அகரம் முத்தாலம்மன் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


அகரம் (தாடிக்கொம்பு) முத்தாலம்மன் கோவில்

மூலவர்: –முத்தாலம்மன்
உற்சவர்: கிளி ஏந்திய முத்தாலம்மன்
பழைமை: 500 முதல் 1000 ஆண்டுகள்
காவல் தெய்வங்கள்: பூதராசா, பூதராணி
பரிவார தேவதைகள்: விநாயகர், பாலமுருகன், சுரலிங்கேசுவரர், மகாலட்சுமி
தீர்த்தம்: குடகனாறு
வழிபாட்டு நேரம்: காலை 7 மணி முதல் 12 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
கோவில் விழாக்கள்: பிரம்மோத்சவம் ஐப்பசியில்,
ஆடி வெள்ளி, நவராத்திரி, திருக்கார்த்திகையன்று லட்சதீப வழிபாடு,
மார்கழி மாதம் முழுதும் விளக்கு பூசை,
சுரலிங்கேசுவரருக்கு சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிசேகம்.
அமைவிடம்: அகரம் (தாடிக்கொம்பு)
மாவட்டம்: திண்டுக்கல்
மாநிலம்: தமிழ்நாடு, இந்தியா

முத்தாலம்மன் கோவில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம், அகரம் (தாடிக்கொம்பு) என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.[1] இது 500 முதல் 1000ஆண்டுகள் பழைமையான கோவிலாகும். இது முத்தாலம்மனுக்காக ஏற்பட்ட முதல் கோவிலாகக் கருதப்படுகிறது. தமிழ் எழுத்துக்களில் அகரமே முதல் எழுத்து. எனவே இவ்வூர் முதல் முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ள ஊர் என்பதால் அகரம் என்று பெயர் பெற்றது என்கிறார்கள்.

முத்தாலம்மன் ஊர்க்கோவில[தொகு]

முத்தாலம்மன் சக்தி வாய்ந்த நாட்டுப்புற பெண் தெய்வமென்பது நம்பிக்கை. கொங்கு நாட்டில் எல்லா கிராமங்களிலும் முத்தாலம்மன் வழிபாடு பழங்காலத்திலிருந்தே மிகச் சிறப்பான ஒன்றாகப் போற்றப்படுகிறது. ஊர் மக்கள் வேறுபாடின்றி எல்லோரும் ஒன்று கூடி முத்தாலம்மனை வழிபடுவது மரபு. எனவே முத்தாலம்மன் கோவில்கள் ஊர்க்கோவிலகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.

தல வரலாறு[தொகு]

விஜயநகரப் பேரரசு கோலோச்சி இருந்த நாட்களில் சக்கராயர் என்ற வட இந்திய பக்தர் ஒருவர் தென்னிந்தியா நோக்கிப் புறப்பட்டு வந்தார். அவர் புறப்படுமுன் அவர் தினமும் வழிபட்டு வந்த அம்மனை நோக்கி ஒரு கேள்வியைக் கேட்டார், "அன்னையே நான் தென்னிந்தியாவிற்குச் செல்கிறேன். அங்கே எந்தக் கோவிலில் எப்படி வழிபடுவேன்?" அவர் வழிபட்டு வந்த அம்மனும் அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொன்னாள். "பக்தனே இங்கிருந்து சிறிது பிடி மண் எடுத்து உன்னுடன் கொண்டு செல். நீ எங்கே வைத்து என்னை வணங்க எண்ணுகிறாயோ அங்கே இந்தப் பிடிமண்ணை வைத்துவிட்டு என்னை மனமார வணங்கி அழைத்தால் நீ கூப்பிட்ட குரலுக்கு நிச்சயம் வருவேன்" என்று விரிவாகச் சொன்னாள். அய்யரும் கோவிலில் சிறிது மண் எடுத்துக் கொண்டு தெற்கே பயணமானார். திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகில் வந்ததும் தான் கொண்டு வந்த பிடி மண்ணை அங்கே வைத்து அதனருகில் ஒரு கல்லை நட்டு வழிபட்டு வந்தார். நாளடைவில் ஊர் மக்கள் அக்கோவிலுக்கு வந்து வணங்க ஆரம்பித்தார்கள். வேறொரு பக்தர் மூன்று அம்மன் சிலைகள் வடித்து கோவில் கட்டினார். இக்கோவிலின் அம்மனுக்கு முத்தாலம்மன் என்று பெயர் வழங்கலாயிற்று. இதுவே முத்தாலம்மனுக்குக் கட்டிய முதல் கோவிலாகும். குடகனாற்றின் மேற்கு கரையில் அமைந்த கோயில் இது.[2]

