அயனி (மரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயனி
The bark of A.hirsutus
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Rosales
குடும்பம்: Moraceae
சிற்றினம்: Artocarpeae
பேரினம்: Artocarpus
இனம்: A. hirsutus
இருசொற் பெயரீடு
Artocarpus hirsutus
Lam.[1]

அயனி என்பது பலா இனத்தைச் சேர்ந்த ஒரு மரம். இதனுடைய பழமானது சிறிய பலா பழத்தைப் ஒத்திருக்கும். இது நேராக வளரும் தன்மையுடையது. இது கேரளாவிலும், தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பரவலாகக் காணப்படுகிறது. தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலுள்ள பசுமையிலைக்காடுகளில் அதிகமாக வளர்கிறது. முப்பத்தைந்து மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இம்மரம் வீட்டு ஜன்னல்கள், நிலை போன்றவற்றைச்செய்ய அதிகம் பயன்படுகிறது. கேரளாவின் புகழ் பெற்ற பாம்புப்படகு அயினி மரத்தை உபயோகித்தே அதிகமும் செய்யப்படுகிறது. தேக்கைப்போன்று இந்த மரமும் வலிமை கொண்டதே. கன்யாகுமரி மாவட்டத்திலிருக்கும் மாத்தூர், திருவட்டாறு, திற்பரப்பு போன்ற மலையும் மலை சார்ந்த இடங்களில் இது அதிகம் விளைகிறது. மாத்தூர் தொட்டிப் பாலம் காணச்செல்லும்போது வழி நெடுக இருக்கும் ரப்பர் தோட்டங்களினூடே அயினி மரங்களும் அதிகம் வளர்ந்திருப்பதைக்காணலாம்.

அயினிப்பலா உருவில் பலாப்பழத்தின் சிறியவுரு போலவே இருக்கும். நன்கு பழுத்ததும் முள்முள்ளான மேல்தோல் அடர் மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடும். இப்பழத்தின் தோலை வெறும் கைகளாலேயே மெதுவாகப் பிரித்தெடுத்தால், உள்ளே ஆரஞ்சு நிறத்தில் புளியம்பழ அளவிலான சுளைகள் நடுத்தண்டுடன் ஒட்டிக்கொண்டு கொத்தாக இருப்பதைக் காண முடியும். வேனிற்காலங்களில் அதிகம் கிடைக்கும். லேசான புளிப்பும் இனிப்புமாக உண்ண மிகச்சுவையாக இருக்கும் இந்தப்பழம் சிறுவர்களுக்கும் குழந்தையுள்ளம் கொண்டவர்களுக்கும் மிக விருப்பமானது. ஆகவே, பள்ளிக்கூடங்களின் வெளியே இதை விற்றுக்கொண்டிருப்பது வழக்கமான காட்சி.

பழத்தினுள் இருக்கும் விதைகள் கருமை நிறத்திலிருக்கும். அவற்றையும் வறுத்துத் தோலுரித்துத் தின்னலாம்.

பயன்கள்[தொகு]

அயனிப்பழம்
தோல் நீக்கப்பட்ட அயனிப்பழம்

இதனுடைய பழம் உண்பதற்காகப் பயன்படுகிறது. இது பெரும்பாலும் மரம் நேராக வளரும் தன்மையுடையதால் மரத்தடிக்காக வளர்க்கப்படுகிறது. இவ்விதையின் பொடி, ஆஸ்துமாவிற்கு அருமருந்து எனச்சொல்லப்படுகிறது.

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அயனி_(மரம்)&oldid=3489258" இருந்து மீள்விக்கப்பட்டது