அகாலி இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அகாலி இயக்கம்
நாள் 1920-1925
இடம் பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா)
இலக்கு சீக்கிய குருத்துவார்களின் கட்டுப்பாட்டை மரபுவழி சமயகுருக்களிடமிருந்தும் (உதாசி மகந்துகள்) அரசு நியமிக்கப்பட்ட மேலாளர்களிடமிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட சீக்கிய அமைப்புகளுக்கு மாற்றுதல்
முறை ஆர்ப்பாட்டங்களும் மனுக்களும் உள்ளிட்ட வன்முறையற்ற எதிர்ப்பு
முடிவு சீக்கிய குருத்துவாரா சட்டம் (1925) இந்தியாவிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சீக்கியக் கோயில்களை சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் செயற்குழுவின் கட்டுப்பாட்டில் வைத்தது
முரண்பட்ட தரப்பினர்
வழிநடத்தியோர்
கர்த்தார் சிங் ஜப்பார்
சுந்தர் சிங் யால்பூரி
தெகல் சிங் தஞ்சு
பூட்டா சிங் யால்பூரி
நாரயண் தாஸ்
Number
30,000 கைதாக வந்தனர்[1]
இழப்புகள்
400 உயிரிழப்பு, 2000 காயம்[1]

அகாலி இயக்கம் {Akali movement) அல்லது குருத்துவாரா சீர்திருத்த இயக்கம் 1920களில் இந்தியாவில் இருந்த குருத்துவாராக்களில் ( சீக்கிய வழிபாட்டிடங்கள்) சீர்திருத்தங்களை கொண்டுவருவதற்கான போராட்டம் ஆகும். இந்தப் போராட்டத்தின் விளைவாக 1925இல் சீக்கிய குருத்துவாரா சட்டம் இயற்றப்பட்டு இந்தியாவின் அனைத்து வரலாற்றுச் சிறப்புமிக்க சீக்கிய புனிதத்தலங்களும் சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் செயற்குழுவின் (எஸ்ஜிபிசி) கட்டுப்பாட்டில் மாற்றப்பட்டன.

அகாலிகள் பிரித்தானிய அரசுக்கு எதிராக இந்திய விடுதலை இயக்கத்திலும் பங்கேற்றது; ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவளித்தது.[2]

துவக்க கால போராட்டங்கள்[தொகு]

அகாலி என்ற சொல் சீக்கிய புனித நூல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அகால் என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும்; அகால் எனில் காலத்தை வென்றது, அழிவற்றது எனப் பொருளாகும். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிரித்தானிய இந்தியாவிலிருந்த பல சீக்கிய குருத்துவாராக்கள் உதாசி மகந்துகள் கட்டுப்பாட்டிலோ ஆளுநரால் நியமிக்கப்பட்ட மேலாளர்களின் கட்டுப்பாட்டிலோ இருந்தன.[3] மரபுவழி வந்த இவர்கள் மிகவும் செல்வாக்கு மிக்கவர்களாகவும் சடங்குகளைப் பின்பற்றுபவர்களாகவும் இருந்தனர். அகாலி இயக்கத்தின் முதன்மை நோக்கமே சீக்கிய குருத்துவாராக்களை இவர்களது கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பதுதான்.[4]

1920இல் சிங் சபாவின் அரசியல் பிரிவான அகாலி தளம் துவக்கியது. கர்த்தார் சிங் ஜப்பாரின் தலைமையில் சென்ற தன்னார்வலர்கள் (ஜாதாக்கள்) இதில் முதன்மைப் பங்காற்றினர். சியால்கோட்டிலிருந்த பாபா டி பெர் குருத்துவாராவில் முதன்முதலில் சீர்திருத்தம் துவங்கப்பட்டது. இங்கு காலம்சென்ற மகந்த் அர்னாம் சிங்கின் விதவை மனைவியின் கட்டுப்பாட்டில் குருத்துவாரா இருந்தது. அவரது வருமானத்திற்கான ஒரே வாய்ப்பாக இருந்த குருத்துவாராவை அகாலிகளுக்கு மாற்றிட துவக்கத்தில் எதிர்த்தார். பின்னர் ஓய்வூதியத் தொகை வழங்க முடிவான பின்னர் இணங்கினார்.[5] இந்த குருத்துவாராவின் கட்டுப்பாடு பாபா கரக் சிங்கின் தலைமையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவிற்கு மாற்றப்பட்டது.

அகாலிகளின் அடுத்த இலக்காக சீக்கியரின் மிகப் புனிதமான கோயிலான பொற்கோயில் (அர்மந்திர் சாகிபு) எடுத்துக்கொள்ளப்பட்டது. இக்கோயிலின் குருக்கள் கீழ்-சாதி இந்துக்களிலிருந்து சீக்கிய சமயத்தைத் தழுவியவர்களுக்கு கோயிலில் வழிபட அனுமதி மறுத்தார்.[6] கர்த்தார் சிங் ஜப்பார் கோயில் வளாகத்தினுள் உள்ள அகால் தக்த்திற்கு சென்று சாதிசார்ந்த கட்டுப்பாடுகளை கைவிட வேண்டும் என்றும் காலத்திற்கேற்ப சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சூன் 28, 1920இல் பொற்கோவில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவான சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் செயற்குழுவிற்கு மாற்றப்பட்டது.

