புரியும்திறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொழியியலில் புரியும்திறன் (Mutual intelligibility) என்பது, மொழிகள் அல்லது கிளைமொழிகளுக்கு இடையேயான தொடர்பைக் குறிக்கிறது. இது, வேறுபட்ட ஆனால் தொடர்புள்ள வகை மொழிகளைப் பேசுவோர், முற் பழக்கம் இல்லாமல் அல்லது சிறப்பு முயற்சி எதுவும் செய்யாமல் ஒருவர் பேசுவதை மற்றவர் புரிந்துகொள்ளும் அளவைக் குறிக்கும். பெரும்பாலும் சமூகமொழியியல் காரணிகளும் பயன்படுத்தப்பட்டாலும், சிலவேளைகளில் மொழிகளையும், கிளைமொழிகளையும் வேறுபடுத்துவதற்கான அளவுகோலாகப் புரியும்திறனும் பயன்படுகிறது.

மொழிகளுக்கு இடையிலான புரியும்திறன் சமச்சீரற்றதாக இருக்கக்கூடும். அதாவது, ஒரு மொழியைப் பேசுபவர் இன்னொரு மொழியைப் புரிந்துகொள்வதைவிட, இரண்டாவது மொழியைப் பேசுபவர் முதல் மொழியைக் குறைவாகவே புரிந்துகொள்ளக்கூடும். இது தொடர்புள்ள அல்லது புவியியல் அடிப்படையில் அண்மையில் உள்ள மொழிகளுக்கிடையே, பெரும்பாலும் கிளைமொழித் தொடர்மச் சூழலில், வெவ்வேறு அளவுகளில் காணப்படுகிறது.

பரஸ்பரம் புரிந்துகொள்ளக்கூடிய மொழிகள் அல்லது ஒரு மொழியின் வகைகள்[தொகு]

இரண்டு தனித்தனி மொழிகளையும், ஒரே மொழியின் இரண்டு வகைகளையும் வேறுபடுத்துவதற்கான முறையான வழிமுறை எதுவும் கிடையாது. ஆனால், இரண்டையும் பிரித்தறிவதற்கு, மொழியியலாளர்கள், புரியும்திறனை முதன்மைக் காரணியாகப் பயன்படுத்துகின்றனர்.[1][2]

மொழிகளையும் கிளைமொழிகளையும், வேறுபடுத்துவதற்கு முதன்மை அளவுகோல் புரியும்திறனே எனச் சில மொழியியலாளர்கள்[3] கூறுகின்றனர். அதேவேளை, ஒன்றுடன் ஒன்று நெருக்கமான தொடர்புள்ள மொழிகளைப் பேசுவோர் பெரும்பாலும் தமக்குள் ஒருவர் பேசுவதை மற்றவர் ஓரளவு புரிந்துகொள்ளக்கூடியவர்களாக இருப்பதுடன், புரியும்திறன் வெவ்வேறு அளவுகளிலும் காணப்படுகிறது. இதனால், இந்த நோக்கத்துக்கு வேறு அளவுகோல்களும் பயன்படுத்தப்படுகின்றன. படிப்படியாக வேறுபட்டுச் செல்லும் வகைகளைக் கொண்ட நீள்வகைக் கிளைமொழித் தொடர்மங்களை எடுத்துக்கொண்டால், நடுவில் உள்ள மொழி பேசுவோர் இரு முனைகளிலும் உள்ள வகைகளைப் புரிந்துகொள்வர். ஆனால், ஒரு முனையில் உள்ள வகையைப் பேசுபவர் மறு முனையில் உள்ள வகையைப் புரிந்துகொள்ளமாட்டார். எனினும், ஒரு முனையிலிருந்து மறு முனை வரையான எல்லா வகைகளும் பெரும்பாலும் ஒரே மொழியாகவே கொள்ளப்படுகின்றன. நடுவில் உள்ள வகை அழிந்து, முனைகளில் உள்ளவை மட்டும் எஞ்சியிருந்தால், மொழிமாற்றம் எதுவும் ஏற்படாது இருந்தாலும், அவை தனித்தனி மொழியாகக் கொள்ளப்படும்.

