உள்ளடக்கத்துக்குச் செல்

அனைத்து இறைக் கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனைத்து இறைக் கொள்கை (Pantheism) என்பது இயற்கையை உள்ளடக்கிய பிரபஞ்சமும் கடவுளும் சமம் ஆகும் என்னும் கருத்துக் கோப்பு ஆகும்.[1] அனைத்து இறைக் கொள்கையாளர்கள் ஆளுறவான கடவுள் உண்டு என்றோ, மனித குணநலன்களைக் கொண்ட கடவுள் உண்டு என்றோ ஏற்பதில்லை.[2]

சொல் பிறப்பு[தொகு]

அனைத்து இறைக் கொள்கை என்னும் கூற்று Pantheism என்பதன் மொழிபெயர்ப்பு. அச்சொல்லின் மூலமாக அமைவது கிரேக்க மொழியில் இரு சொற்கள். அதாவது கிரேக்கத்தில் pan என்றால் "அனைத்து" ("எல்லாம்") என்பது பொருள்; theos என்னும் சொல் "கடவுள்" என்னும் பொருள் கொண்டது.

இவ்வாறு, பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சியே கடவுள் என்னும் கருத்துப் போக்கு உருவானது.[3] அனைத்து இறைக் கொள்கையின் பல வடிவங்களும் ஏற்கும் கருத்துகள்: பிரபஞ்சம் ஒருங்கிணைந்த ஒருமை கொண்டது; பிரபஞ்சம் வணக்கத்துக்கும் மரியாதைக்கும் உரியது; பிரபஞ்சமும் இயற்கையும் புனிதத்தன்மை கொண்டவை.

வரலாறு[தொகு]

இக்கோட்பாட்டிற்கு Pantheism என்னும் பெயரினை அளித்தது ஜோசப் இராப்சன் என்னும் கணிதவியலாளர் ஆவார். இலத்தீனில் எழுதப்பட்டு, 1697இல் வெளியிடப்பட்ட அவரது நூலான De spatio realiஇல் இதனை முதன் முதலில் பயன்படுத்துகின்றார்.[4] இந்நூலில் இவர் எல்லாம் பொருளால் ஆனது என்னும் கொள்கையிலிருந்து இதனை வேறுபடுத்திக்காட்டுகின்றார். அதாவது எல்லாம் பொருளால் மட்டுமல்லாது அதனை தன் சொந்த இருத்தலாலேயே வடிவமைக்கும் ஆற்றல் பெற்ற ஒன்றும் இருப்பதாக இவர் குறிக்கின்றார்.[5][6] ராப்சன் மனிதனின் திறனால் அளவிடமுடியாது அண்டம் இருப்பதாகவும் மனிதன் அதனை எப்போதுமே புரிந்துகொள்ள முடியாது என்றும் நம்பினார்.[7]

இப்பதமானது ஆங்கிலத்தில் முதன் முதலில் ஐரிய எழுத்தாளர் ஜான் டோலேன்டினால் பயன்படுத்தப்பட்டது. இவரின் 1705இல் வெளியான Socinianism Truly Stated, by a pantheist என்னும் புத்தகத்தில் இவர் மீது இராப்சனினான தாக்கம் தென்படுகின்றது.[8] இவர் 1720இல் இலத்தீனில் எழுதிய Pantheisticon: or The Form of Celebrating the Socratic-Society என்னும் புத்தகத்தில் இவர் எல்லாம் ஒன்றே, ஒன்றாலேயே எல்லாம் அமைந்துள்ளது .... இதுவே கடவுள், முடிவில்லா நிலை மற்றும் பிறப்பு இறப்பு அற்ற நிலையினை உடையது என்கின்றார்.[9][10]

1710இல் கோட்பிரீட் லைப்னிட்ஸ்க்கு இவர் எழுதிய கடிதத்தில் இவர் தனது கோட்பாட்டினை தனியாளாக இல்லாமல் முழு அண்டத்தையும் கடவுளாகக்கருதும் கோட்பாடே அனைத்து இறைக் கொள்கை என விளக்கியுள்ளார்.[11][12][13]

