நசீர்-உத்-தின் மக்முது சா துக்ளக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நசீர்-உத்-தின் மக்முது சா துக்ளக்
தில்லி சுல்தான்
நசீர்-உத்-தின் மக்முது சா துக்ளக்கின் செம்பு நாணயம்
தில்லி சுல்தானகத்தின் 24வது சுல்தான்
ஆட்சிக்காலம்மார்ச் 1394 – பெப்ரவரி 1413
முன்னையவர்அலா உத்-தின் சிக்கந்தர் சா
பின்னையவர்கிசிர் கான்
பிறப்புஅறியப்படவில்லை
இறப்புபெப்ரவரி 1413
அரசமரபுதுக்ளக் வம்சம்
தந்தைமூன்றாம் நசீர் உதின் முகம்மது சா
மதம்இசுலாம்

நசீர்-உத்-தின் மக்முது சா துக்ளக் ( Nasir-ud-Din Mahmud Shah Tughluq ) (ஆட்சி: 1394 - பிப்ரவரி 1413 கி.பி.), நசிருதீன் முகமது ஷா என்றும் அழைக்கப்படும்[1] இவர், தில்லி சுல்தானகத்தை ஆட்சி செய்த துக்ளக் வம்சத்தின் கடைசி சுல்தான் ஆவார்.

வரலாறு[தொகு]

நுசுரத் சாவுடனான வாரிசுப் போர்[தொகு]

நசிருதீன் மக்முது, தில்லி சுல்தானகத்தை ஆட்சி செய்த சுல்தான் மூன்றாம் நசீர் உதின் முகம்மது சா என்பவரது மகனாவார். அவரது மரணத்திற்குப் பிறகு, அவரது மூத்த மகன் அலா உத்-தின் சிக்கந்தர் சா சுல்தானானார். ஆனால் நோய் காரணமாக சிக்கந்தர் 8 மார்ச் 1394 அன்று நோயால் இறந்தார். பின்னர் அவரது இளைய சகோதரரான நசிருதீன் முகமது அவருக்குப் பிறகு பதவியேற்றார். இருப்பினும், அவரது உறவினரான நுஸ்ரத் சா (நஸ்ரத் கான் என்றும் அழைக்கப்படுகிறார்.) அரியணையின் உரிமையைக் கோரினார். இதன் மூலம் 1394 முதல் 1397 வரை வாரிசுப் போர் தொடர்ந்தது. இந்த நேரத்தில், நசிருதீன் தில்லியிலிருந்து ஆட்சி செய்தார். அதே நேரத்தில் நுஸ்ரத் ஷா பிரோசாபாத்திலிருந்து ஆட்சி செய்தார். [1][2]

1533 ஆம் ஆண்டு சாராப் அல்-தின் எழுதிய 'சாபர்நாமா'வில் தைமூரின் படையெடுப்பினால் அம்லு கானின் தோல்வியும் மற்றும் தில்லி கைப்பற்றப்பட்டதும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

தைமூர் படையெடுப்பு[தொகு]

கி.பி. 1398 இல் நசிருதின் மக்முதுவின் ஆட்சியின் போது, துருக்கிய-மங்கோலியப் படையெடுப்பாளர் தைமூர் இந்தியாவின் மீது படையெடுத்தார். தில்லி அருகே நடந்த போரில் தைமூர் வெற்றிபெற்று நகருக்குள் நுழைந்தார். அங்கு அவர் பொது மக்களை படுகொலை செய்தார். 192 ஆண்டுகளுக்கும் மேலாக துருக்கிய-ஆப்கான் முன்னோடிகளால் குவிக்கப்பட்ட கணிசமான அளவு செல்வங்களை தைமூர் தில்லியிலிருந்துப் பெற்றார்.[3] தைமூரின் படையெடுப்பிற்குப் பிறகு, துக்ளக் வம்சம் வீழ்ச்சியடைந்து இறுதியில் முடிவுக்கு வந்தது. தமூர் வம்சத்தினர் தங்கம் போன்ற பல செல்வங்களை தில்லியில் இருந்து தங்கள் தலைநகரான சமர்கந்துவிற்கு எடுத்துச் சென்றனர். இதன் விளைவாக தில்லி சுல்தானகம் குறிப்பிடத்தக்க அளவில் பலவீனம் அடைந்தது. மேலும், குசராத்தில் முதலாம் முசாபர் சாவின் கீழ் குசராத்து சுல்தானகம், பஞ்சாபில் சேய்கா கோகரின் கீழ் கோகர்கள், வங்காளத்தில் கியாசுதீன் ஆசம் சாவின் கீழ் வங்காள வங்காள சுல்தானகம் அவத்தில் மாலிக் சர்வாரின் கீழ் ஜான்பூர் சுல்தானகம் மற்றும் மேவாட்டில் கன்சாதா பகதூர் கானின் கீழ் மேவாட் மாநிலம் போன்ற சுல்தானகத்தின் பல பகுதிகள் சுதந்திரத்தை அறிவிக்கத் தொடங்கின. இந்தப் பகுதிகள் உடைந்து போனதால், தில்லி சுல்தானகம் கணிசமாகச் சுருங்கி வலுவிழக்கத் தொடங்கியது.

வாரிசு[தொகு]

நசீர்-உத்-தின் மக்மூத் சா துக்ளக் பிப்ரவரி 1413 இல் இறந்தார். பின்னர், சையிது வம்சத்தின் முதல் சுல்தான் கிசிர் கான் ஆட்சியமைத்தார். கிசிர் கான் முல்தானின் ஆளுநராக இருந்தார். மேலும் தைமூரால் தில்லியின் சுல்தானாக நியமிக்கப்பட்டார். இருப்பினும் சமர்கந்தில் தைமூர் வம்சதினருக்கு கிசிர் கான் கப்பம் செலுத்த வேண்டியிருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Jayapalan, N. (2001). History of India, from 1206 to 1773. Volume II. New Delhi: Atlantic Publishers & Distri. p. 76. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788171569281. பார்க்கப்பட்ட நாள் 20 November 2019.
  2. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. pp. 100–102. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-38060-734-4.
  3. Grousset, René (1970). The empire of the steppes; a history of central Asia (in ஆங்கிலம் and பிரெஞ்சு). Internet Archive. New Brunswick, N.J., Rutgers University Press. pp. 444–445. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8135-0627-2.