அன்னா யாரோசிலாவ்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்னா யாரோசிலாவ்னா
பிரான்சின் அரசி
Tenure19 மே 1051 – 4 ஆகத்து 1060
முடிசூட்டுதல்19 மே 1051
பிரான்சின் ஆட்சியாளர்
Regency1060–1066
அரசிமுதலாம் பிலிப்பு
துணை ஆட்சியாளர்ஐந்தாம் பால்டுவின்
பிறப்புஅண். 1030
இறப்பு5 செப்டம்பர் 1075
வாழ்க்கைத் துணைகள்பிரான்சின் முதலாம் என்றி
வாலாயிசு பிரபு நான்காம் ரால்ஃப்
குழந்தைகளின்
பெயர்கள்
பிரான்சின் முதலாம் பிலிப்பு
முதலாம் ஹியூ
அரசமரபுவலோதிமிரோவிச்சி
தந்தையாரோசிலாவ்
தாய்சுவீடனின் இங்கிகெர்ட் ஒலோஃப்சுடொட்டர்
கையொப்பம்
1063 சாசனத்தில் அன்னேயின் பெயர் கல்வெட்டு[1]

அன்னா யாரோசிலாவ்னா(Anna Yaroslavna, உக்ரைனியன்: Анна Ярославна) அல்லது கீவின் ஆன் (Anne of Kiev, அண். 1030 – 1075) கீவ உருசிய இளவரசி ஆவார். இவர் 1051 இல் பிரான்சு நாட்டின் அரசர் முதலாம் என்றியைத் திருமணம் செய்து கொண்டு அந்நாட்டின் அரசி ஆனார். இவர் சென்லிசில் உள்ள புனித வின்சென்ட் மடாலயத்தை நிறுவினார். 1060 இல் என்றியின் மரணத்திற்குப் பிறகிலிருந்து வாலோயிசின் நான்காம் ரால்ஃப் பிரபுவுடனான சர்ச்சைக்குரிய திருமணம் வரை, அன்னா அவரது மகன் பிலிப் I இன் சார்பாகப் பிரான்சு இராச்சியத்தை ஆட்சி செய்தார்.

குழந்தைப் பருவம்[தொகு]

கீவ், புனித சோபியா திருப்பள்ளியில் உள்ள இந்த சுவரோவியத்தில் இடதுபுறத்தில் உள்ள உருவம் அன்னாவை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கலை வரலாற்றாசிரியர் விக்டர் லாஸரேவ் கருதினார். வரலாற்றாசிரியர் ராபர்ட்-ஹென்றி பாட்டியரின் கூற்றுப்படி, இது அவரது சகோதரர்களில் ஒருவரை சித்தரிக்கிறது.

அன்னா கீவின் இளவரசர் யாரோசிலாவ் மற்றும் அவரது இரண்டாவது மனைவி ஸ்வீடனின் இங்கெர்ட் ஓலோப்சுடோட்டர் ஆகியோரின் மகள் ஆவார். வரலாற்றாசியர் பிலிப் டெலோரம் 1027ஐ இவரின் பிறந்த வருடமாக பரிந்துரைத்துள்ளார். அதே நேரத்தில் ஆண்ட்ரூ கிரிகோரோவிச் 1032 ஐ இவரின் பிறந்த ஆண்டாக முன்மொழிந்துள்ளார், அந்த ஆண்டில் யாரோசிலாவுக்கு ஒரு மகள் பிறந்ததை கீவ் நகர சரித்திரத்தில் குறிப்பிடுகிறார்.

இவரது உடன்பிறப்புகளின் பிறப்பு வரிசையில் அன்னாவின் சரியான இடம் தெரியவில்லை. இருப்பினும் இவர் நிச்சயமாக இளைய மகளாக இருந்தார் என தெரிகிறது. அன்னாவின் குழந்தைப் பருவம் அல்லது கல்வி பற்றி அதிகம் அறியப்படவில்லை.சிரிலிக் மொழியில் இவரது கையொப்பம் 1061 முதல் ஒரு ஆவணத்தில் இருப்பதால், இவர் குறைந்தபட்சம் இவரது பெயரை எழுத போதுமான கல்வியறிவு பெற்றவர் என்று கருதப்படுகிறது.[2] அன்னா பல பள்ளிகளை நிறுவினார் என்றும், இவரது குடும்பத்தில் கல்வி மிகவும் மதிப்புமிக்கது என்றும், இது அன்னாவுக்கு குறிப்பிடத்தக்க அளவிலான கல்வியை முன்மொழிய வழிவகுத்தது என்றும் டெலோரம் சுட்டிக்காட்டியுள்ளார். பிரான்சின் முதலாம் என்றி மன்னருடனான தனது திருமணத்திற்காக அன்னா பிரான்சிய மொழியைக் கற்றுக்கொண்டதாக கிரிகோரோவிச் பரிந்துரைத்துள்ளார்.

