நீச்சற் குளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
50 மீட்டர் நீளமுள்ள உள்ளக நீச்சற் குளம்

நீச்சற் குளம் என்பது, தொட்டி போன்ற அமைப்புக்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ள செயற்கைக் குளம் ஆகும். இது, நீச்சல் தொடர்பான போட்டி, பொழுதுபோக்கு, நீர்ப் பாய்ச்சல் அல்லது வேறு குளியல் தேவைகளுக்குப் பயன்படுகிறது.

நீச்சற் குளங்கள் தனிப்பட்டவர்களால் தங்கள் சொந்தத் தேவைக்கு அல்லது பலருக்குப் பொதுவாக அமைக்கப்படலாம். சொந்தத் தேவைக்கான நீச்சற் குளங்கள் பொதுவாக தனிப்பட்டவர்களின் வசிப்பிடங்களிலேயே காணப்படுகின்றன. உலகின் பல பகுதிகளில் தனிப்பட்ட நீச்சற் குளத்தைக் கொண்டிருப்பது ஒரு தகுதியாகக் கருதப்படுகிறது. பொதுக் குளங்களும் கூட, ஒரு குறிப்பிட்ட குழுவினரின் பயன்பாட்டுக்காக மட்டும் இருக்கக்கூடும். இத்தகைய குளங்கள், பாடசாலைகள், விளையாட்டுச் சங்கங்கள், அடுக்குமாடி வீட்டுத் தொகுதிகள், தங்கு விடுதிகள் போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இவை தவிர எவரும் பயன்படுத்தக்கூடிய நீச்சற் குளங்களும் உள்ளன.

அமைப்பு[தொகு]

மெக்சிக்கோவில் தனியார் வீடொன்றில் உள்ள நீச்சற் குளம். இது செவ்வகம் அல்லாத வடிவத்தில் உள்ளது.

நீச்சற் குளங்கள் பல வடிவங்களில் உள்ளன. போட்டிகளுக்குப் பயன்படக்கூடிய நீச்சற் குளங்கள் பெரும்பாலும் செவ்வக வடிவம் கொண்டவை. போட்டிகளுக்கும், போட்டிகளுக்கான பயிற்சி அளிப்பதற்கும் பயன்படுவதனால் பாடசாலைகள், விளையாட்டுச் சங்கங்கள் போன்ற இடங்களில் காணப்படும் குளங்கள் செவ்வக வடிவம் உள்ளவையாகவே அமைக்கப்படுகின்றன. இவற்றின் நீள, அகலங்களும் குறிப்பிட்ட விதிகளுக்கு அமையவே இருப்பது வழக்கம். பொழுது போக்குத் தேவைகளுக்கான குளங்கள் பல வகையான வடிவங்களில் அமைக்கப்படுவது உண்டு. இத்தகைய குளங்களைத் தனியார் வீடுகளிலும், தங்கு விடுதிகளிலும் காண முடியும். இவ்வாறான நீச்சற் குளங்கள் பல இடங்களில் நிலத் தோற்ற வடிவமைப்பின் ஒரு பகுதியாகவே அமைவதுண்டு. இதனால் இவை செயற்பாட்டுத் தேவைகளை மட்டுமன்றிச் சூழலை அழகூட்டுவதற்கும் உதவுகின்றன.

அமைவிடம்[தொகு]

நீச்சற் குளங்கள் கட்டிடங்களுக்கு உள்ளேயோ, வெளியேயோ அமையலாம். பொதுவாக நல்ல காலநிலையைக் கொண்டிராத இடங்களில் நீச்சற் குளங்கள் மூடிய கட்டிடங்களுக்கு உள்ளேயே அமைக்கப்படுகின்றன. தேவை ஏற்படுமிடத்து இக் கட்டிடங்கள் வளிப் பதனம் செய்யப்படுகின்றன அல்லது வெப்பமூட்டப் படுகின்றன. நல்ல காலநிலை உள்ள இடங்களில், சிறப்பாக பொழுதுபோக்குக்கு உரிய குளங்கள் கட்டிடங்களுக்கு வெளியே அழகிய சூழலில் அமைக்கப்படுவதே வழக்கம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீச்சற்_குளம்&oldid=3501723" இலிருந்து மீள்விக்கப்பட்டது