பேச்சு:நீச்சற் குளம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீச்சற் குளம் நீச்சல்க் குளம் எது சரியானது? --கோபி 16:57, 21 மார்ச் 2007 (UTC)

நீச்சல்க் குளம் என்பது கட்டாயம் தவறு. ஆனால் சிலர் நீச்சல் குளம் என்று பிரித்து எழுதுகிறார்கள். ஆனால், நீச்சலுக்கான குளம் என்றால் நீச்சற்குளம் என்றுதான் எழுத வேண்டும். பிரித்து எழுதும் பொழுது வல்லொற்றை நீக்கி எழுதினால் இன்று தவறாக பலர் எண்ணுவதில்லை. இதே போல பலருக்கும் குழப்பம் தருவது எழுத்துக்கள் என்று எழுத வேண்டுமா, எழுத்துகள் என்று எழுத வேண்டுமா என்பது. கள் என்பது ஒரு தனிச் சொல் இல்லை, பன்மை குறிக்கும் பின்னொட்டு என்று கொள்வோர், எழுத்துகள் என்பர். உகரத்தில் முடிவதால் ககர ஒற்று (க்கன்னா) சேர்க்கவேண்டும் என்பர் சிலர். இன்று இந்த இரண்டு வழக்கும் ஏற்புடையது என்பது இலக்கணம் அறிந்தவர்களின் கருத்து. எனவே வாழ்த்துக்கள், வாழ்த்துகள், பாராட்டுகள், பாராட்டுக்கள் எல்லாமே சரியானது. அதே போல, நீச்சல் குளம் என பிரித்து எழுதினால் அதிகம் தவறாகத் தெரியாது. நீச்சற்குளம் அல்லது நீச்சற் குளம் என்பதுதான் சரியானவை. --செல்வா 17:15, 21 மார்ச் 2007 (UTC)

விளக்கத்துக்கு நன்றி செல்வா. --கோபி 17:56, 21 மார்ச் 2007 (UTC)

நல்லது கோபி. இன்னொன்றும் குறிப்பிடுவது பொருந்தும் என நினைக்கிறேன். நீச்சல் குளம் என்று பிரித்து எழுதுவதால் கூகுள் போன்ற தேடு பொறிகளில் இரு சொற்களும் தேர்வுற்றுப் பொறுக்கப்படும். இதனால் தேடு பொறிகளுக்கு ஏற்றார்போல நம் மரபுகளை மாற்றவேண்டும் என நான் பரிந்துரைப்பதாக எண்ண வேண்டாம். இன்றைய தமிழ் அறிவு இருக்கும் நிலையில் (தமிழ் நாட்டை மட்டுமே கருதி சொல்கிறேன்), புணர்ச்சிப் பிழைகளை தவிர்க்க பிரித்து எழுதலாம் (இதனால் தவறு சற்று குறைவாகத் தென்படும்). நீச்சற் குளம் என்றே இருக்கட்டும், ஒரு கருத்துப் பகிர்வுக்காக மட்டுமே இதனைக் கூறுகிறேன். ஏதும் மாற்றம் செய்வதற்காக இல்லை.--செல்வா 14:21, 22 மார்ச் 2007 (UTC)

நீச்சல் குளம் வழிமாற்றிப் பக்கமாக உள்ளது. நீச்சற்குளம், நீச்சல்க் குளம் போன்ற வழிமாற்றிப் பக்கங்களையும் உருவாக்குவது தேடுவதை இலகுவாக்கும். வழிமாற்றிகளை நாம் வேண்டிய அளவு பயன்படுத்தித் தேடுதலை இலகுவாக்குவோம். ஆ.வி.யிலும் வழிமாற்றிப் பயன்பாடு மிக அதிகம். கோபி 17:17, 22 மார்ச் 2007 (UTC)