திருமணம்[தொகு]

என்றியின் முதல் மனைவி பிரிசியாவின் மடில்டா மற்றும் அவர்களின் ஒரே குழந்தை இறந்த பிறகு, 18 வயதான மன்னர் என்றியுடன் அன்னாவின் திருமணத்திற்கான பேச்சுவார்த்தைகள் 1040 களின் பிற்பகுதியில் நடந்தன.[3] அவசரத் தேவை மற்றும் இணக்கமான சொந்தங்களுக்குள் நடக்கும் திருமணங்களுக்கு திருச்சபையின் எதிர்ப்பு காரணமாக, என்றி அவருக்கு சொந்தம் இல்லாத ஒரு மணமகளைத் தேடுவது அவசியமானது.[2] பேரரசின் செல்வாக்கைத் பெருக்கும் முயற்சியில் யாரோசுலாவ் தனது குழந்தைகளை மேற்கத்திய ஆட்சியாளர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்.

1049 இலையுதிர்காலத்தில் அல்லது 1050 வசந்த காலத்தில், என்றி மியோக்சின் பேராயர் கௌதியர், சௌனியின் கோசெலின் மற்றும் பிற பெயரிடப்படாத ஆலோசகர்களை யாரோசுலாவின் அரசவைக்கு அனுப்பினார்.[4][5][2] இது உருசியாவிற்கு இராசதந்திர பணிகளுக்காக இருந்திருக்கலாம்.[2] இந்த சந்திப்பின் பொது பேச்சுவார்த்தைகள் அல்லது வரதட்சணை ஏற்பாடுகள் பற்றிய பதிவுகள் எதுவும் இல்லை, இருப்பினும் அன்னா அந்த நேரத்தில் இவர்களுடன் கியேவை விட்டு பரிசுகளுடன் வெளியேறியதாகக் கூறப்படுகிறது.[6][5] அன்னாவால் பிரான்சுக்கு கொண்டு வந்த செல்வத்தின் ஒரு பகுதி, பின்னர் புனித டெனிசுக்கு அளிக்கப்பட்ட நினைவு ஆபரணங்களை உள்ளடக்கியது என்று கிரிகோரோவிச் கூறுகிறார்.[2] 1050 கோடையில் அல்லது இலையுதிர்காலத்தில் கியேவை விட்டு வெளியேறி அன்னா பிரான்சிலுள்ள ரீம்சு நகருக்கு பயணம் செய்தார் எனக்கூறுகிறார். 19 மே 1051 அன்று பெந்தெகொசுதே பண்டிகையின் போது அன்னா என்றியை மணந்தார்.[7] அப்போது அன்னாவை விட கிட்டத்தட்ட இருபது வயது மூத்தவராக இருந்தார் ஹென்றி.[2]

அரச வாழ்க்கை[தொகு]

