விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சனவரி 1, 2012

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வலசை போதல் என்பது பல இனங்களைச் சேர்ந்த பறவைகள், விலங்குகள் ஆகியவை பருவகாலங்களை ஒட்டி புலம் பெயருவதைக் குறிக்கும். "எல்லா விலங்குகளும் பறவைகளும் வெப்பநிலை வேறுபாட்டை உள்ளூர உணர்கின்றன. கோடைக்காலத்தைக் குளிர்ந்த இடங்களிலும், குளிர்காலத்தை வெதுவெதுப்பான இடங்களிலும் கழிக்க விளைகின்றன. அவை தங்கள் வாழிடத்தைப் பல்வேறு பருவகாலஙகளில் மாற்றிக் கொள்கின்றன. அவை குழுக்களாகச் செல்லும் போது அவற்றைக் கொன்று தின்னும் உயிரிகளிடமிருந்து பாதுகாக்கப்படுகின்றன. வலசை போகும் பறவைகள், பூமியின் காந்தவிசையில் ஏற்படும் மாற்றங்களை உணர்கின்றன. அதன் உதவியுடன் அவை தங்களது சேருமிடத்தைக் கண்டறிகின்றன. பந்தயப் புறாக்கள் இந்த முறையில் தான் தமது இருப்பிடத்தை அறிகின்றன. இடப்பெயர்ச்சி துவங்குவதற்கு பல நாட்களுக்கு முன்னதாகவே பறவைகள் பயணத்திற்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்கின்றன. அதிக உணவை உண்டு, கூடுதலாக ஓர் அடுக்க கொழுப்பை உடலில் சேர்த்துக் கொள்கின்றன. மேலும்..


சுப்பையா நடேசபிள்ளை (1895-1965) இலங்கையின் தமிழ்த் தலைவர்களில் ஒருவரும், அரசியல்வாதியும் ஆவார். இலங்கை அரசாங்க சபை, நாடாளுமன்றம் , மேலவை ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தவர். தஞ்சாவூரில் பிறந்த நடேசன் 19 வயதில் சட்டம் பயின்று இளமையிலேயே நகராண்மைக்கழக உறுப்பினரானார். தரிசனத்திரயம் என்ற நூலையும் எழுதினார். 1923 இல் இலங்கைக்கு இடம் பெயர்ந்தவர் யாழ்ப்பாணம் பரமேசுவராக் கல்லூரியில் ஆசிரியராகி, பின்னர் அதன் அதிபரானார். 1926 ஆம் ஆண்டில் சேர் பொன். இராமநாதனின் புதல்வி சிவகாமசுந்தரியைத் திருமணம் புரிந்தார். அரசியலில் புகுந்து நாடாளுமன்றம் சென்றார். இவர் சார்ந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சி சிங்களம் மட்டும் சட்டத்திற்கு ஆதரவாகச் செயற்பட்டமையினால் அவர் அக்கட்சியில் இருந்து விலகி, சிறிமாவோ பண்டாரநாயக்காவின் இலங்கை சுதந்திரக் கட்சியின் அரசில் 1960 முதல் இறக்கும் வரை மேலவை உறுப்பினராக இருந்தார். ஆங்கிலப் பாடல்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தார். "சகுந்தலை வெண்பா" என்ற காப்பியத்தை எழுதி வெளியிட்டார். மேலும்...