விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மே 13, 2012

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோலாலம்பூர், மலேசியாவின் தலைநகரம் ஆகும். மலேசியத் தீபகற்பத்தின் மத்திய மேற்குக் கடலோரத்தில் அமைந்துள்ள கோலாலம்பூர் சிலாங்கூர் மாநிலத்தால் சுற்றிவர சூழப்பட்டுள்ளது. இது மலேசியாவின் மூன்று நடுவண் ஆட்சிப் பகுதிகளில் ஒன்று. இந்நகரவாசிகள் கேலைட்சுகள் என பொதுவழக்கில் குறிப்பிடப்படுகின்றனர். 243 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள இந்த நகரின் மக்கள் தொகை 1.6 மில்லியன் ஆகும். மலேசியாவின் நாடாளுமன்றமும் மலேசிய மன்னர் யங் டி-பெர்துவன் அகோங்கின் அரண்மனையான ஸ்தான நகராவும் இங்கு உள்ளன. 1990கள் முதல் இந்நகரில் பல பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகள், அரசியல் மாநாடுகள், பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இங்குள்ள பெட்ரோனாஸ் கோபுரங்கள் உலகின் ஆக உயரமான இரட்டைக் கோபுரங்களாக இருந்து வருகின்றன. மேலும் 20 ஆம் நூற்றாண்டின் ஆக உயர்ந்த கட்டிடமாகப் பதிவு பெற்றிருப்பதும் இதுவேயாகும். . மேலும்...


தாமசு மாண், 1929ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு பெற்ற தலைசிறந்த செருமானிய புதினப் படைப்பாளர் ஆவார். அவர் ஆக்கிய பல புதினங்களும் குறியீட்டு முறையிலும் முரணான முறையிலும் காப்பிய வகையில் உருவாக்கப்பட்டவை ஆகும். தாமசு மாண் செருமானிய, விவிலிய வரலாறுகளை அடிப்படையாகக் கொண்டும், செருமானிய அறிஞர்களாகிய யோஹான் வோல்ஃப்காங் ஃபோன் கேத்தே, பிரீட்ரிக் நீட்சே, ஆர்த்தர் ஷோப்பனாவர் போன்றோரின் சிந்தனைவழி தொடர்ந்தும், அவற்றை நவீனப்படுத்தி, ஐரோப்பிய, செருமானிய கலாச்சாரத்தைப் பகுப்பாய்வு செய்து விமர்சிக்கின்றார். அடோல்ஃப் ஹிட்லர் செருமனியில் பதவியைப் பிடித்தபோது, தாமசு மாண் செருமனியை விட்டு சுவிட்சர்லாந்துக்குத் தப்பிச் சென்றார். 1939இல் இரண்டாம் உலகப் போர் வெடித்த கட்டத்தில் ஐக்கிய அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தார். 1952ஆம் ஆண்டு அங்கிருந்து சுவிட்சர்லாந்துக்குத் திரும்பினார். தாமசு மாண் "நாடுகடத்தப்படுநிலை இலக்கியம்" என்னும் எழுத்து வகைப் படைப்புக்கு ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டாக உள்ளார். . மேலும்...