உள்ளடக்கத்துக்குச் செல்

வெடிப்பதிர்வு கடத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெடிப்பதிர்வு கடத்தி (Detonating cord, detonation cord, detacord, det. cord, detcord, primer cord அல்லது sun cord) என்பது உயர் ஆற்றல் வெடிமருந்துத் தொகுதிகளுக்கிடையில் அதிர்வைக் கடத்தப் பயன்படுத்தப்படும் நெகிழ் திறனுள்ள மெல்லிய குழாய் வடிவக் கடத்தி ஆகும்.

பல வெடிமருந்துத் தொகுதிகளை ஒரே வெடித்தல் தொடக்கத்தைக் கொண்டு வெடிக்க வைப்பதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. ஓரிடத்தில் கெற்பு மூலம் வெடித்தலைத் தொடங்கி ஏனைய தொகுதிகளுக்கு வெடிப்பதிர்வைக் கடத்துவதன் மூலம் அனைத்துத் தொகுதிகளையும் கெற்பின்றியே வெடிக்க வைக்கலாம்.

செயற்பாடு

[தொகு]

வெடிப்பதிர்வு கடத்தியின் உறைக்குள் மையத்தில் உயர்சக்தி வெடிமருந்து தூள்வடிவில் அடைக்கப்பட்டிருக்கும். கடத்தி நெகழ்தன்மையுடையதாய் இருக்க வேண்டுமென்பதால் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக PETN எனும் உயராற்றல் வெடிமருந்தே வெடிப்பதிர்வு கடத்திகளிற் பயன்படுத்தப்படுகிறது. வெடிப்பதிர்வு கடத்தியின் ஓரிடத்தில் கிடைக்கும் வெடிப்பதிர்வினால் கடத்தியினுள் உள்ள உயராற்றல் வெடிமருந்து வெடிக்கிறது. இந்த அதிர்வு அக்கடத்தியுடன் தொடுகையுற்றுள்ள வெடிமருந்துத் தொகுதிகளுக்கும் கிடைக்கிறது. அவ்வெடிப்பதிர்வு அத்தொகுதிகளை வெடிக்கச் செய்கிறது.

பயன்பாடு

[தொகு]

ஒன்றுக்கு மேற்பட்ட வெடிமருந்துத் தொகுதிகளை ஒரேயடியாக வெடிக்கச் செய்ய வேண்டிய சந்தர்ப்பங்களில் இக்கடத்தி பயன்படுத்தப்படுகிறது.

இதைவிட ஊக்கி வெடிமருந்தாகவும் வெடிப்பதிர்வு கடத்தி பயன்படுத்தப்படுகிறது. அதாவது உணர்திறன் குறைந்த உயர்சக்தி வெடிமருந்துகளின் (எ.கா: TNT) தாக்கத்தை அதிகரிப்பதற்கு உணர்திறன் கூடிய வெடிமருந்துகள் ஊக்கியாகப் பயன்படுத்தப்படுவதுண்டு. அவ்வகையில், சுருட்டி முடிச்சாகக் கட்டப்பட்ட வெடிப்பதிர்வு கடத்தி ஊக்கியாகப் பயன்படத்தப்படும் சந்தர்ப்பங்களுமுண்டு.

திரிக்கும் கடத்திக்குமான வேறுபாடு

[தொகு]

திரி என்பது ஒரு முனையில் கிடைக்கும் நெருப்புப் பொறியை மறுமுனைவரைக் கடத்துவது. இதன் மையத்தில் இருக்கும் எரிமருந்து எரிந்து அத்தீப்பொறியைக் கடத்தும். ஆனால் வெடிப்பதிர்வு கடத்தி, தான் வெடித்து அதன்மூலம் வெடிப்பதிர்வைக் கடத்தும்.

வெளிப்பார்வைக்கு திரியும் வெடிப்பதிர்வுக் கடத்தியும் ஒன்றாகத் தோற்றமளிக்கும். நெகிழ்திறன், பருமன், வெளியுறையின் நிறங்கள் என்பவற்றைக் கொண்டு இரண்டையும் வேறுபடுத்த முடியாது. மாறாக இவற்றின் குறுக்குவெட்டுமுகப் பரப்பைப் பார்த்தே வேறுபடுத்த முடியும். திரியின் குறுக்குவெட்டுமுகப் பரப்பின் மையத்திலுள்ள மருந்து கரிய நிறத்தில் இருக்கும் அதேவேளை வெடிப்பதிர்வு கடத்தியின் மையத்திலுள்ள மருந்தின் நிறம் வெள்ளை நிறத்திலிருக்கும்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெடிப்பதிர்வு_கடத்தி&oldid=2390922" இலிருந்து மீள்விக்கப்பட்டது