விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஆகத்து 7, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓவர்லார்ட் நடவடிக்கை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த நேச நாட்டுப் போர் நடவடிக்கை. பிரான்சின் நார்மாண்டி கடற்கரைப் பகுதியில் நிகழ்ந்த இப்படையெடுப்புக்கு ஓவர்லார்ட் நடவடிக்கை என்று குறிப்பெயர் இடப்பட்டிருந்தது. 1944, சூன் 6ல் தொடங்கிய நார்மாண்டி படையிறக்கம் முதல் ஆகத்து 24ல் பாரிசு நகரம் வீழ்ந்தது வரையான நிகழ்வுகள் ஓவர்லார்ட் நடவடிக்கை எனக் கருதப்படுகின்றன. நான்கு ஆண்டுகளாக நாட்சி ஜெர்மனியின் பிடியிலிருந்த மேற்கு ஐரோப்பாவை மீட்பதற்கு 1944ல் நேச நாடுகள் அதன்மீது படையெடுக்கத் திட்டமிட்டன. இது உலக வரலாற்றிலேயே நிகழ்ந்த மிகப்பெரும் நீர்நிலப் படையெடுப்பாகும். இதில் நேச நாடுகளின் படைகளுடன், செருமனியால் ஆக்கிரமிக்கப்பட்ட நாடு கடந்த அரசுப் படைகளும் கலந்து கொண்டன. ஒன்றரை மாத கால கடும் சண்டைக்குப் பின்னர் நார்மாண்டி கடற்கரை முழுவதும் நேச நாட்டுப் படைகள் வசமாகின. இச்சண்டைகளில் அமெரிக்க படைகளுக்கான இலக்குப் பகுதிகள் எளிதில் கைப்பற்றப்பட்டுவிட்டன. மேலும்...


அரவான் இந்து காப்பியமான மகாபாரதத்தில் தோன்றும் ஒரு சிறிய கதாபாத்திரம். அரவான் பாண்டவ இளவரசன் அருச்சுனன், மற்றும் நாக இளவரசி உலுப்பி ஆகியோரின் மகன். அரவான் கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் முக்கியக் கடவுளாக உள்ளார். 'கூத்தாண்டவர்' என்பது இந்த வழிபாட்டு மரபில் அரவானுக்கு வழங்கப்படும் பொதுவான பெயர். திரௌபதி வழிபாட்டு மரபிலும் இவர் முக்கியப் பங்கு வகிக்கிறார். இந்த இரண்டு வழிபாட்டு மரபுகளும் தென்னிந்தியாவில் அரவானை கிராம தெய்வமாக வழிபடும் பகுதியில் தோன்றியவை. அரவான், அலி என்று அழைக்கப்படும் திருநங்கைகள் சமூகத்தின் காவல் தெய்வமுமாவார். குருசேத்திரப் போரில் அரவான் வீர மரணம் அடைவதாக மகாபாரதம் சித்தரிக்கிறது. போரில் பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்கு காளி அருள் வழங்க வேண்டும் என்பதற்காக அரவான் தன்னையே கடவுளுக்கு பலி கொடுத்ததை சிறப்பிக்கும் மரபும் தென்னிந்திய சமூகத்தில் உள்ளது. தன்னையே பலி கொடுத்ததற்காக கிருஷ்ணர் அரவானுக்கு வழங்கிய மூன்று வரங்களில் ஒன்றே கூத்தாண்டவர் வழிபாட்டு மரபின் மையமாக உள்ளது. மேலும்...