விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/அக்டோபர் 14, 2012

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புடு சிறைச்சாலை என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில் உள்ள ஒரு சிறைச்சாலை ஆகும். கோலாலம்பூரின் முக்கிய பகுதியில் அமைந்திருக்கும் புடு சிறைச்சாலை 115 வருடம் பழமை வாய்ந்தது. இச்சிறைச்சாலை 1891-இல் கட்டத்தொடங்கி 1895-இல் கட்டி முடிக்கப்பட்டது. மலேசியாவின் சுற்றுலா தளமாகவும், வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகவும் விளங்கி வந்தது. இந்தச் சிறைச்சாலை கோலாலம்பூரில் ஜாலான் ஷாவில் இருக்கிறது. உலகிலேயே மிக நீளமான சுவரோவியம் புடுச் சிறைச்சாலையின் சுவரில்தான் வரையப்பட்டது. இச்சிறைச்சாலையில் கொடுக்கப்படும் பிரம்படிகள் அனைவராலும் பேசப்படுவனவாகும். புடு சிறைச்சாலை 1,38,000 மலாயா டாலர் செலவில் 1895-இல் கட்டப்பட்டது. அதன் முதல் இயக்குநர் ஜே.ஏ.பி.ஏலன் ஆவார். சிறைச்சாலையின் கட்டுமானப் பொருட்கள் இந்தியா, பிரித்தானியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. கட்டிடத்தின் அமைப்பு முறை ’X’ வடிவத்தில் உருவாக்கம் பெற்றது. ஆப்பிரிக்காவின் பொகாம்பியா என்னுமிடத்தில் உள்ள கண்டி சிறைச்சாலையின் அமைப்பில் புடு சிறைச்சாலையும் கட்டப்பட்டது. மேலும்...


உலக அமைதி என்பது பூமியில் நிலவுகின்ற நாடுகளும் வாழ்கின்ற மக்களும் ஒருவரோடு ஒருவர் இணைந்து, அரசியல் சுதந்திரம், அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றில் பங்கேற்கின்ற இலட்சியத்தைக் குறிக்கிறது. உலகத்தில் வன்முறையும் போரும் மறைந்து, மக்கள் மனதார ஒருவரோடு ஒருவர் ஒத்துழைத்து, அமைதியை வளர்க்கின்ற அமைப்புகளை உருவாக்குவதும் இந்த இலட்சியத்தில் அடங்கும். தனிமனிதர் பகைமை உணர்ச்சிகளையும் செயல்களையும் தங்கள் வாழ்விலிருந்து அகற்றுவதும், மனித உரிமைகளை மேம்படுத்தி, கல்வி, தொழில்நுட்பம், மருத்துவம், முதலிய துறைகள் வழியாக உலக அமைதியைக் கொணர்வதும் இதைச் சார்ந்ததே. மனித இயல்பு உலக அமைதியைப் பேணுவதாக இல்லை என்று ஒரு சாரரும் போரும் வன்முறையும் மனித இயல்போடு இயற்கையாகவே இணைந்தவை அல்ல. மாறாக, பிறரோடு அமைதியில் வாழ்வதும், ஒத்துழைத்துச் செயல்படுவதும் உயர்நிலை விலங்குகளிடமும் மனிதரிடமும் இயல்பாக உள்ள பண்புகள் ஆகும் என்று ஒரு சாரரும் கருதுகின்றனர். இதன்படி, மனிதர் தம் இயல்பிலேயே வன்முறையாளர்கள் என்னும் கருத்துதான் உலகில் அமைதி ஏற்படுவதற்குத் தடையாக உள்ளது. மேலும்...