இக்கோட்பாடு 17 ஆம் நூற்றாண்டுக்கு முன் இல்லை என்றாலும், முற்காலத்தில் இருந்த பல கிறித்தவர்கள் இதனை ஒத்த தத்துவங்களை கொண்டிருந்ததாகக் கருதப்படுகிறது. ஆயினும் இது இந்து மதக்கோட்பாடான அத்வைதத்தை பெரிதும் ஒத்து இருப்பதால் 19ஆம் நூற்றாண்டினைச்சேர்ந்த செருமானியரும் சமஸ்கிருத ஆய்வாளருமான தியடோர் கோல்ஸ்டக்கர் (Theodore Goldstücker) மேற்கு உலகத்தவர் இக்கோட்பாட்டினை இந்துக்களிடமிருந்தே கடன் வாங்கியதாகக் கருதுகின்றார்.[14]

கத்தோலிக்க திருச்சபை துவக்கம் முதலே இதனை ஒரு பதித்த கொள்கையாகவே கண்டது.[15] கியோர்டானோ புரூணோ என்னும் இத்தாலிய துறவி இக்கொள்கையை உடையவர் என குற்றம் சாட்டப்பட்டு 1600இல் கொல்லப்பட்டார்.[16] பார்ச் ஸ்பினோசாவின் Ethics என்னும் நூல் 1675இல் வெளியான நூல் இக்கொள்கை பெரிதும் பரவ உதவியது.[17]

20ஆம் நூற்றாண்டின் முடிவில் இக்கொள்கையினை உடையவர்கள் தங்களைத் தனி சமயமாகக் கருதத் துவங்கினர்.[18]

அண்மைய நிகழ்வுகள்[தொகு]

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அனைத்து இறைக் கொள்கையாளராக சிலரால் கருதப்படுகின்றார்.

2008 இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 1954இல் செருமனியில் எழுதிய கடிதமொன்றில் தன்னை அனைத்து இறைக் கொள்கையாளராக சித்தரிக்கின்றார். இக்கடிதமானது US$330,000க்கு ஏலம் விடப்பட்டது.[19]

2009இல் வெளியான திருத்தந்தையின் சுற்றறிக்கையிலும்[20] 2010 புத்தாண்டு செய்தியிலும் இதனைப்பற்றி திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் குறித்துள்ளார். இதில் இவர் மனிதனை விட இயற்கையினை உயர்துவதை, "மனிதன் இயற்கையில் தனது மீட்பை தேடுகின்றான்" என சாடியுள்ளார். 2009இல் வெளியான திரைப்படமான அவதாரின் விமர்சனத்தில் இராஸ் டுதாட் என்பவர் அனைத்து இறைக் கொள்கையினை ஹாலிவுடின் தற்போதைய சமயம் எனக்குறித்துள்ளார்.[21]

2011இல் ஆபிரகாம் லிங்கன் இக்கொள்கையினையும் உடையவராக இருந்தார் என அவரின் சட்ட ஆலோசகர் கூறியக்கடிதமானது US$30,000 ஏலமிடப்பட்டது.[22]

கடவுளை ஏற்கின்ற/ஏற்காத அனைத்து இறைக் கொள்கைகள்[தொகு]

அனைத்து இறைக் கொள்கை இரு பெரும் வகைகளாக உள்ளது. அவை:

 • கடவுளை ஏற்கும் அனைத்து இறைக் கொள்கை
 • கடவுளை மறுக்கும் அனைத்து இறைக் கொள்கை

என்பனவாம்.[23]

"கடவுள் மட்டுமே இருக்கின்றார்" என்னும் முற்கொள்கையோடு ஆய்வைத் தொடங்குவோர், அக்கடவுள் காலத்தைக் கடந்தவர், அனைத்தையும் உள்ளடக்குபவர் என்று இருப்பதால், உலகு என்னும் தோற்றமும், காலமும் அக்கடவுளின் வெளித்தோற்றம் அல்லது உருமாற்றம் மட்டுமே என்னும் முடிவுக்கு வருகின்றனர். அம்முடிவின்படி, இருப்பதெல்லாம் கடவுள், இயற்கை என்பது கடவுளின் பகுதி.

