விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 25, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருவோவியம் என்பது சமயம் சார்ந்த, குறிப்பாகக் கிறித்தவ சமயம் சார்ந்த கீழைத் திருச்சபையிலும் கீழைக் கத்தோலிக்க திருச்சபையிலும் வழக்கத்திலிருக்கும் திருவுருவப் படத்தைக் குறிக்கும். கிரேக்க மொழியில் இது εἰκών என அழைக்கப்படுகிறது. மக்களின் உள்ளத்தில் பக்தியைத் தூண்டி எழுப்பவும், கடவுளருக்கு வழிபாடு நிகழ்த்த கருவியாக அமையவும், அலங்காரப் பொருளாகவும் இரு பரிமாணத் திருவோவியங்களும் முப்பரிமாணத் திருச்சிலைகளும் உருவாக்கப்பட்டன. கிறித்தவ கீழைத் திருச்சபைத் திருவோவியங்கள் பெரும்பாலும் மூவொரு கடவுள், இயேசு, அன்னை மரியா, புனிதர்கள், வானதூதர்கள், திருச்சிலுவை போன்ற பொருள்களைச் சித்தரித்தன. அவை பொதுவாகத் தட்டையான மரப் பலகையில் எழுதப்பட்டன. சில சமயங்களில் உலோகம், கல், துணி, தாள் போன்றவற்றிலும் பதிக்கப்பட்டன. கற்பதிகை முறையில் அமைந்த திருவோவியங்களும் உண்டு. முப்பரிமாணத்தில் கல், பளிங்கு, உலோகம் போன்றவற்றில் திருச்சிலைகள் செய்வது பண்டைய கிறித்தவ வழக்கில் இல்லை. யூத மரபைப் பின்பற்றி, கடவுளுக்குக் கையாலான சிலைகளை உருவாக்கலாகாது என்னும் எண்ணம் அக்காலத்தில் நிலவியது. தம்மைச் சூழ்ந்திருந்த கிரேக்க-உரோமைய சமயங்களிலிருந்து தங்கள் சமயத்தை வேறுபடுத்திக் காட்டவும் கிறித்தவர் இவ்வாறு செய்தனர். மேலும்..


விண்மீன்கள் உருவாக்கம் என்பது அண்டவெளியில் பரவிக்கிடக்கும் மூலக்கூற்று முகில்கள் சுருங்கி அடர்த்தியாகி மின்மப் பந்து போன்ற ஒரு அமைப்பைப் பெறுதல் ஆகும். நுண்ணிய தாதுப்பொருட்கள், மூலகங்கள், வாயுக்கள் என்பன மூலக்கூற்று முகில்களில் காணப்படுகின்றன. விண்மீன்கள் உருவாகும் போதே அவற்றின் இறப்பும் தீர்மானிக்கப்படுகின்றன. விண்மீன்களின் அளவைப் பொறுத்து அவற்றின் ஆயுட்காலம் தீர்மானிக்கப்படுகின்றது. சிறிய விண்மீன்கள் குறைந்த ஆயுட்காலமும் பெரிய விண்மீன்கள் கூடிய ஆயுட்காலமும் கொண்டுள்ளன. சுருள் விண்மீன் திரள் போன்ற பால் வழியில் விண்மீன்கள், விண்மீன் துகள்கள், கூறுகள் போன்றவை காணப்படுகின்றன. இவைகளுக்கு இடையே உள்ள முகில்கள் தம்மகத்தே ஐதரசன், ஈலியம் போன்ற வளிமங்களைக் கொண்டுள்ளன, மிகவும் அடர்த்தியாக உள்ள இத்தகைய நிலை வான்புகையுரு என அழைக்கப்படுகிறது. இதிலிருந்தே விண்மீன்கள் உருவாகுகின்றன. இங்கு பெரும்பான்மையான ஐதரசன் மூலக்கூற்றுவடிவில் காணப்படுவதால் மூலக்கூற்று முகில்கள் என அழைக்கப்படுகின்றன. இவை சுழன்று கொண்டிருக்கும். எல்லா விண்மீன்களும் மூலக்கூற்று முகில்களில் இருந்தே தோன்றுகின்றன. மேலும்...