அகால் தக்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகால் தக்த்
ਅਕਾਲ ਤਖ਼ਤ ਸਾਹਿਬ
அகால் தக்த்
Map
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிசீக்கிய கட்டிடக்கலை
நகரம்அம்ரித்சர்
நாடுஇந்தியா

அகால் தக்த் (Akal Takht, பஞ்சாபி: ਅਕਾਲ ਤਖ਼ਤ, பொருள்: காலமில்லாதவரின் அரியணை [1] சீக்கிய சமயத்தின் ஐந்து தக்துகளில் (அரியணைகளில்) ஒன்றாகும். இது பஞ்சாபின் அம்ரித்சர் நகரத்தில் அர்மந்திர் சாகப் (பொற்கோயில்) வளாகத்தில் அமைந்துள்ளது. நீதி வழங்கலுக்காகவும் அரச விவகாரங்களுக்காகவும் அகால் தக்த்தை குரு அர்கோவிந்த் கட்டினார்; இவ்வுலகில் சீக்கிய சமூகத்தின் மிக உயர்ந்த அதிகார பீடமாகவும் சீக்கியர்களைப் பிரதிநிதிப்படுத்தும் ஜாதேதாரின் இடமாகவும் விளங்குகிறது. மீரி-பிரி எனப்படும் சீக்கியத் தத்துவத்தை அர்கோபிந்த் இங்குதான் வெளிப்படுத்தினார். மீரி எனப்படுவது அரசியல்/பொருளியல்நிலை தாக்கத்தையும் பிரி சமயத் தாக்கத்தையும் குறிக்கிறது; அகால் தக்த் மீரியையும் பொற்கோவில் பிரியையும் அடையாளப்படுத்துகின்றன.

வரலாறு[தொகு]

பொற்கோவிலும் தங்கக்கூரையுடனான அகால்தக்த்தும்.
அகால் தக்த்தின் உட்புறக் காட்சி
ஒளியூட்டப்பட்ட அகால் தக்த்
அகால் தக்த்தும் பொற்கோவிலும்

ஆறாவது சீக்கிய குருவான குரு அர்கோவிந்த், அரசியல் இறையாண்மையின் அடையாளமாகவும் சீக்கியர்களின் சமய/ உலகியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமிடமாகவும் இதனைக் கட்டினார். 1606இல் இவருடைய சிலை அகால் தக்த்தில் நிறுவப்பட்டது.[1]

18வது நூற்றாண்டில், அகமது ஷா துரானியும் மாசா ரங்காரும் அகால் தக்த் மீதும் பொற்கோயில் மீதும் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தினர்.[1] மகாராசா ரஞ்சித் சிங்கின் படைத்தலைவர் அரி சிங் நால்வா அகால் தக்த்திற்கு தங்கத்தால் கூரை வேய்ந்தார்.[2] சூன் 4, 1984இல் புளூஸ்டார் நடவடிக்கையின்போது இந்திய இராணுவம் சிறீ தர்பார் சாகிபினுள் நுழைந்தபோது அகால் தக்த் சேதமடைந்தது.

புளூஸ்டார் நடவடிக்கை[தொகு]

சூன் 6, 1984இல் இந்தியத் தரைப்படை அர்மந்திர் சாகப்பின் மீது தாக்குதல் நடத்தியபோது அகால் தக்த்தும் சேதமடைந்தது. ஜர்னைல் சிங் பிந்தரன்வாலா இந்த வளாகத்தில் ஆயுதங்களை சேமித்து வைத்ததாக குற்றம் சாட்டிய அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி இத்தாக்குதலை ஆணையிட்டார்.[3][4]

2005இல், இந்தியப் பிரதமர், மன்மோகன் சிங், கூறினார்:

"1984இல் நடந்த நிகழ்வுகள் நமது அரசியலமைப்பு வழங்கும் தேசியக் கோட்பாட்டிற்கு எதிரானது என்பதால் சீக்கிய சமூகத்திடம் மட்டுமன்றி முழுமையான நாட்டிடமே மன்னிப்புக் கேட்பதில் எனக்குத் தயக்கமேதுமில்லை. கடந்த காலத்தை பின்தள்ளுவோம். அதை மாற்ற முடியாது, ஆனால் நம்மால் வருங்காலத்தை படைக்க முடியும். நம் அனைவருக்கும் நல்ல வருங்காலத்தைப் படைக்க நமக்கு மனத்திண்மை வேண்டும்."[5]

மீள்-கட்டமைப்பு[தொகு]

சேதமடைந்த அகால் தக்த்தை அரசு மீண்டும் மீளமைக்கத் தொடங்கியது. இதனை ஏற்காத சீக்கியர்கள் புதிய கட்டிடத்தை சர்காரி தக்த் என அழைக்கலாயினர்; சீக்கிய உள்துறை அமைச்சர், பூட்டா சிங், புதிய கட்டிடத்தைக் கட்டியமைக்காக சீக்கிய சமூகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் அவர் பக்தர்களின் கலங்களையும் காலணிகளையும் கழுவி தமது தீச்செயலுக்கு மன்னிப்புக் கோரியபிறகே மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.[6]

1986இல் அமிர்தசரசின் சீக்கியர்கள் சர்காரி தக்த்தை இடித்து புதிய அகால் தக்த்தை மீண்டும் எழுப்ப தீர்மானித்தனர்; சீக்கிய மரபுப்படி கார் சேவா (புனித சேவை) மூலமாக கட்டப்பட்ட புதிய, பெரிய அகால் தக்த் 1995இல் கட்டப்பட்டது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Fahlbusch E. (ed.) "The encyclopedia of Christianity." Eerdmans, Grand Rapids, Michigan, 2008. ISBN 978-0-8028-2417-2
  2. Sohan Lal Suri. 19th century. Umdat-ut-tawarikh, Daftar III, Part 2, trans. V.S. Suri, (1961) 2002, Amritsar: Guru Nanak Dev University, f. 260
  3. "Akāl Takht" Britannica website. Accessed 5 January 2013.
  4. "Around Harmandir Sahib" பரணிடப்பட்டது 2013-01-06 at the வந்தவழி இயந்திரம் Shiromani Gurdwara Parbandhak Committee Accessed 5 January 2013
  5. "India: Bring Charges for Newly Discovered Massacre of Sikhs." Human Rights Watch 25 April 2011 Accessed 5 January 2013.
  6. "Buta" Rediff.com, March 1998.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
அகால் தக்த்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகால்_தக்த்&oldid=3352963" இலிருந்து மீள்விக்கப்பட்டது