மற்ற பிரிவினர், கடவுளை இயற்கையின் பகுதியாகக் காண்கின்றனர். அவர்கள் கருத்துப்படி, "இருப்பது அனைத்தும் பிரபஞ்சமே/இயற்கையே". இயற்கையின் அனைத்துக் கூறுகளும் ஒன்றோடொன்று இணைந்து ஒருங்கே உள்ளன. கடவுளும் இயற்கையின் கூறுதான். என்னும் முடிவுக்கு வருகின்றனர்.[24]

இந்து சமயத்தின் அனைத்து இறைக் கொள்கை[தொகு]

இந்து சமயத்தில் நிலவுகின்ற கடவுள் கொள்கையை வரையறுப்பது எளிதல்ல என்றாலும், அது அனைத்து இறைக் கொள்கையின் அடிப்படைகளைக் கொண்டுள்ள மிகப் புராதன சமயமாக உள்ளது. பிரம்மம் ஒன்றே உளதாம் பொருள். அதன் கூறுகள், தோற்றங்கள் பிரபஞ்சமாக, உயிர்களாக வெளிப்படுகின்றன. இக்கருத்து இந்து சமய அடிப்படையான வேத நூல்களிலும் உபநிடதங்களிலும் உள்ளன.[25]

தத்துவமசி, அகம் பிரம்மாஸ்மி போன்ற மகாவாக்கியங்கள் இந்து சமய அனைத்து இறைக் கொள்கைக்கு அடித்தளமாகக் கருதப்படுகின்றன.

இந்து சமயத்தில் "ஆளுறவு கடவுள் கொள்கை"யும் உண்டு. எனவே, மனிதர் கடவுளின் முன்னிலையில் பக்தி உணர்வோடு பணிந்து வணங்குகின்றனர். ஆயினும் ஆளுறவுக் கடவுளும் ஆன்மாவும் பிரபஞ்சமும் பரபிரம்மத்தின் வெளிப்பாடே என்னும் கருத்தும் உளதால் அனைத்து இறைக் கொள்கை இந்து மதத்தின் ஆழ்ந்த அடிப்படையாக உள்ளது என்பர் அறிஞர்.[26]

இஸ்லாம் சமயத்தில் அனைத்து இறைக் கொள்கை[தொகு]

இஸ்லாம் ஐந்து பிரதானமான தூண்களில் நிறுவப்பட்டிருக்கின்றது என்று குர்ஆன் கூறுகின்றது. இதில் முதலாவது கலிமா என்று சொல்லப்படுகின்ற "இறைவனைத் தவிர வேறு எந்தப் பொருளுமேயில்லை" (லா இலாஹ இல்லல்லாஹ்) என்னும் புனித மந்திரமாகும். அனைத்துச் சிருஷ்டிகளும் இறைவனுக்கு வேறானவையல்ல என்பது அரபு மொழியில் "வஹ்ததுல் வுஜூத்" என்றும், பாரசீக மொழியில் "ஹமவோஸ்த்" என்றும் அழைக்கப்படுகின்றன. இதற்கு ஆதாரமாக திருக்குர்ஆனிலுள்ள பின்வரும் வசனங்கள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

1. அவனே ஆதியானவன், அவனே அந்தமானவன், அவனே வெளியாகியிருப்பவன், அவனே உள்ளாகியிருப்பவன்.
2. வானம் பூமி இரண்டிலும் இறைவனல்லாத வேறு சிருஸ்டிகள் இருக்குமாயின் அவை கேட்டையடைந்திருக்கும்.
3. நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கு இறைவனுடைய முகம் இருக்கிறது.
4. அவனைப்போல் எந்தப் பொருட்களும் இல்லை.
5. நிச்சயமாக இறைவன் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்தவனாக இருக்கிறான்.
6. இறைவனே கேட்கின்றவனாகவும் அறிகின்றவனாகவும் இருக்கிறான்.
7. அவனே வானங்களிலும் பூமியிலும் இறைவனாக இருக்கிறான்.
8. நிச்சயமாக நீங்கள் எறியவில்லை. எனினும் இறைவன்தான் எறிந்தான்.
9. உங்களுடைய கைகள் முகம்மதுவின் கைகளின் மேல் இல்லை. இறைவனின் கைகளின் மேல் இருக்கின்றன.