நீச்சல்க் குளம் என்பதற்கு வழிமாற்று தேவை இல்லை. நீச்சற் குளம், நீச்சற்குளம், நீச்சல் குளம் ஆகியவற்றுக்கே தேவை. அப்படி நீச்சல்க் குளம் என்பதுக்கு வழிமாற்று இருக்கவேண்டும் என எண்ணினால் (இது தவறுகளைப் பெருக்கும்), இது தவறானது, நீங்கள் நீச்சற் குளம் வேண்டும் எனில் இங்கு செல்லுங்கள் என்பது போல தரலாம். இப்படிப் பிழையான எழுத்துக்கூட்டல்கள் சிலவற்றுக்கு ஆங்கில விக்கியில் வழி மாற்று உள்ளது. ஆனால் நீச்சல்க் குளம் என்பது மிக மிகத் தவறானது. இதற்கு வழிமாற்று இருக்ககூடாது என்பது என் கருத்து (பிழை செய்வோருக்கு ஊக்கம் தருமாறு அமைந்துவிடும்). --செல்வா 17:45, 22 மார்ச் 2007 (UTC)

ஆம், நீச்சல்க் குளத்தில் இருந்து வழிமாற்று தேவையில்லை. பெரும்பாலானோர் நீச்சல் குளம் என்று எழுதக்கூடும். நீச்சல்க் குளம் என்பது அரிதான பிழை என்று தான் நினைக்கிறேன்.--ரவி 17:50, 22 மார்ச் 2007 (UTC)

நீச்சல்க் குளம் என்பது அரிதான பிழையாக எனக்குத் தோன்றவில்லை. எடுத்துக்காட்டுக்குப் பார்க்க பேச்சு:சூழற் தாக்க மதிப்பாய்வு. அங்கே மயூரநாதன் சூழல்த் தாக்கம் என்று வருமா என்றும் கேட்டார். சூழல் தாக்கம் என்று மட்டுமல்ல சூழல்த் தாக்கம் என்றும் எழுதப்பட வாய்ப்புண்டு என்பதை அதை உணர்த்துகிறது. அத்தகையதொன்றே நீச்சல்க் குளமும். --கோபி 07:25, 24 மார்ச் 2007 (UTC)
நீச்சற் குளங்கள் குளியலுக்குப் பயன்படுத்துவதல்ல. குளித்தபின்னேதான் உள்ள வரவேண்டும்! நீச்சல் பழகவோ, உடற்பயிற்சியாய் நீஞ்சவோ, நீருள் உயரத்தில் இருந்து பாய்ந்து குதிப்பது (இதனை நீர்ப்பாய்ச்சல் என்று சொல்லுவது குழப்பம் ஏற்படுத்தலாம் - வயல் வெளிகளிலே பயிருக்கு நீர் பாய்ச்சல் அல்ல) இப்படி நீருள் குதிக்கும் பொழுது நீர் அதிகம் வெளியே தெளிக்காமலும், உடல் ஆற்றொழுக்காக நெளிந்து, மடங்கிப் பின் நீண்டு அம்புபோல் நீருள் புகவேண்டும். இதனை நீருள் குதிப்பு அல்லது நீருள் கவின்குதிப்பு என்று கூறலாம்.--செல்வா 18:14, 22 மார்ச் 2007 (UTC)

தலை கீழாக கால் மேலாக நீருக்குள் பாய்வதை எங்க ஊரில் சொருக்கல் அடிப்பது என்போம். நீருக்குள் உடலைச் சொருகுவது போல் பாய்வதால் இந்தப் பெயர் என நினைக்கிறேன். நீர்ச் சொருக்கல், நீர்ச்சொருகல் என்று சொல்லலாமே? மரபுச் சொற்களைப் பயன்படுத்துவது நன்று தானே?--ரவி 19:02, 22 மார்ச் 2007 (UTC)

நல்ல அழகான கட்டுரை. படங்கள் மிகச்சிறப்பாக உள்ளன.--செல்வா 18:17, 22 மார்ச் 2007 (UTC)

