விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூன் 29, 2014

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரேசில் என்பது தென் அமெரிக்காவில் மிகப் பெரியதும் மிகுந்த மக்கள் தொகை கொண்டதுமான நாடாகும். இது பரப்பளவின் அடிப்படையிலும், மக்கள்தொகை அடிப்படையிலும் உலகிலேயே ஐந்தாவது பெரிய நாடு ஆகும். இதன் மக்கள்தொகை 192 மில்லியனுக்கும் மேற்பட்டது. பிரேசிலின் கிழக்கிலும் வடகிழக்கிலும் அத்திலாந்திக் பெருங்கடல் உள்ளது. எக்குவடோர், சிலி தவிர அனைத்து தென் அமெரிக்க நாடுகளுடனும், பிரேசில் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. பல்வேறு தீவுக் கூட்டங்களும் பிரேசிலின் ஆட்சிப் பகுதிக்குள் அடங்குகின்றன. பிரேசிலின் தலைநகர் பிரேசிலியா ஆகும். போர்த்துகீசியரின் ஆட்சியில் முன்பு இருந்ததால் போர்த்துகீச மொழி பிரேசிலில் பேசப்படும் மொழியும், அதிகாரபூர்வ மொழியும் ஆகும். தென்னமெரிக்காவில் பெரும்பான்மையாகப் போத்துக்கீச மொழியைப் பேசுபவர்களைக் கொண்ட நாடு இது மட்டுமே. அத்துடன், இம்மொழியைப் பேசுகின்ற உலகின் மிகப் பெரிய நாடும் இதுவே. மேலும்...


புவி நாள் என்பது ஆண்டு தோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும். 1969 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஜான் மெக்கானெல் உலக அமைதிக்காகக் குரல்கொடுத்த ஒருவர். மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவை என்று அவர் வலியுறுத்தினார். அதோடு, ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாடுவது பொருத்தம் என்றும் மெக்கானெல் கருத்துத் தெரிவித்தார். இவ்வாறு புவி நாள் என்னும் பெயரும் கருத்தும் எழுந்ததாகக் கருதப்படுகிறது. மேலும்...