரு கோர்வையாக அடுக்கப்பட்ட அமைப்பு தகவல்களாகும். தகவல்களை ஆய்ந்து அறிவது அறிவு. தகவல்களின் மெய்ப்பண்பு அதன் நீட்சிகளை புரிந்துணர்தல் மெய்யறிவு.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ McInerney, Claire (2002). "Knowledge Management and the Dynamic Nature of Knowledge". Journal of the American Society for Information Science and Technology 53 (12): 1009–1018. doi:10.1002/asi.10109.
- ↑ Bolisani, Ettore; Bratianu, Constantin (2018). Generic Knowledge Strategies.
- ↑ "Introduction to Knowledge Management". www.unc.edu. University of North Carolina at Chapel Hill. Archived from the original on March 19, 2007. Retrieved 11 September 2014.
- ↑ Sanchez, R. (1996). Strategic Learning and Knowledge Management. Chichester: Wiley.