வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் (Sachin Ramesh Tendulkar உச்சரிப்பு, பிறப்பு ஏப்ரல் 24, 1973) என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரரும் இந்திய அணியின் முன்னாள் தலைவரும் ஆவார். துடுப்பாட்ட விளையாட்டில் எல்லா காலங்களில் விளையாடிய வீரர்களில் சச்சின் சிறந்த மற்றும் மிகவும் மதிக்கப்படும் வீரராக பரவலாக கருதப்படுகிறார். இவர் பதினொரு வயதுமுதல் துடுப்பாட்டம் விளையாடி வருகிறார். தனது பதினாறாவது வயதில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 1989இல் கராச்சியில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டத்தில் முதன்முறையாக விளையாடினார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் முதன்முதலாக இருநூறு ஓட்டங்களை எடுத்தவர் இவர் ஆவார். பன்னாட்டுப் போட்டிகளில் நூறு முறை நூறு ஓட்டங்கள் எடுத்தவரும் இவர் ஆவார். அனைத்துக் காலங்களிலும் தேர்வு மற்றும் ஒருநாள் ஆகிய இருவேறு துடுப்பாட்ட வடிவங்களிலும் அதிகபட்ச ஓட்டங்களை எடுத்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான இவர் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 30,000 ஓட்டங்களைக் கடந்த ஒரே வீரர் ஆவார்.

சச்சின் டெண்டுல்கருக்கு 2013ஆம் ஆண்டு இந்தியாவில் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இதன்மூலம் மிக இளம் வயதில் இந்த விருதைப் பெறும் முதல் நபர் மற்றும் விளையாட்டு வீரர்களில் இந்த விருதினைப்பெறும் முதல் வீரர் என்ற சாதனைகளைப் படைத்தார். இவர் 2019ஆம் ஆண்டு ஐசிசியின் புகழவையில்(Hall of Fame) இடம்பெற்றார்.