ரவி, கட்டாயம் சொருக்கல் என்னும் சொல்ல ஆளலாம். வினைச்சொல்லாக சொருகு என்றும் ஆள்வார்களா அல்லது சொருக்கடி என்பார்களா? தலைச்சொருக்கடி, கால்சொருக்கடி ?? இதுபோல வழக்க்கில் உள்ள சொற்களைத் தேர்ந்து கொள்ளுதல் நல்லது.--செல்வா 19:16, 22 மார்ச் 2007 (UTC)

இப்ப தான் மேல கவின் குதிப்பு சொல்லி இருந்ததை உற்றுப் பார்த்தேன். அதில் விவரிக்கப்பட்டுள்ளது எங்க ஊரில் பல்ட்டி :) தான். ஆனால், பல்ட்டி என்று விக்கிபீடியாவில் எழுத இயலாது. இது என்ன மொழிச் சொல் என்று தெரியவில்லை. நான் சொல்லுவது - பல்ட்டி இல்லாமல் ஒரே பாய்ச்சலாகத் தலையை முன்னே விட்டுக் குதிப்பது. ஆனால், பல்ட்டியின் இறுதி விளைவும் இதுவே என்பதாலும் சொருக்கல் என்பது வினைவழி வந்த பெயர்ச்சொல்லாக இருப்பதால் இதையே எல்லாவற்றுக்கும் பயன்படுத்தலாம். "சொருகுறேன்" என்று வினையாகச் சொல்வது இல்லை. சொருக்கல் அடித்தல் என்பார்கள். அடித்தல் என்பதை குதித்தல் போல் கருதிக் கொள்ளலாம். ஆனால், சொருகு என்ற வினையில் இருந்து தான் இது வந்திருக்கிறது என்பது தெளிவு. எனவே, நீச்சலைப் பொருத்தவரை சொருக்கல், சொருகு ஆகியச் சொற்களைப் பயன்படுத்தலாம். ஆனால், பொதுவான diveஐ தமிழில் எப்படிச் சொல்வது? கரணம்? கரணம் தமிழ்ச் சொல்லா? பல்ட்டிக்குப் பதில் கரணம் என்றும் சொல்வது இப்ப நினைவுக்கு வருகிறது. கரணம் கூட ஒழுங்குடன் செய்யப்படும் கவின் மிகுந்த குதிப்பு தான். --ரவி 19:55, 22 மார்ச் 2007 (UTC)

மதராஸ் பல்கலைக் கழக அகராதி dive என்பதற்குப் பல தமிழ்ச் சொற்களைத் தருகிறது. இவை எல்லாமே மேலிருந்து நீருக்குள் குதிக்கும் diving அல்ல என்றாலும் உங்கள் கவனத்துக்காக இங்கே தருகிறேன்.
பாய்¹-தல் - 4. To plunge, dive, as into water; நீருண் மூழ்குதல். பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு (திருவாச. 7, 13).
ஆழ்¹தல் (p. 0252) [ āẕ¹tal ] 4 v. intr āḻ. [K. M. āḻ.] 1. To sink, plunge, dive; மூழ்குதல். ஆழ்கலத் தன்ன கலி (நாலடி. 12).
குடை¹-தல் - To dive, bathe, plunge in water; நீரில் மூழ்குதல். குடைந்து நீராடு மாதர் (கம்பரா. நீர்வி. 12).
சுழியோடு-தல் (p. 1547) [ cuẕiyōṭu-tal ] v. intr cuḻi-y-ōṭu. < id. +. 1. To dive into water; முக்குளித்தல். (யாழ். அக.)
திளை¹-த்தல் - 5. To dive; to sport in water; முழுகுதல். திளைக்குந் தீர்த்த மறாத (தேவா. 533, 2).
துளை¹-தல் (p. 2002) [ tuḷai¹-tal ] 4 v. intr tuḷai. 1. To disport in water; to dive; நீரில். விளையாடுதல். ஆனந்த வெள்ளத்துறையிலே படிந்து மூழ்கித் துளைந்து (தாயு. வம்பனேன். 2)
முக்குளி¹-த்தல் (p. 3220) [ mukkuḷi¹-ttal ] 11 v. intr mukkuḷi. prob. முங்கு- + குளி-. [T. pukkiḷintsu.] To dive; முழுகுதல். (திருச்செந். பிள்ளை. செங்கீ. 1).