இந்த வசனங்கள் மாத்திரமன்றி இது போன்ற அநேக வசனங்கள் திருக்குர்ஆனிலுள்ளன. இந்த பிரபஞ்சமும் அதற்கு அப்பாலுள்ளவைகளும் இறைவனுக்கு வேறானவையல்ல, இறைவன் தானானவை என்பதே இஸ்லாம் சமயத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

ஆதாரங்கள்[தொகு]

 1. The New Oxford Dictionary Of English. Oxford: Clarendon Press. 1998. pp. 1341. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-861263-X.
 2. Levine, Michael, "Pantheism", The Stanford Encyclopedia of Philosophy (Summer 2012 Edition), Edward N. Zalta (ed.)
 3. Owen, H. P. Concepts of Deity. London: Macmillan, 1971.
 4. Ann Thomson; Bodies of Thought: Science, Religion, and the Soul in the Early Enlightenment, 2008, page 54.
 5. Raphson, Joseph (1697). De spatio reali (in Latin). Londini. p. 2.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
 6. Suttle, Gary. "Joseph Raphson: 1648–1715". Pantheist Association for Nature. பார்க்கப்பட்ட நாள் 7 செப்டம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 7. Koyré, Alexander (1957). From the Closed World to the Infinite Universe. Baltimore, Md.: Johns Hopkins Press. pp. 190–204. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0801803470.
 8. R.E. Sullivan, "John Toland and the Deist controversy: A Study in Adaptations", Harvard University Press, 1982, p. 193
 9. Harrison, Paul. "Toland: The father of modern pantheism". Pantheist History. World Pantheist Movement. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 10. Toland, John, Pantheisticon, 1720; reprint of the 1751 edition, New York and London: Garland, 1976, p 54
 11. Honderich, Ted, The Oxford Companion to Philosophy, Oxford University Press, 1995, p.641: "First used by John Toland in 1705, the term 'pantheist' designates one who holds both that everything there is constitutes a unity and that this unity is divine."
 12. Thompson, Ann, Bodies of Thought: Science, Religion, and the Soul in the Early Enlightenment, Oxford University Press, 2008, p 133, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199236190
 13. Paul Harrison, Elements of Pantheism, 1999.
 14. Literary Remains of the Late Professor Theodore Goldstucker, W. H. Allen, 1879. p32.
 15. Collinge, William, Historical Dictionary of Catholicism, Scarecrow Press, 2012, p 188, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780810879799.
 16. McIntyre, James Lewis, Giordano Bruno, Macmillan, 1903, p 316.
 17. Genevieve Lloyd, Routledge Philosophy GuideBook to Spinoza and The Ethics (Routledge Philosophy Guidebooks), Routledge; 1 edition (2 அக்டோபர் 1996), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-10782-2, Page: 24
 18. Margot Adler, Drawing Down the Moon, Beacon Press, 1986.
 19. "Belief in God a 'product of human weaknesses': Einstein letter". CBC Canada. 2008-05-13. பார்க்கப்பட்ட நாள் 2011-08-31.
 20. Caritas In Veritate, 7 July 2009.
 21. Heaven and Nature, Ross Douthat, New York Times, 20 December 2009
 22. Herndon, William (4 பெப்ரவரி 1866). "Sold – Herndon's Revelations on Lincoln's Religion" (Excerpt and review). Raab Collection. பார்க்கப்பட்ட நாள் 5 ஜூன் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
 23. Plumptre, C.E., "General Sketch of the History of Pantheism", Samuel Deacon & Co., 1878, pp. 3-4
 24. http://www.pantheism.net/manifest.htm
 25. General Sketch of the History of Pantheism, p. 29.
 26. இந்து சமயத்தில் அனைத்து இறைக் கொள்கை

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனைத்து_இறைக்_கொள்கை&oldid=3583684" இலிருந்து மீள்விக்கப்பட்டது