மூன்று அம்மன் சிலைகள்[தொகு]

இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என மூன்றையும் அருளும் மூன்று அம்பிகையர் கருவறையில் உள்ளனர். இம்மூவரும் நின்ற கோலத்தில் கைகளில் அட்சய பாத்திரம் ஏந்திய தவக்கோலத்தில் காட்சி தருகிறார்கள். எனவே இந்த அம்மன்களிடம் வரம் வேண்டியது வேண்டியவாறு கிடைக்கும். இப்பகுதி மக்களுக்கான பிரதான குலதெய்வ வழிபாட்டுத்தலம் இது. பவுர்ணமி நாட்களில் அம்பிகைக்கு விசேஷ பூஜை உண்டு.

பரிவார தேவதைகள்[தொகு]

கோவில் பிரகாரத்தில் முறையே விநாயகர், பாலமுருகன், மகாலட்சுமி ஆகிய பரிவார தேவதைகளுக்கு சன்னதிகள் உண்டு. முருகனுக்கு கிருத்திகை நாட்களில் சிறப்பு பூசைகள் உண்டு. குரு, சனிப்பெயர்ச்சி காலங்களில் கிரக பரிகாரங்கள் நடக்கும்.

காவல் தெய்வங்கள்: பூதராசா, பூதராணி[தொகு]

கோவிலில் கருவறைக்கு இரு பக்கங்களிலும் பூதராசா, பூதராணி ஆகிய காவல் தெய்வங்கள் உள்ளனர். இந்த கோவிலில் முறையாக விழா துவங்க, பூதராணியிடம் உத்தரவு வேண்டுகிறார்கள். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற, புதிதாகச் செயல் தொடங்க, நிலம், வீடு குறித்த பிரச்னைகள் தீர பூதராசாவிடம் வேண்டுகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் பூதராசா முன் நின்று கொண்டு, தங்கள் வேண்டுதல்களைச் சொல்வர். அந்த சமயம், பல்லி சப்தமிட்டால் அதை தங்களுக்கு அம்பிகை இட்ட உத்தரவாகக் கருதி அச்செயலை தொடங்குகின்றனர். இந்த நேரத்தில் கோயில் வளாகத்தில் வேறு இடத்திலோ, பூதராணியிடமிருந்தோ சத்தம் கேட்டால் அச்செயலை தள்ளிப் போட்டு விடுகின்றனர். அம்பாள் சன்னதியில் பூ கட்டிப் போட்டு உத்தரவு கேட்கும் வழக்கமும் உண்டு.

வேண்டுதல்கள்[தொகு]

குழந்தை பாக்கியம் வேண்டி வேண்டுதல்கள்[தொகு]

குழந்தை பாக்கியம் வேண்டி முத்தாலம்மன் சன்னதியில் ஐந்து எலுமிச்சை மற்றும் பூசு மஞ்சளுடன் வந்து வழிபடுகின்றனர். அர்ச்சகர்கள் அதை அம்மன் பாதத்தில் வைத்து வேண்டிப் பூசித்து, ஒவ்வொன்றிலும் மூன்றை மட்டும் பிரசாதமாகத் தருவார். எலுமிச்சையை சாப்பிட்டும், மஞ்சள் கிழங்கை தேய்த்து குளித்து வர குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களிடையே நிலவும் நம்பிக்கை.

சுரலிங்கேசுவரர்[தொகு]

இந்த தல விநாயகருக்கு “அருள்ஞானசுந்தர மகாகணபதி” என்று பெயருண்டு. நேர்த்திக்கடனாக தேங்காய் மாலை அணிவித்து வேண்டுதல் செய்து கொள்பவர்களுக்கு திருமணத்தடை அகல்கிறதாம். அன்னை விசாலாட்சி சமேத சுரளிங்கேச்வரர் சன்னதியில் உள்ள சிவலிங்கத்தில் நான்கு புறமும் நான்கு முகங்கள் உள்ளது. இவருக்கு பிரதோஷ வழிபாடும் ஐப்பசி பௌர்ணமி தினங்களில் அன்னாபிசேகமும் நடைபெறும்.

கோவில் விழாக்கள்[தொகு]

பிரம்மோத்சவம் ஐப்பசியில் , ஆடி வெள்ளி, நவராத்திரி, திருக்கார்த்திகையன்று லட்சதீப வழிபாடு, மார்கழி மாதம் முழுதும் விளக்கு பூசை, சுரலிங்கேசுவரருக்கு சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிசேகம்.

மேற்கோள்கள்[தொகு]