மரபணு செயலிழக்கமான சுண்டெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முடி வளர்ச்சிக்கான ஒரு மரபணு செயலிழக்கமாக்கப்பட்ட ஆய்வக சுண்டெலி (இடது). வலதுபுறத்தில் சாதாரணச் சுண்டெலி ஒப்பீட்டிற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது.
மரபணு செயலிழக்கமான எலி.

மரபணு செயலிழக்கமான சுண்டெலி (Knockout mouse) என்பது மரபணுவியல் ஆய்வுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு மரபணு மாற்றப்பட்ட சுண்டெலி ஆகும். பொதுவாகச் சுண்டெலியின் ஒரு மரபணு செயலிழக்க வைக்கப்பட்டு அல்லது வேறு ஒரு மரபணுவால் பிரதியீடு செய்யப்பட்டு அல்லது இடையூறு செய்யப்பட்டு இருக்கும். ஒரு குறிப்பிட மரபணுவில் நிகழ்த்தப்படும் மாற்றம் சுண்டெலியில் எத்தகைய தோற்ற, உடல், நடத்தை விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது ஆய்வு செய்யப்படும். மனிதருக்கும் சுண்டெலிக்கும் பல மரபணுகள் ஒன்றாக இருப்பதால் மனிதர் மரபணு தொடர்பான பல்வேறு ஆய்வுகளின் தொடக்க நிலைக்கு மரபணு மாற்றப்பட்ட சுண்டெலிகள் பயன்படுகின்றன.

செயற்பாடுகள் இதுவரை அறியப்படாத, வரிசைமுறை செய்யப்பெற்ற மரபணுவின் பணிகளைக் குறித்து அறிந்து கொள்ள மிகவும் பயனுள்ள விலங்கு மாதிரிகளாக இத்தகு மரபணு செயலிழக்கமான சுண்டெலிகள் உபயோகப்படுகின்றன. மனிதரின் உடலியங்கியல், நோயியல் ஆகிய துறைகளில் ஒரு குறிப்பிட்ட மரபணுவின் பங்களிப்பைக் குறித்து ஆய்வு செய்வதற்கு இவை பரவலாகப் பயன்படுகின்றன.

மரியோ கபெச்சி, மார்ட்டின் ஈவான்சு, ஆலிவர் சுமித்தீசு ஆகியோர் முதன்முதலாக பதிவு செய்யப்பெற்ற மரபணு செயலிழக்கமான சுண்டெலியை 1989 ஆம் ஆண்டு உருவாக்கினார்கள். இதற்காக 2007 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசினைப் பகிர்ந்து கொண்டார்கள்[1]. மரபணு செயலிழக்கமான சுண்டெலிகளை உருவாக்கும் தொழில்நுட்பக்கூறுகளுக்கும், அவ்வாறு உருவாக்கப்பட்ட சுண்டெலிகளுக்கும் பல நாடுகளில் தனியார் நிறுவனங்கள் ஆக்கவுரிமை பெற்றுள்ளன.

மரபணு செயலிழக்கமான எலிகளை உருவாக்குவது மிகவும் கடினமான செயலாக உள்ளது. 2003 ஆம் ஆண்டு முதல் மரபணு செயலிழக்கமான எலிகளை உருவாக்குவது சாத்தியமானதாக உள்ளது[2][3].

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/2007/
  2. Helen R. Pilcher (2003-05-19). It's a knockout. Nature. doi:10.1038/news030512-17. http://www.nature.com/news/1998/030512/full/news030512-17.html. பார்த்த நாள்: 2014-04-03. 
  3. "Y Zan et al., Production of knockout rats using ENU mutagenesis and a yeast-based screening assay, Nat. Biotechnol. (2003)" (PDF). Archived from the original (PDF) on 2010-06-11. பார்க்கப்பட்ட நாள் 2016-08-12.