19 மே 1051 அன்று அன்னாவின் திருமண விழாவைத் தொடர்ந்து உடனடியாக இவருக்கு முடிசூட்டப்பட்டது. இதனால் இவர் ரீம்சு தேவாலயத்தில் தனது முடிசூட்டலைக் கொண்டாடிய முதல் பிரெஞ்சு அரசியாக ஆனார்.[2] அன்னா மற்றும் என்றி திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தனர். இவர்களுக்கு மூன்று மகன்கள் இருந்தனர்: பிலிப், ராபர்ட் (இளம் வயதிலேயே இறந்தவர்) மற்றும் ஹக்.[4] மேற்கு ஐரோப்பா அரச குடும்பங்களுக்கு பிலிப் என்ற கிரேக்க பெயரை அறிமுகப்படுத்திய பெருமை அன்னாவுக்கு உண்டு. இவர் தனது முதல் மகனுக்கு இந்த கிரேக்க பெயரை தனது கிழக்கு மரபுவழி கலாச்சாரத்திலிருந்து இறக்குமதி செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இவர்களுக்கு எம்மா ஒரு மகளும் இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. இவர் ஒருவேளை 1055 இல் பிறந்திருக்கலாம் மற்றும் திருமணம் செய்து கொண்டாரா அல்லது எப்போது இறந்தார் என்பது பற்றிய தகவல்கள் தெரியவில்லை.[8] என்றி மற்றும் அன்னா ஆகியோர் எடிக்னா என்ற மகளின் வளர்ப்பு பெற்றோராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அரசியாக அன்னா அரச சபையில் பங்கேற்கும் உரிமையை பெற்றிருப்பார், ஆனால் இவர் அவ்வாறு செய்ததற்கான ஆரம்பகால பதிவுகள் எதுவும் இல்லை.[2] 1058 அரச சாசனத்தில், மடாலயத்துடன் (திருச்சபையுடன்) தொடர்புடைய இரண்டு கிராமங்களுக்கு என்றி ஒரு சலுகையை வழங்கினார் எனக் குறிப்பிடப்படுகின்றது. இதில் "என் மனைவி அன்னா மற்றும் எங்கள் குழந்தைகள் பிலிப், ராபர்ட் மற்றும் ஹக் ஆகியோரின் ஒப்புதலுடன்" என்று கூறப்பட்டுள்ளது. 1059 ஆம் ஆண்டில், கிரிகோரியன் சீர்திருத்தம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து என்றி மன்னர் திருச்சபையுடன் சண்டையிடத் தொடங்கினார்.[2] அந்த நேரத்தில், திருத்தந்தை நிக்கோலசு ராணி அன்னாவுக்கு ஒரு கடிதத்தை அனுப்பி, சரியான தனது மனசாட்சியைப் பின்பற்றுமாறும், ஒடுக்குமுறை வன்முறைக்கு எதிராக தலையிடுமாறும், அதே நேரத்தில் தனது கணவருடன் மிதமான முறையில் ஆட்சி செய்யும்படி ஊக்குவித்தார்.[9] சில வரலாற்றாசிரியர்கள் கூற்றுப்படி இந்த கடிதம் கிழக்கு மரபுவழியிலிருந்து ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு அன்னா மாறியதைக் குறிக்கும் என்று விளக்கியுள்ளனர்.

2014 உக்ரேனிய நாணயத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள அன்னா

4 ஆகத்து 1060 அன்று என்றி இறந்த பிறகு, அவரது மூத்த மகன் பிலிப் அரியணை ஏறினார்.[10] என்றி மன்னரின் சகோதரி அடேலாவின் கணவரான பிளாண்டர்ஸ் பால்ட்வின் V, பிலிப்பின் பாதுகாவலராக நியமிக்கப்பட்டார்.[2] இந்த நேரத்தில் அன்னா அரசாங்கத்தில் பங்கு வகித்திருக்கலாம் என நம்பப்படுகிறது. 1060 ஆம் ஆண்டின் ஒரு சட்டம் இவரது பெயர் பிலிப்பின் பெயரைப் பின்தொடர்வதைக் காட்டுகிறது, மேலும் இவரது பெயர் பால்ட்வின்னின் பெயரை விட நான்கு மடங்கு அதிகமாக பல்வேறு அரச சாசனங்களில் தோன்றுகிறது.[2] மேலும் பிலிப்பின் கிரேக்க ஆசிரியரையும் இவர் நியமித்தார் எனக் கூறப்படுகிறது

அன்னாயின் கையொப்பம் மட்டுமே இந்தக் காலகட்டத்திலிருந்து ஒரே சான்றாக உள்ளது, இது திருச்சபை மடாதிபதிக்காக சோய்சன்சில் வெளியிடப்பட்ட ஆவணத்தில் பொறிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது, இது இப்போது பிரான்சின் தேசிய நூலகத்தில் உள்ளது.[11] இந்த கையொப்பம் பெரும்பாலும் அரசியின் உதவியாளரால் வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.[12] இந்த ஆவணத்தில் சிரிலிக் மொழியில் ஒரு சிலுவை மற்றும் அநேகமாக "அனா ரெய்னா" என்று பொருள்படும் எட்டு எழுத்துக்கள் உள்ளன, இது "ராணி அன்னா" என்பதற்கான சமகால பிரெஞ்சு மொழிச் சொல்லாகும்.

