விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பெப்ரவரி 11, 2007

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெற் பயிர் அறுவடைக்குப் பின் அதன் தாள் உலர்த்தப்பட்டு கால்நடைகளுக்கு (குறிப்பாக மாடுகளுக்கு) உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது வைக்கோல் என்று அழைக்கப்படுகிறது. வைக்கோல், அதன் உலர்ந்த நிலையிலேயே கால்நடைகளால் விரும்பி உண்ணப்படுகிறது. ஆகையால், உழவர்கள் வைக்கோல் ஈரப்படாமலும் மழையில் நனையாமலும் காக்க முயல்வர். அப்படி ஈரப்பட்டாலும் வெயிலில் ஓரிரு நாட்கள் காய வைப்பதன் மூலம் வைக்கோலை உலர வைத்து கால்நடைகளுக்கு உண்ணத் தர முடியும். ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்ட வைக்கோலை வைக்கோல் போர் அல்லது வைக்கோல் படப்பு என்பர். அவ்வாறு குவித்து வைத்த வைக்கோல் காற்றில் பறந்து விடாமல் காக்க, வைக்கோல் போரை சுற்றி வைக்கோலாலே பின்னப்பட்ட வைக்கோல் பிறியை சுற்றி வைப்பர். வைக்கோல் போர்களை, தானிய மூட்டைகளை பாதுகாப்பாக ஒளித்து வைக்கும் கிடங்காகவும் உழவர்கள் பயன்படுத்துவர். இது தவிர வைக்கோலை குடிசைகளின் மேலும் இட்டு கூரை கட்டுமானப் பொருளாகப் பயன்படுத்துவதும் உண்டு.


மணக்கோலம் என்ற சொல்லில் வருவது போல கோலம் என்பது பொதுப்படையாகத் தோற்றம் அல்லது வடிவம் என்று பொருள்படும். எனினும் கோலம் என்று சொல்லும்போது, பெரும்பாலும் நினைவிற்கு வருவது, வீட்டு வாயில்களிலே அரிசி மா அல்லது வேறு பொடிகளைப் பயன்படுத்தி வரையப்படும் கோலங்களே ஆகும். தமிழ்நாடு, இலங்கை போன்ற இடங்களில், கோலங்கள் அரிசிமா, முருகைக்கற்பொடி போன்ற வெண்ணிற உலர்வான பொடிகளைக் கொண்டு வரையப்படுகின்றன. பொதுவாக வெளியே தளர்வான மண்தரையாயின், நீர் தெளித்துப் புழுதி அடக்கப்படும். பின்னர் பெருவிரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் சிறிதளவு உலர் பொடியை எடுத்து, விரல்கள் நிலத்தில் படாமல், நிலத்துக்கு அரையங்குல உயரத்திலிருந்து, ஏற்கெனவே எண்ணியபடியான வடிவம் கிடைக்கும் வகையில், பொடியைத் தூவிச் செல்வார்கள்.