புரியும்திறனைப் பின்தள்ளி அரசியல், சமூக நடைமுறைகள் முன்னுரிமை பெறுவதுண்டு. எடுத்துக்காட்டாக, புவியியல் அடிப்படையில் பிரிந்திருக்கும் வகைகளிடையே புரியும்திறன் இல்லாத போதிலும், சீன மொழி வகைகள் பெரும்பாலும் ஒரே மொழியாகவே கொள்ளப்படுகின்றன. இதற்கு முரணாக, வெவ்வேறு இசுக்கன்டினேவிய மொழிகளிடையே குறிப்பிடத்தக்க புரியும்திறன் இருந்தபோதிலும், ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான பொது வடிவங்கள் இருப்பதால் அவை வெவ்வேறு மொழிகளாகக் கொள்ளப்படுகின்றன.

சமச்சீரற்ற புரியும்திறன்[தொகு]

சமச்சீரற்ற புரியும்திறன் என்பது, பகுதியாக ஒன்றுக்கொன்று புரியும்திறன் கொண்ட இரண்டு மொழிகளில், ஒரு மொழி பேசுவோர் மற்ற மொழியைப் புரிந்துகொள்வதை விட, எதிர்த் திசையில் புரிந்துகொள்வது கடினமாக இருப்பதைக் குறிக்கும். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். எடுத்துக்காட்டாக, தொடர்புள்ள இரு மொழிகளுள் ஒன்றின் இலக்கணம் எளிமையாகி இருக்கலாம். இதனால், மற்ற மொழி எளிமையான இலக்கணம் கொண்ட மொழியைப் புரிந்துகொள்ளக்கூடும். ஆனால், எளிமையான மொழியைப் பேசுவோர் மற்ற மொழியைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கும். எடுத்துக்காட்டாக, ஆப்பிரிக்கான்சு மொழியைப் பேசுபவர்கள் டச்சு மொழியைப் புரிந்துகொள்வதிலும், டச்சு மொழி பேசுவோர் எளிமையாக்கப்பட்ட இலக்கணத்தைக்கொண்ட ஆப்பிரிக்கான்சு மொழியைப் புரிந்துகொள்வது இலகு.

ஒரு வகையைப் பேசுவோர், இரண்டாவது வகையைப் பேசுவோரைவிட மற்ற வகையுடன் பழக்கம் கொள்வதற்கு வாய்ப்புக்கள் இருப்பது சமச்சீரற்ற புரியும்திறனுக்கான மிகப் பொதுவான காரணம் ஆகும். எடுத்துக்காட்டாக, இசுக்காட்டிய ஆங்கிலம் பேசுவோர், திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்பவற்றினூடாகப் பொது அமெரிக்க ஆங்கிலத்துக்குப் பழக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அமெரிக்க ஆங்கிலம் பேசுவோருக்கு இசுக்காட்டிய ஆங்கிலத்துக்குப் பழக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவு. இதனால், இசுக்காடிய ஆங்கிலம் பேசுவோர் பொது அமெரிக்க ஆங்கிலத்தைப் புரிந்துகொள்வதைவிடக் குறைவாகவே அமெரிக்க ஆங்கிலம் பேசுவோர் இசுக்காட்டிய ஆங்கிலத்தைப் புரிந்துகொள்கின்றனர். தமிழ்நாட்டுப் பொதுத் தமிழுக்கும், இலங்கைத் தமிழுக்கும் இடையே காணப்படும் சமச்சீரற்ற புரியும் திறனுக்கும் இதே காரணம் பொருந்தும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Gröschel, Bernhard (2009). Das Serbokroatische zwischen Linguistik und Politik: mit einer Bibliographie zum postjugoslavischen Sprachenstreit [Serbo-Croatian Between Linguistics and Politics: With a Bibliography of the Post-Yugoslav Language Dispute]. Lincom Studies in Slavic Linguistics ; vol 34 (in German). Munich: Lincom Europa. pp. 132–136. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-929075-79-3. LCCN 2009473660. இணையக் கணினி நூலக மைய எண் 428012015. திற நூலக எண் 15295665W.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. Kordić, Snježana (2010). Jezik i nacionalizam [Language and Nationalism] (PDF). Rotulus Universitas (in Serbo-Croatian). Zagreb: Durieux. pp. 101–108. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-953-188-311-5. LCCN 2011520778. இணையக் கணினி நூலக மைய எண் 729837512. திற நூலக எண் 15270636W. Archived from the original (PDF) on 8 July 2012. பார்க்கப்பட்ட நாள் 3 August 2014. {{cite book}}: Unknown parameter |deadurl= ignored (help)CS1 maint: unrecognized language (link)
  3. See e.g. P.H. Matthews, The Concise Oxford Dictionary of Linguistics, OUP 2007, p. 103.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரியும்திறன்&oldid=2749409" இலிருந்து மீள்விக்கப்பட்டது