பயனர்:Kalaivanan S/மணல்தொட்டி/நிலைமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிலைமம் அல்லது சடத்துவம் (Inertia) என்பது ஒரு பருப்பொருளின் இயக்க நிலையில் நேரும் (வேகம், திசை, நிலைத்தன்மை என பலவற்றின் மாற்றங்களும் அடங்கிய) அனைத்துவித மாற்றங்களுக்கும் எதிராக அமையும் அப்பொருளின் தடுப்பாற்றல் ஆகும். பொருட்கள் அனைத்தும் நேர்கோட்டில், நிலையான வேகத்தில் நகர முனையும் போக்கு இது. மரபார்ந்த இயற்பியலில் பொருட்களின் இயக்கத்தையும், விசைகளினால் அவ்வியக்கங்கள் பாதிக்கப்படும் முறைகளையும் விளக்கப் பயன்படும் அடிப்படை நியமங்களுள் நிலைமமும் ஒன்று. நிலைமத்தின் ஆங்கிலப்பதமான Inertia, சடத்தன்மை, மந்தத் தன்மை என்று பொருள் தரும் இலத்தீனச் சொல்லான, iners-இல் இருந்து ஆக்கப்பட்டது. இயற்பியல் ஒருங்கியங்களின் அளவீட்டுப் பண்பான நிறை/திணிவின், முதன்மையான வெளிப்பாடுகளுள் நிலைமமும் ஒன்று. ஐசாக் நியூட்டன் தன் பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்காவில், நிலைமத்தை முதல் விதியாகக் கொடுத்துள்ளார்

பொதுவாக "நிலைமம்" என்ற பதம் ஒரு பொருளின் "திசைவேக மாற்றத்திற்கு எதிரான தடுப்பாற்றல்" அளவைக் குறிக்கும், சூழலைப் பொருத்து அதன் உந்தத்தையும் சிலபோது குறிக்கும். "நிலைமம்" என்பது முறையான நோக்கத்தில், நியூட்டனின் முதல் இயக்க விதியில் விளக்கியுள்ள "நிலைம நியமத்தின்" சுருக்கெழுத்தாகப் பொருள் கொள்ளப்படுகிறது. அவ்விதியின்படி, "ஒரு பொருளின் மீது வெளிப்புறவிசையொன்று செயல்படும் வரை எந்த ஒரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாது." சுருக்கமாக, ஒரு பொருளின் நிலைமாற்ற இயலாமை பண்பிற்கு சடத்துவம் என்று பெயர்.

புவியின் மேற்பரப்பில், பெரும்பாலான நேரங்களில், நகரும் பொருட்களின் வேகத்தை (அதன் அசைவு நிற்கும் வரை) மட்டுப்படுத்த முனையும் உராய்வு, காற்றிழுவையின் விளைவுகள் மற்றும் ஈர்ப்பு விசை ஆகியவற்றால், நிலைமம் மறைக்கப்படுகிறது. விசையளிக்கப்படும் வரை மட்டுமே பொருட்கள் நகரும் என்று அறிஞர் அரிசுடாட்டில் தவறாகப் புரிந்துகொள்ள இதுவே காரணம்.[1][2]

கருத்தாக்கமும் வரலாறும்[தொகு]

இயக்கம் பற்றிய தொடக்கக் காலச் சிந்தனைகள்[தொகு]

மறுமலர்ச்சிக்கு முன்னர் மேற்குலக மெய்யியலில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இயக்கக் கோட்பாடு அரிசுடாட்டிலால் வழங்கப்பட்டது (ஏறத்தாழ கி.மு. 335 கி.மு. 322 ஆண்டுகளுக்கிடையில்). அவர் கூறியதாவது, புவியில் அனைத்துப் பொருட்களும் புற இயக்கச் சக்தியின்றி ஓய்வு நிலைக்கு வந்துவிடும், நகரும் பொருட்களும் உந்தும் சக்தி ஒன்று இருக்கும் வரை மட்டுமே நகரும். எறிபொறியிலிருந்து புறப்பட்ட எறியத்தின் தொடர் இயக்கம் அப்பொருளைச் சுற்றியுள்ள ஊடகத்தின் ஏதேனுமொரு இயக்கத்தால்தான் சாத்தியப்படும் என்று அவர் விளக்கமளித்தார்.[3] அத்தகைய வலுவான இயக்கங்கள் (ஊடகமற்ற) வெற்றிடத்தில் சாத்தியமில்லை என்னும் முடிவுக்கு வந்தார்.[4]

பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டபோதும் அரிசுடாட்டிலின் இயக்கக் கருத்தாக்கம் கிட்டத்தட்ட ஈராயிரமாண்டுகளுக்கும் மேலாக பலமுறை விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டது. சான்றாக, லுக்ரேசியஸ் (எபிகியூரசின் கருத்தையொட்டி) திணிவின் 'இயல்பு நிலை' இயக்கம் தான் தேக்கமன்று என்று கூறினார்.[5] ஆறாவது நூற்றாண்டில்  ஜான் பிலோபோனசு அரிசுடாட்டிலின் கருத்துகளுள் ஊடகமே எறியத்தின் இயகத்தைத் தக்கவைக்கிறது என்றும் வெற்றிடம் இயக்கத்தைத் தடை செய்கிறது எனும் கருத்துகளிலுள்ள முரண்பாடுகளை விமர்சித்தார். இயக்கம் சுற்றூடகத்தினால் தக்கவைக்கப்படவில்லை, எனினும் ஒரு பொருளை இயக்கத்தில் இருத்தியபோது அதில் ஏற்றப்பட்ட ஏதோவொரு பண்பினால் எனும் கருத்தை முன்வைத்தார் பிலோபோனசு. இக்கருத்துருவில், ஒரு பொருளை இயக்கத்தில் வைக்க இயக்க சக்தி ஒன்று தேவை என்பதால், இது நவீன நிலைமக் கருத்தாக்கமல்ல, எனினும் அதன் அடிப்படையாக அமைந்தது.[6][7][8] இக்கருத்து அரிசுடாட்டிலிற்கு ஆதரவான இப்னு றுஷ்து உள்ளிட்ட பல மெய்யியல் மேதைகளால் கடுமையாக எதிர்க்கப் பட்டது. எனினும் இசுலாமியப் பொற்காலத்தில், பிலோபோனசிற்குப் பலர் ஆதரவளித்து அவரது கருத்தை மேம்படுத்தி வளர்த்தனர்.

தூண்டுதிறக் கோட்பாடு[தொகு]

14-ஆவது நூற்றாண்டில், யான் புரிடான் தூண்டுதிறம் என்று தான் வழங்கிய, இயக்கத்தை ஆக்கும் பண்பு தானாகவே கசிந்து கரையும் எனும் கருத்தை மறுத்தார். புரிடானின் கருத்தானது, அசையும் ஒரு பொருளின் இயக்கம், அதன் தூண்டுதிறத்திற்கு எதிராக விளையும் காற்று எதிர்ப்பாற்றல் மற்றும் அப்பொருளின் எடை ஆகியவற்றால் நிறுத்தப்படுகிறது.[9] மேலும் அவர் தூண்டுதிறம் வேகத்தோடு நேர் விகிதத்தில் அமைவதாகக் கருதினார்; இக்கருத்து நவீன உந்தக் கருத்துருவோடு பலவாறு ஒத்துப்போவது குறிப்பிடத்தக்கது. எனினும் புரிடான் தன் கோட்பாட்டை அரிசுட்டாட்டிலின் அடிப்படைக் கோட்பாட்டின் திருத்தமாகவே கருதியதோடு, இயக்கத்தில் இருக்கும் பொருளுக்கும் நிலைத்திருக்கும் பொருளுக்கும் அடிப்படை வேறுபாடு உண்டு என்பது உள்ளிட்ட அரிசுட்டாட்டிலின் கருத்துகள் பலவற்றை ஏற்றிருந்தார். மேலும் அவர் தூண்டுதிறம் நேரியலாக(linear) இருக்க வேண்டியதில்லை எனவும், பொருட்களை வட்டமிடச் செய்யும் (கிரகக் கோள்களைப் போல) வட்டயியலாகவும் (circular) அமையலாம் என்று கருதினார்.

புரிடானின் கருத்துகளை அவரது சீடரான சாக்சோனியின் ஆல்பர்ட் (1316–1390) மற்றும் ஆக்சுபோர்டு கணக்கீட்டாளர்கள் தொடர்ந்து பின்பற்றினர்; அவர்கள் மேற்கொண்ட பல ஆய்வுகள் பண்டைய அரிசுட்டாட்டிலியக் கருத்துகளின் அடிப்படைகளைத் தகர்த்தன. இவர்களது பணிகளை, இயக்க விதிகளை வரைபடங்களாகத் தெரிவிப்பதில் முன்னோடியான நிக்கோல் ஓரெஸ்மே விரிவாக்கினார்.

கலீலியோவின் நிலைமக் கோட்பாட்டிற்கு சற்று முன்னதாக, கியாம்பட்டிஸ்டா பெனெடெட்டி, தூண்டுதிறக் கோட்பாட்டிற்குள் நேரியல் இயக்கத்தை (linear motion) மட்டும் ஈடுபடுத்தினார்.

கவன் வில்லில் எய்யப்படும் கல்லின் இயக்கத்தை, ஒரு பொருள் வட்டவியல் இயக்கத்தில் திணிக்கப்பட்டபோதும், அதன் இயக்கம் நேரியலாக அமையும் இயல்பிற்குச் சான்றாகக் காட்டினார்.

Notes[தொகு]

  1. Aristotle: Minor works (1936), Mechanical Problems (Mechanica), University of Chicago Library: Loeb Classical Library Cambridge (Mass.) and London, p. 407 
  2. Pages 2 to 4, Section 1.1, "Skating", Chapter 1, "Things that Move", Louis Bloomfield, Professor of Physics at the University of Virginia, How Everything Works: Making Physics Out of the Ordinary, John Wiley & Sons (2007), hardcover, ISBN 978-0-471-74817-5
  3. Aristotle, Physics, 8.10, 267a1–21; Aristotle, Physics, trans. by R. P. Hardie and R. K. Gaye.
  4. Aristotle, Physics, 4.8, 214b29–215a24.
  5. Lucretius, On the Nature of Things (London: Penguin, 1988), pp. 60–65
  6. Sorabji, Richard (1988).
  7. "John Philoponus".
  8. Darling, David (2006).
  9. Jean Buridan: Quaestiones on Aristotle's Physics (quoted at Impetus Theory)