ஆசன் அப்தாலில் உள்ள பஞ்சா சாகிபு குருத்துவாரா

அடுத்து, அகாலிகள் பஞ்சா சாகிபு குருத்துவாரா உள்ள ஆசன் அப்தாலிற்குச் சென்றனர். இங்கு குருத்துவாரா மகந்த் மித்தா சிங் வசம் இருந்தது. இவர் குருத்துவாராக்குள் புகைகுழல்களை விற்க அனுமதித்தார்; இதற்கு சீக்கியர்களிடம் எதிர்ப்பு எழுந்தது. கர்த்தார் சிங் ஜப்பார் தமது ஜாதாக்களுடன் சென்று நவம்பர் 20, 1920இல் குருத்துவாராவின் கட்டுப்பாட்டை மேற்கொண்டார். இருப்பினும், இந்த குருத்துவாராவில் வழிபட்டு வந்த உள்ளூர் இந்துக்கள் இந்த மாற்றத்தை எதிர்த்தனர். அகாலிகளுக்கு மாற்றப்படும் நாளின் இரவில் ஏறத்தாழ 5000-6000 மக்கள் குருத்துவாராவைச் சூழ்ந்து கொண்டனர்; ஆனால் காவல்துறை இவர்களை கலைத்தனர். மறுநாள் 200-300 இந்துப் பெண்கள் குருத்துவாராவில் அமர்ந்துகொண்டனர். இருப்பினும் இந்த குருத்துவாராவும் சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் செயற்குழுவின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்டது.[7]

அடுத்த இலக்காக சச்சா சவுதா குருத்துவாரா அகாலிகளின் கட்டுப்பாட்டில் வந்தது. இது தற்போதைய பாக்கித்தான் பகுதியில் சுகார் கானாவில் உள்ளது. அடுத்ததாக சிறீ தரண் தரண் சாகிபு குருத்துவாரா பக்கம் கவனத்தைத் திருப்பினர். இங்கிருந்த குருக்கள் நடனப் பெண்மணிகளை அனுமதித்ததாகவும் புகை பிடித்தலையும் மது அருந்துவதையும் கோயில் வளாகத்தில் அனுமதித்தாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. தவிரவும் இந்து சீர்திருத்த இயக்கமான ஆரிய சமாஜத்தின் கொள்கைகளைப் பரப்பியதாகவும் புகார் எழுந்தது. கர்த்தார் சிங் தலைமையிலான அகாலிகள் இங்கு வந்தடைந்து அர்தாசு எனப்படும் சீக்கிய வழிபாட்டை நடத்தினர்; குருத்துவாரா தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக அறிவித்தனர். உறங்கிக் கொண்டிருந்த அகாலிகளை குருக்கள் நாட்டு குண்டுகளையும் செங்கற்களையும் கொண்டு தாக்கினர்.[8] அடுத்த நாள், சுற்றுப்புறத்திலிருந்த சிற்றூர்களிலிருந்து வந்த சீக்கியர்கள் குருத்துவாராவை கைப்பற்றினர். இதன் பின்னர் கர்த்தார் சிங் தலைமையிலான அகாலிகள் மேலும் ஐந்து குருத்துவாராக்களை கைப்பற்றினர்.

அகாலிகளில் ஒருசிலர் அமைதியான முறையில் குருத்துவாராக்களை கட்டுக்குள் கொண்டுவர செய்த முயற்சிகளை எதிர்த்தனர். இவர்கள் வன்முறை செயல்கள் மூலம் குருத்துவாராக்களை கைக்கொள்ள பப்பார் அகாலி இயக்கம் என்ற பிரிவு இயக்கத்தை நிறுவினர்.[9]

மேற்சான்றுகள்[தொகு]

 1. 1.0 1.1 "India's Struggle for Freedom : Role of Associated Movements". All India Congress Committee. பார்த்த நாள் 2011-12-19.
 2. Raghbir Singh (1997). Akali movement, 1926-1947. Omsons. பக். 16. ISBN 978-81-7117-163-7. 
 3. H. S Singha (2000). The encyclopedia of Sikhism. Hemkunt Press. பக். 13. ISBN 978-81-7010-301-1. 
 4. Rajit K. Mazumder (2003). The Indian army and the making of Punjab. Orient Blackswan. பக். 213–218. ISBN 978-81-7824-059-6. 
 5. Mohinder Singh (1988). The Akali struggle: a retrospect (Volume 1). Atlantic. பக். 20. OCLC 59911558. 
 6. Harajindara Singha Dilagira; A. T. Kerr (1995). Akal Takht Sahib. Sikh Educational Trust and Sikh University Centre, Denmark. ISBN 978-0-9695964-1-7. 
 7. Tai Yong Tan (2005). The garrison state: the military, government and society in colonial Punjab 1849-1947. Sage. பக். 1935. ISBN 978-0-7619-3336-6. 
 8. S. S. Shashi (1996). Encyclopaedia Indica: India, Pakistan, Bangladesh. Anmol Publications. ISBN 978-81-7041-859-7. 
 9. Mukherjee, Mridula (2004-09-22). Peasants in India's non-violent revolution: practice and theory. SAGE. பக். 35–36. ISBN 978-0-7619-9686-6. http://books.google.com/books?id=y2AON_2SJI0C&pg=PA35. பார்த்த நாள்: 17 December 2011. 

மேலும் அறிய[தொகு]

 • Gurbakhsh Rai Sethi; Baron William Malcolm Hailey Hailey (1927). Sikh struggle for Gurdwara reform. Union press. OCLC 17772948. 
 • Teja Singh (2010). The Gurdwara Reform Movement and the Sikh Awakening. Nabu Press. ISBN 978-1-177-78853-3. 
 • M. L. Ahluwalia (1985). Gurdwara Reform Movement, 1919-1925, an era of Congress-Akali collaboration. Ashoka International Publishers. OCLC 17772948. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகாலி_இயக்கம்&oldid=2092824" இருந்து மீள்விக்கப்பட்டது