நீலகிரி சின்ன வானம்பாடி
நீலகிரி சின்ன வானம்பாடி (அறிவியல் பெயர்: Alauda gulgula australis) என்பது சின்ன வானம்பாடியின் துணையினம் ஆகும்.[1] இப்பறவை தென்னிந்தியாவின், நீலமலைப் பகுதிகளில் காணப்படுகிறது.
விளக்கம்
[தொகு]நீலகிரி சின்ன வானம்பாடியானது சிட்டுக்குருவி அளவில் சுமார் 15 செ. மீ. நீளம் இருக்கும். இதன் அலகு கொம்பு நிறமான பழுப்பு நிறத்திலும், கால்கள் பழுப்புத் தோய்ந்த ஊன் நிறத்திலும் இருக்கும். இதன் உடல் சிவப்புத் தோய்ந்த மஞ்சள் நிறமாக இருக்கும். உடலின் மேற்பகுதியில் தடித்த கருத்த கோடுகள் காணப்படும். இதன் புறவால் இறகுகள் வெண்மையாக இருக்கும். இதன் பொதுத் தோற்றம் நெட்டைக்காலியின் தோற்றத்தை ஒத்தது எனினும் பருத்த தோற்றமும் குறுகிய வாலும் கொண்டு இதனை எளிதாக வேறுபடுத்தி அறிய இயலும்.[2]
பரவலும் வாழிடமும்
[தொகு]நீலகிரி சின்ன வானம்பாடியானது தென்னிந்தியாவின், நீலமலை சார்ந்த பகுதிகளை ஒட்டிய விளை நிலங்களிலும், பல்வெளியான மலைப் பள்ளத்தாக்குகளிலும் காணப்படுகின்றது. வடக்கு கருநாடகம், ஆந்திரம், தமிழ்நாடு முதலிய பகுதிகளில் Alauda gulgula australis gulgula என்ற அறிவியல் பெயரால் குறிப்பிடப்படும் துணையினம் இப்பறவைக்கு பதிலாகக் காணப்படுகிறது.[2]
நடத்தை
[தொகு]நீலகிரி சின்ன வானம்பாடி பறவையானது இணையாகவோ சிறு கூட்டமாகவோ புல் வெளிகளில் இரைதேடக்கூடியது. ஈரம் மிகுந்த புல்வெளிகளிலும் குளங்கள் வாய்க்கால் கரைகள் ஆகியவற்றைச் சார்ந்த பகுதிகளில் புழு பூச்சிகளைப் பிடித்துத் தின்பதோடு புல்விதைகளையும் உண்ணும்.[2]
ஆண் பறவையானது உயரப் பறந்து இறக்கை அடித்தபடி வானில் மிதந்து தொடர்ந்து பத்து நிமிடங்கள் வரை இனிய குரலில் பாடும். அவ்வாறு பாட மிக உயரத்திற்கு செல்லும் இது ஒரு புள்ளி போல தோற்றம் தரும். ஆண்டு முழுவதும் இ்வ்வாறு பாடும் என்றாலும் இனப்பெருக்க காலத்தில் அடிக்கடி இவ்வாறு செய்யும். இவை நவம்பர் முதல் மே முடிய இனபுபெருக்கத்தில் ஈடுபடுகின்றன. சிறு புதர்கள், புல்தூறுகள் போன்றவற்றின் ஓரமாகத் தரையில் குழியில் புற்களைக் கொண்டு கோப்பை போல கூடமைக்கும். அதில் இரண்டு முதல் நான்கு வரையில் முட்டைகளை இடும். இதன் முட்டைகள் மஞ்சள் தோய்ந்த வெண்மையாக ஊதாப் பழுப்பான கறைகளோடுமு புள்ளிகளோடும் காட்சியளிக்கும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "IOC World Bird List 6.4". IOC World Bird List Datasets. doi:10.14344/ioc.ml.6.4. http://www.worldbirdnames.org/ioc-lists/crossref.
- ↑ 2.0 2.1 2.2 2.3 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. p. 341.