முத்துமாரியம்மன் கோயில், நார்த்தாமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முத்துமாரியம்மன் கோயில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்தில் நார்த்தாமலையில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலாகும்.[1]

சிறப்பு[தொகு]

முருகனுக்குரிய குணங்களுடன் அம்மன் இங்கு விளங்குகிறார். முருகனுக்கு உள்ளதுபோலவே காவடி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற வேண்டுதல்கள் இங்கு பக்தர்களால் நிறைவேற்றப்படுகின்றன.[2] நாரதர் இங்கு தங்கி தவம் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆதலால் நாரதகிரி மலை என்று இந்த மலை முன்னர் அழைக்கப்பட்டது. இந்த மலையானது மேல மலை, கோட்டை மலை, கடம்பர் மலை, பறையர் மலை, உவக்கன் மலை, ஆளுருட்டி மலை, பொம்மாடி மலை, மண் மலை, பொன் மலை ஆகிய ஒன்பது மலைக்குன்றுகளுக்கு நடுவில் உள்ள மலையாகும். இராமனுக்கும், இராவணனுக்கும் நடைபெற்ற போரில் மாண்ட வீரர்களை உயிர்ப்பிக்க அனுமான் சஞ்சீவி மலையை அடியோடு பெயர்த்து வான்வழியே தூக்கி வரும்போது அம்மலையிலிருந்து சிதறி விழுந்த சிறு துகள்கள்தான் இங்குள்ள குன்றுகள் என்று கூறப்படுகிறது. [3]

மூலவர்[தொகு]

இக்கோயிலின் தல மரம் வேம்பு ஆகும். [3] கருவறையில் முத்துமாரியம்மன் அமர்ந்த கோலத்தில் உள்ளார்.

விழாக்கள்[தொகு]

பங்குனி மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் திருவிழா மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை காப்புக் கட்டுதல், தொடர்ந்து 10 நாள் நடைபெறும் விழாவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது. காலசந்தி (காலை 8.00 மணி), உச்சிக்காலம் (நடுப்பகல் 12.00 மணி), சாயரட்சை (மாலை 6.00 மணி), அர்த்தசாமம் (இரவு 8.30 மணி) என்ற வகையில் நான்கு கால பூசைகள் இங்கு நடத்தப்பெறுகின்றன.[2] தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு, விஜய தசமி, தீபாவளி, பொங்கல் ஆகிய நாள்களில் அம்மன் தங்க ரதத்தில் வரும்போது பக்தர்கள் கண்டுகளிப்பார்கள். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகின்றனர்.[3]

திறந்திருக்கும் நேரம்[தொகு]

புதுக்கோட்டை-திருச்சி சாலையில் அமைந்துள்ள இக்கோயில் காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. புதுக்கோட்டை மாவட்டம், சுற்றுலாத்தலங்கள், நார்த்தாமலை
  2. 2.0 2.1 2.2 புதுக்கோட்டைக் கோயில்கள், புதுக்கோட்டை மாவட்டத் திருக்கோயில்கள் பயணியர் கையேடு, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, 2003
  3. 3.0 3.1 3.2 அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில், நார்த்தாமலை, தினமலர் கோயில்கள்