1063 இல் அன்னா மற்றும் அவரது மகன் பிலிப் கையெழுத்திடப்பட்ட ஒரு சாசனம்

இருப்பினும், அரசாங்கத்தில் அன்னாவின் பங்குக்கான சான்றுகள் 1061 இல், இவர் மறுமணம் செய்து கொண்ட நேரத்தில் முற்றிலுமாக மறைந்துவிட்டன.[10] இவரது இரண்டாவது கணவர் வாலோயிசுவின் பிரபு நான்காம் ரால்ப் ஆவார். ரால்ப் என்றியின் உறவினர் ஆவர் மற்றும் இந்த திருமணம் சர்ச்சைக்குரியது ஏனெனில் ரால்ப் இன்னும் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்திருக்கவில்லை. இந்த மீறல்களுக்காக இவர்கள் இருவரும் அரசவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.[2][10] மேலும் மன்னரின் ஆலோசகர்கள் அவரை தனது தாயை விட்டு விலகிச் செல்ல ஊக்குவித்திருக்கலாம். 1060 பிற்பகுதியில் ரால்ப் தன்னை அரசரின் தந்தை என்று குறிப்பிடத் தொடங்கினார்.[2][2] பிறகு 1074 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ரால்ப் இறந்தார்.

1062 ஆம் ஆண்டில், சென்லிசில் ஒரு பாழடைந்த தேவாலயத்தை மீட்டெடுக்க அன்னா கணிசமான தொகையை நன்கொடையாக வழங்கினார், இது சரகோசாவின் புனித வின்சென்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அந்த அமைப்பு தன்னைத் தக்கவைத்துக் கொள்ளக்கூடிய வகையில் இவர் நிலங்களையும் வருமானத்தையும் வழங்கினார் எனக் கூறப்படுகின்றது. அன்னா மடாலயத்தை அர்ப்பணிப்பதற்கான காரணங்களை விளக்கும் ஓர் விரிவான கடிதத்தையும் எழுதினார். இந்தக் கடிதம் அன்னா கிரேக்க மரபுவழி இறையியலை பின்பற்றுவதை காட்டுகிறது. உதாரணமாக, "மரி, கடவுளின் தாய்" என்ற சொல் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது, இது கிழக்கத்திய மரபுவழி கருத்தைக் குறிக்கிறது.[2] சில அறிஞர்கள் இந்த கடிதத்தை அன்னா தானே எழுதவில்லை என்று நம்புகிறார்கள்.

மரணம் மற்றும் பிறகு[தொகு]

வின்சென்ட் தேவாலயத்தில் உள்ள அன்னாயின் சிலை (2011)

அன்னாவின் இறப்பு தேதி சரியாகத் தெரியவில்லை.[5][2] செப்டம்பர் 5 அன்று 1075 இல் இவர் இறந்ததாக டெல்லோரம் நம்புகிறார் (இவரது கடைசி கையொப்பமிடப்பட்ட ஆவணத்தின் ஆண்டு); மற்றவர்கள் 1080 ஐ இறந்த ஆண்டாக முன்மொழிந்துள்ளனர்.[5] பிலிப் மன்னரின் 1089 ஆம் ஆண்டு ஆவணத்தின் ஒரு முன்னோட்டம் அதற்கு முன்பே அன்னா இறந்துவிட்டார் என்பதைக் குறிக்கிறது.

1682 ஆம் ஆண்டில், இயேசு சபை தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கிளாட்-பிராங்கோயிசு மெனெசுடியர், வில்லியர்சு சிசுடெர்சியன் பேராலயத்தில் அன்னாயின் கல்லறையைக் கண்டுபிடித்ததாக அறிவித்தார். வில்லியர்சு பேராலயம் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை கட்டப்படாததால், இந்த கண்டுபிடிப்பு பின்னர் சர்ச்சைக்குள்ளானது, இருப்பினும் அன்னாயின் மரணத்தைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் கல்லறை அங்கு நகர்த்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.[2] அங்கு இருந்த நினைவுச்சின்னங்கள் அனைத்தும் பிரெஞ்சு புரட்சியின் போது அழிக்கப்பட்டன.