Mayooranathan 09:00, 23 மார்ச் 2007 (UTC)

நீச்சற்குளமா-நீச்சல்குளமா?[தொகு]

நீச்சல், குளம் - என்ற இருசொற்கள் சேர்ந்து புணர்ச்சியில் நீச்சற்குளம் எனவே வரும். நீச்சல்குளம் என்பது சரியா என்றால் இதனை நீச்சல், குளம் அதாவது, நீச்சலும் குளமும் என உம்மைத்தொகையாகப் பொருள்செய்யவும் வாய்ப்புண்டு. (அதாவது நீச்சல் என்ற ஒன்று, குளம் என்ற வேறொன்று என இருபொருள்கள்,/ உம்மைத்தொகையில் ஒற்றுமிகாது என்பது இலக்கணம்.-கபிலபரணர்-) ஆனால் இங்கு நீச்சற்குளம் என்பது இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகும், வாழைப்பழம் என்பதுபோல; (இங்கு ஒரேபொருள்; வாழைவேறு பழம் வேறன்று.) -அதிகப்படியாக இலக்கணம் கூறுகின்றேனோ?- எனவே,பொருள்மயக்கம் நீங்க, லகரம் றகரமாகத்திரிந்து புணர்ந்தது தெளிவான விளக்கத்திற்காக.நீச்சல்குளம் என எழுதினால் பொருள்மயக்கம் நேர வாய்ப்புண்டு. இலக்கணம் என்பதுதான் என்ன? ஒருமொழியைப்பயன்படுத்தும் மக்கள் உருவாக்குவதுதான்; இலக்கணிகள் வேலை அதனை ஓர் ஒழுங்குபடுத்தி விதிகளை வகுப்பதுதே. கேட்கின்றவர்களுக்கு இதுஇருபொருள்களான நீச்சலும் குளமுமா (அல்லது) ஒரேபொருளான நீச்சற்குளமா என்றமயக்கத்தினை நீக்கவே நீச்சற்குளம் எனப் பயன்படுத்தினர் நம்முன்னோர்:பின்அதனை இலக்கணமாக ஆக்கினர். எனவே, பயனர் திரு.செல்வா அவர்கள் கூறியபடி 'நீச்சற்குளம்' என எழுதுவதுதான் தெளிவானது. 'நீச்சல்குளம் என எழுதுவது எளிமையாக உள்ளது: நீச்சற்குளம் என எழுதுவது கடினமாக உள்ளது' என்பார் பலர். அது ஒருகற்பனையே! அவ்வாறு கூறுபவர்கள் யாரும் 'சொல்கள்' என்றோ,'கல்கள்' என்றோ எழுதுவதில்லை:'சொற்கள்' 'கற்கள்' என்றே எழுதுவர். எனவே,புணர்ச்சியைக் கற்றுக்கொள்ள முதலில் நமக்கு விருப்பம் இருக்கவேண்டும். சுமையாக எண்ணக்கூடாது.மேலும்,சொல்லிக்கொடுக்க ஆர்வம்மிக்க ஆசிரியர்கள் அமைவதும் முக்கியம், அதனால்தான், அன்றே "தாரமும் குருவும் அவனவன் தலையெழுத்து" என்றுநம் தமிழ் முன்னோர் சொல்லிச்சென்றனர்.--Meykandan 02:45, 7 பெப்ரவரி 2010 (UTC)

விரிவான விளக்கத்திற்கு நன்றி மெய்கண்டான். நீச்சற்குளம் என எழுதுவதா அல்லது நீச்சற் குளம் எனப் பிரித்து இரண்டு சொற்களாக எழுதுவதா?--Kanags \பேச்சு 04:17, 7 பெப்ரவரி 2010 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நீச்சற்_குளம்&oldid=481018" இலிருந்து மீள்விக்கப்பட்டது