வலைவாசல்:புவியியல்/சிறப்புக் கட்டுரை/18

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிளிமஞ்சாரோ மலை டான்சானியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான எரிமலை வகையைச் சேர்ந்த மலை. இதுவே ஆப்பிரிக்காக் கண்டத்தில் உள்ள மலைகள் யாவற்றினும் மிக உயர்ந்த மலை. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 5895 மீட்டர் (19,340 அடி) ஆகும். இம்மலையின் மிக உயரமான முகட்டுக்கு 'உகுரு' என்று பெயர். கிளிமஞ்சாரோ மலையில் கிபோ, மாவென்சி, இழ்சிரா ( Kibo, Mawensi, Shira) என மூன்று எரிமலை முகடுகள் உள்ளன. இம்மலை, பல உள்ளடுக்கு கொண்ட எரிமலை வகையைச் சேர்ந்த எரிமலை (பல்லுள்ளடுக்கு எரிமலை, stratovolcano). கிளிமஞ்சாரோ எந்தவொரு மலைத்தொடரையும் சாராத தனிமலை. இமயமலைத் தொடர்களில் உள்ள மலைகளை ஒப்பிடும் பொழுது கிளிமஞ்சாரோவின் உயரம் அதிகம் இல்லை. ஆனால் கிளிமஞ்சாரோதான் உலகில் உள்ள தனிமலைகள் யாவற்றினும் மிக உயரமான மலை ஆகும். இம்மலையில் மிக உயரமான முகட்டு உச்சியாகிய உகுரு கிபோ எரிமலையில் உள்ளது. கிபோ மலையின் உச்சியில் காணப்படும் எரிமலைக் குழி 2.4 கி.மீ (1.5 மைல்) விட்டம் உடையது. உகுரு முகடு ஆப்பிரிக்காவிலேயே உயரமான இடமாகையால், உலகின் ஏழு கொடுமுடிகள் (seven summits) என்று கருதப்படும் உயரான முகடுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.