18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில், பிரான்சுக்கும் உருசியாக்கும் இடையிலான தொடர்பு அதிகரித்ததால், அன்னா மீது தொல்பொருள் ஆர்வத்திற்கு புத்துயிர் கிடைத்தது, மேலும் அன்னாவை பற்றிய பல குறுகிய வாழ்க்கை வரலாறுகள் வெளியிடப்பட்டன.[2] 20 ஆம் நூற்றாண்டில், அன்னா உக்ரேனிய தேசியவாதத்தின் அடையாளமாக மாறினார். மறுபுறம், சோவியத் குடியரசில் "யரோஸ்லாவ்னா, தி குயின் ஆஃப் பிரான்ஸ்" (1978) என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டது, இது எந்த வகையிலும் "உக்ரேனிய தேசியவாதத்துடன்" தொடர்புடையதாக இல்லை. ஆன்டின் ருட்னெட்ஸ்கியால் எழுதப்பட்ட "அன்னா யாரோஸ்லாவ்னா" என்ற இசை நிகழ்ச்சி முதன்முதலில் 1969 இல் கார்னகி ஹாலில் நிகழ்த்தப்பட்டது. 1998 ஆண்டில், உக்ரேனிய அரசாங்கம் அவரது நினைவாக ஒரு அஞ்சல் தலையை வெளியிட்டது.[5] 2005 ஆண்டில், உக்ரைன் அரசாங்கம் சென்லிஸில் ராணி அன்னாயின் வெண்கலச் சிலையை நிர்மாணிக்க நிதியுதவி செய்தது, இது ஜூன் 22 அன்று சனாதிபதி விக்டர் யுஷ்செங்கோவால் திறந்து வைக்கப்பட்டது.[5]

மேற்கோள்கள்[தொகு]

 1. SHEVELOV, George Y. (1978). "ON THE SO-CALLED SIGNATURE OF QUEEN ANN OF FRANCE (1063)". In M.A. Jazayery; E.C. Polomé; W. Winter (eds.). Linguistic and Literary Studies, Vol 3, Historical and Comparative Linguistics (in ஆங்கிலம்) (1978 ed.). The Hague, Paris, New York: MOUTON Publishers. pp. 249–256. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1515/9783110802146.249. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-279-7737-2. பார்க்கப்பட்ட நாள் 30 March 2022.
 2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 2.17 Delorme, Philippe (2015). Anne de Kiev : épouse de Henri Ier. Paris: Pygmalion.
 3. G. Duby, France in the Middle Ages, 987–1460, trans. J. Vale (Oxford, 1991), p. 117
 4. 4.0 4.1 Raffensperger, pp. 94–97.
 5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 Gregorovich, Andrew (2011). Anna Yaroslavna, Queen of France & Princess of Ukraine: Anne De Kiev. Toronto: Forum.
 6. Bauthier, 550; Hallu,168, citing Comptes de Suger
 7. Megan McLaughlin, 56.
 8. Zeilinger, Ingrid (2021-01-16). "She is the village patroness of Puch". Münchner Merkur. Archived from the original on 16 January 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-11-14.
 9. Lobanov-Rostovskiĭ (1825). Recueil de Pièces Historiques sur la reine Anne ou Agnès, épouse de Henri Ier, Roi De France, et Fille de Iarosslaf Ier, Grand Duc de Russie. Paris: De Firmin Didot.
 10. 10.0 10.1 10.2 Bogomoletz, Wladimir V (2005). "Anna of Kiev: An Enigmatic Capetian Queen of the Eleventh Century". French History 19 (3): 299–323. doi:10.1093/fh/cri032. 
 11. "Diplôme de Philippe Ier, concernant les autels de Pernant et Colombes (1063) (avec la souscription de la reine Anne de Kiev)".
 12. "Anne de Kiev (XIème siècle)". Ambassade de France en Ukraine. Ministère des Affaires étrangères et du Développement international. 26 November 2015. Archived from the original on 19 September 2017. பார்க்கப்பட்ட நாள் 30 March 2022. On trouve sa signature, en caractères cyrilliques, au bas d'une lettre des années 1060, sous la forme « Ana Reina ».

நூலியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னா_யாரோசிலாவ்னா&oldid=3937486" இலிருந்து மீள்விக்கப்பட்டது