கிளைமொழித் தொடர்மம்
கிளைமொழித் தொடர்மம் (dialect continuum) அல்லது கிளைமொழிச் சங்கிலி (dialect chain) என்பது, சில புவியியல் பகுதிகளில் பேசப்படும் மொழி வகைகளின் பரம்பலைக் குறிக்கும். இதில், அண்மையில் அமையும் வகைகள் மிகக் குறைவான வேறுபாடுகளைக் கொண்டிருக்கும். தூரம் அதிகரிக்கும்போது, வேறுபாடுகள் அதிகமாக இருக்கும், நீண்ட தொலைவினால் பிரிக்கப்பட்டிருக்கும் மொழிகளுக்கிடையே புரியும்திறன் இல்லாதிருக்கும். இந்நிலைமைக்கு எடுத்துக்காட்டாக இந்திய-ஆரிய மொழிகளைப் பேசும் இந்தியாவின் சில பகுதிகளையும்; மேற்கு ஆப்பிரிக்காவில் மத்திய பெனின், கிழக்கு டோகோ, நைஜீரியா என்பவற்றுக்கு இடைப்பட்ட பகுதிகளையும்; மக்ரெப் பகுதியையும் கொள்ளலாம். வரலாற்றில், போர்த்துக்கல், தென் பெல்ஜியம் (வல்லோனியா), தென் இத்தாலி ஆகியவற்றுக்கு இடையிலான பகுதி; பிளான்டர்சுக்கும், ஆசுத்திரியாவுக்கும் இடைப்பட்ட பகுதி போன்ற ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் இது நிகழ்ந்துள்ளது. லென்னர்ட் புளூம்ஃபீல்ட் இதற்குக் கிளைமொழிப் பகுதி என்னும் பெயரைப் பயன்படுத்தினார்.[1] சார்லசு எஃப். ஒக்கட் இதை L- தொகுதி என்றார்.[2]
புத்தாக்கங்கள் அவை தொடங்கிய இடத்தில் இருந்து அலை வடிவில் பரவுவதால், கிளைமொழித் தொடர்மங்கள் பொதுவாக நீண்டகாலம் ஓரிடத்தில் வாழும் வேளாண் மக்களின் பகுதிகளில் காணப்படுகிறது. இவ்வாறான நிலைமைகளில், வகைகளின் படிமுறை வகைப்பாடு நடைமுறைச் சாத்தியமானது அல்ல. பதிலாக, கிளைமொழியியலாளர்கள் கிளைமொழித் தொடர்மப் பகுதியில் காணப்படும் பல்வேறு மொழி அம்சங்களின் வேறுபாடுகளை, இந்த அம்சங்கள் வேறுபடும் பகுதிகளுக்கு இடையில் "வழக்கெல்லைக்கோடு" என அழைக்கப்படும் கோட்டை வரைவதன் மூலம் நிலப்படத்தில் குறிக்கின்றனர்.[3]
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து, தேசிய அரசுகளின் முக்கியத்துவம் மேலோங்கி அவற்றின் பொதுமொழி, கிளைமொழித் தொடர்மத்தை உருவாக்கியிருந்த பொதுமொழி அல்லாத பிற கிளைமொழிகளை அகற்றியதால், எல்லைகள் சடுதியானவையாகவும், தெளிவாக வரையறுக்கப்பட்டவையாகவும் காணப்படுகின்றன.
கிளைமொழிப் புவியியல்
[தொகு]கிளைமொழியியலாளர்கள், வெவ்வேறு அம்சங்கள் தொடர்பான வேறுபாடுகளை நிலப்படங்களில் பதிவு செய்கின்றனர். இவ்வாறான நிலப்படங்களைச் சேர்த்து மொழியியல் நிலப்படநூல் உருவாக்கப்படுகிறது. முதன் முதலாக 1888 இல், பள்ளி ஆசிரியர்களிடம் நடத்திய அஞ்சல்வழி ஆய்வை அடிப்படையாகக் கொண்டு, ஜார்ஜ் வெங்கர் என்பவர் செருமன் கிளைமொழிகளுக்கான நிலப்படநூலொன்றை வெளியிட்டார். 1902-1910 காலப்பகுதியில் வெளியான "பிரான்சு மொழியியல் நிலப்படநூல்" பயிற்றப்பட்ட களப்பணியாளர்களைப் பயன்படுத்துவதில் முன்னோடியாக விளங்கியது.[4]
இரண்டாம் நிலை ஆய்வுகள், பல்வேறு மாற்றுருவங்களின் பரம்பலைக் காட்டும் விளக்க நிலப்படங்களை உள்ளடக்கக்கூடும்.[5] இந்த நிலப்படங்களில் காணப்படும் பொதுவான அம்சம் "வழக்கெல்லைக்கோடு" ஆகும். இது, குறித்த அம்சம் ஒன்றின் வேறுபட்ட மாற்றுருவங்கள் வலுப்பெற்றுக் காணப்படும் பகுதிகளை வேறுபடுத்திக் காட்ட வரையப்படுகிறது.[6]
கிளைமொழித் தொடர்மம் ஒன்றில், வகைகளுக்கிடையே படிப்படியான மாற்றத்தை வெளிப்படுத்தும் விதமாக, வழக்கெல்லைக்கோடுகள் பரந்து காணப்படும்.[7] பல அம்சங்களின் வழக்கெல்லைக்கோடுகள் ஒன்றன்மேலொன்று அமைவது, வலுவான கிளைமொழி எல்லையைக் குறிக்கும். இது, புவியியல் தடைகளின்மீதோ, நீண்ட காலம் இருக்கும் அரசியல் எல்லைகளின்மீதோ ஏற்படலாம்.[8] பிற இடங்களில் ஒன்றையொன்று வெட்டும் வழக்கெல்லைக் கோடுகளும், சிக்கலான வடிவங்களும் காணப்படலாம்.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bloomfield, Leonard (1935). Language. London: George Allen & Unwin. p. 51.
- ↑ Hockett, Charles F. (1958). A Course in Modern Linguistics. New York: Macmillan. pp. 324–325.
- ↑ Chambers, J.K.; Trudgill, Peter (1998). Dialectology (2nd ed.). Cambridge University Press. pp. 13–19, 89–91. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-59646-6.
- ↑ Chambers and Trudgill (1998), pp. 15–17.
- ↑ Chambers and Trudgill (1998), p. 25.
- ↑ Chambers and Trudgill (1998), p. 27.
- ↑ Chambers and Trudgill (1998), pp. 93–94.
- ↑ Chambers and Trudgill (1998), pp. 94–95.
- ↑ Chambers and Trudgill (1998), pp. 91–93.