பள்ளி மேலாண்மைக் குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பள்ளி மேலாண்மைக் குழு என்பது இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளிகளில், பள்ளியின் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காக கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009-இன்படி ஏற்படுத்தப்பட்ட குழு ஆகும்.

நோக்கங்கள்[தொகு]

  • பள்ளியின் வளர்ச்சியில் பள்ளியின் தரம், ஆசிரியர்களின் வருகை, கற்பித்தல், தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை பார்த்து, அறிந்து அவற்றை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துதல்,
  • பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு, சீருடை, பாட நூல் உள்ளிட்ட அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதை உறுதி செய்து, சமுதாயத்துக்கும் பள்ளிக்கும் தொடர்பு ஊடகமாக இருத்தல்,
  • அனைத்துப் பள்ளி வயது குழந்தைகளையும் (6 முதல், 14 வயது) பள்ளியில் சேர்ப்பது அத்தோடு அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதை உறுதிசெய்வது,
  • மாற்றுத்திறனாளிகள், குறைபாடுள்ள குழந்தைகளைக் கண்டறிந்து அவர்கள் கல்வியைத் தொடரும் வகையிலான வசதிகள் மற்றும் பள்ளியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்,
  • மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துதல் மற்றும்
  • இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்துதல் ஆகியவை இக்குழுவின் நோக்கங்களாகும்[1].

இக்குழுவின் தலைவராகப் பள்ளியில் பயிலும் ஏதேனும் ஒரு குழந்தையின் பெற்றோர் இருப்பார்கள். இதில், பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் என மொத்தம் 20 உறுப்பினர்கள் இருப்பார்கள். மொத்தமுள்ள உறுப்பினர்களில் பாதிக்கும்(50%) குறையாத எண்ணிக்கையில் பெண்கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். இக்குழு அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கண்கானிக்கப்படுகிறது.[2].

பள்ளி மேலாண்மைக் குழு உருவாக்கம் மற்றும் விதிமுறைகள்[தொகு]

பள்ளி மேலாண்மைக் குழு உருவாக்கத்தில் பின்வரும் விதிமுறைகளின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.[3].

  • ஒவ்வொரு பள்ளியிலும் கட்டாயம் பள்ளி மேலாண்மைக் குழுவினை ஏற்படுத்துதல்.
  • பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் கொண்ட 20 நபர்களை உறுப்பினர்களாகக் கொண்டதாகப் பள்ளி மேலாண்மைக் குழு உருவாக்கப்பட வேண்டும்.
  • இதில் 75 சதவீதம் பெற்றோர்களாக இருக்க வேண்டும்.
  • மீதமுள்ள 25 சதவீதத்தினரில்
மூன்றில் ஒரு பங்கு மக்கள் பிரதிநிதிகள் (உள்ளாட்சி அமைப்பின் ஒப்புதலுடன்)
மூன்றில் ஒரு பங்கு தொடர்புடைய பள்ளியின் ஆசிரியர் (பள்ளியின் பணியாற்றும் ஆசிரியர்களின் முடிவின்படி)
மூன்றில் ஒரு பங்கு உள்ளூரைச் சேர்ந்த கல்வியாளர்கள் (பெற்றோர்களின் ஒப்புதலுடன்) இடம்பெற வேண்டும்.
  • பள்ளி மேலாண்மைக் குழுவின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் குழுவிலுள்ள மற்ற பெற்றோர்களால் தேர்ந்தெடுக்க வேண்டும். பள்ளியின் தலைமை ஆசிரியர் குழுவின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவார். தலைமை ஆசிரியர் இல்லாத பட்சத்தில் பள்ளியின் மூத்த ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட வேண்டும்.
  • ஓர் ஊராட்சியில் இரண்டு அதற்கு மேற்பட்ட பள்ளிகள் இருப்பின் ஒரு பள்ளியில் ஊராட்சி மன்றத் தலைவரும் பள்ளி மேலாண்மைக் குழுவில் உறுப்பினராகவும் மற்ற பள்ளிகளில் சம்மந்தப்பட்ட பள்ளிகள் அமைந்திருக்கும் வார்டு உறுப்பினர்கள் பள்ளி மேலாண்மைக் குழுவில் உறுப்பினராகவும் இணைக்கப்பட வேண்டும்
  • பள்ளி மேலாண்மைக் குழு குறைந்தபட்சம் மாதத்தில் ஒரு நாளாவது கூட்டப்பட வேண்டும். இதற்கெனத் தனி பதிவேடுகள், தீர்மானங்கள் அடங்கிய பதிவேடுகள் பராமரிக்கப்படவேண்டும். [4].
  • இக்குழுவில் 50 சதவீதத்திற்குக் குறையாமல் பெண்கள் இருக்க வேண்டும்.
  • சமூகத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த பெற்றோர்களுக்குக் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் இக்குழுவில் கொடுக்கப்பட வேண்டும்.
  • இந்த குழுவின் பதவிக்காலம் இரண்டு வருடங்களாகும். அதன் பின்பு குழு மாற்றியமைக்கப்பட வேண்டும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்".
  2. "பள்ளி மேலாண்மைக் குழுக்கள் ஏன்? அரசுப் பள்ளிகள் மேம்பாட்டில் இதன் செயல்பாடுகள் என்ன ?".
  3. https://www.education.gov.in/sites/upload_files/mhrd/files/upload_document/SMC%20Constitution%20Delhi.pdf Guidelines to formulate SMC
  4. "பள்ளி-மேலாண்மைக்-குழு-கூட்டங்களை-மாதந்தோறும்-நடத்த-வலியுறுத்தல்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பள்ளி_மேலாண்மைக்_குழு&oldid=3874443" இலிருந்து மீள்விக்கப்பட்டது