திருக்குறட் கட்டுரைகள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருக்குறட் கட்டுரைகள் என்னும் திருக்குறள் ஆய்வுநூலை பேராசிரியர் வித்வான் ந. சுப்ரமண்யன் எழுதி, என்னெஸ் பப்ளிகேஷன்ஸ் மூலம் 2004இல் வெளியிட்டுள்ளார்.[1]

ஆய்வுப் பார்வையில் எழுந்த நூல்[தொகு]

திருக்குறளை ஆய்ந்து அதில் காணும் குற்றம் குறைகளைச் சுட்டிக்காட்டும் விதத்தில் "ஐய அடிப்படையில்" தம் நூலை எழுதியதாக ஆசிரியர் முகவுரையில் கூறுகிறார்:

திருக்குறள் இயற்றப்பெற்று கிட்டத்தட்ட இருபது நூற்றாண்டுகள் ஆகிவிட்டன என்று உறுதியாகக் கருதலாம். இக்கால அளவில் இதனைக் கற்றறியாத தமிழ்மாணவனே இருந்திருக்க மாட்டான் என்பதும் ஒருதலை. ஆயினும் இக்கால அளவில் இந்நூலைக் கற்றாரில் ஒருவரும் இந்நூலிற் கூறப்பட்டுள்ள கருத்துக்களைப் பற்றிச் சிறிதேனும் ஐய அடிப்படையில் ஆய்வு செய்யவேயில்லை என்பது தெளிவு. நமது இலக்கிய ஆய்வு மரபில் புகழ்பெற்ற (நம்போன்றோரால் புகழ் தரப்பட்ட) ஆசிரியர்களிடம் குற்றம் யாதும் இருக்க முடியாது என்றும் குற்றம் இருப்பின் அது உரையாக்கியவர்கள் அறியாமையாற் செய்ததாகவே இருக்கும் என்றும் துணிவர். ஆதலால் திருக்குறள் ஒரு சமய அடிப்படை நூலின் நிலைமைக்கு (வேதம், விவிலியம், கொரான் முதலியவை போல) உயர்த்தப்பட்டுப் பெரும்பாலும் வழிபடப்பட்டு வந்துள்ளது. இதனைத் தென்மொழியில் உள்ள வேதம், கீதை என்றெல்லாம் ஒப்பிட்டுப் பேசுவதும் இக்கருத்தோடுதான். இக்கருத்து ஒருவர் எண்ணத்தை ஆட்கொண்டுவிட்டால், பிறகு எந்த நூலையும் வேண்டுதல் வேண்டாமையின்றி ஆய்தல் என்பது இயலாததாகிவிடும். இந்த நிலையினின்றும் திருக்குறட் கல்வியைக் காப்பாற்றிச் சிறிது கைதூக்கிவிடச் செய்யும் சிறு முயற்சிகளில் இந்நூலும் ஒன்று. (பக்கம்: 7)

நூலின் உள்ளடக்கம்[தொகு]

ஆசிரியர் இந்த நூலுக்கு எழுதியுள்ள விரிவான முகவுரையைத் தொடர்ந்து நூலின் பெரும்பகுதியும் திருக்குறட் கட்டுரைகள் என்னும் தலைப்பின் கீழ் 15 கட்டுரைகளை உள்ளடக்கி அமைந்துள்ளது.

மூன்றாம் பகுதி திருக்குறட் பகுத்தாய்வு என்னும் தலைப்புடன் உள்ளது. அதில், மரபுவழி வருகின்ற திருக்குறள் அமைப்புமுறையில் குற்றம் உள்ளது என்று ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். குற்றம் களைந்து திருக்குறளை எவ்வாறு அமைத்துப் பார்க்கலாம் என்று ஆசிரியர் விளக்குகிறார்.

நான்காம் பகுதியில் சில திருக்குறட்பாக்களுக்கு ஆய்வு விரிவுரை என்னும் தலைப்பின் கீழ் ஏறத்தாழ 100 குறட்பாக்களுக்கு ஆசிரியர் விருத்தியுரை எழுதியுள்ளார்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் பற்றிய விளக்கம்[தொகு]

நூலாசிரியர்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல் (குறள் 314)

என்னும் குறளுக்குத் தரும் விளக்கத்தில், திருக்குறளில் இயேசு கிறித்துவின் போதனைத் தாக்கம் உளது என்று கூறுகிறார்:

தீமைசெய்தார்க்குத் தீமை செய்தலைத் தவிர்த்தல் நன்று; மற்றும், அதான்று, அவர்க்கு மன்னிப்பு வழங்கி அவர் செய்த தீமையைப் புறக்கணிப்பதோடு மறந்து விடுதல் அதனினும் நன்று; ஆயினும் இவை யாவற்றிலும் நன்று ஒன்று உளது. அதுதான் இன்னா செய்தார்க்கும் இனியவே செய்தல்; இதற்கு வேண்டிய ஆன்மிகத் துணிவு அளவிறந்தது. ஒரு குறளில் கூறினார்: "இன்னா செய்தாரை அவர் நாண நன்னயஞ் செய்து ஒறுத்தல் நன்று" என்று. நன்னயஞ் செய்தற்கு அவர் நாணுதல் குறிக்கோளாயின் அஃது அத்துணைச் சிறப்புடைத்தன்று. தீமை செய்தார்க்கு நன்மை செய்தால் அவர் நாணித் திருந்திச் சான்றோராவார் என்பது கிருத்துவ சமயக் கோட்பாடு. இது நடைமுறையில் எவ்வளவு உளதாகும் என்பது வரலாறு அறியும். சில சமயம் தீயோர் நல்லோரைச் சான்றோராகக் கருதாமல் பலவீனர்களாகக் கருதிவிடுதலும் நேர்மாறான விளைவுகளை ஆக்குதலும் சம்பாவிதமேயாம். ஆயினும் இச்சாத்தியக்கூறினையும் புறக்கணித்துத் தீயோர்க்கும் நன்மை செய்தலே சான்றோர் கடன் என்னும் கிருத்துவத் தத்துவத்தைத் தன்னகத்து அடக்கியுள்ளது "இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு?" என்னும் குறள். இது இந்தியப் பொது அறப்பண்பாட்டினின்றும் புறம்பானது. இஃதெவ்வாறு இந்நூலில் இடம் பெற்றது எனில் அதற்கு ஒரு விடையே உண்டு. அதாவது வள்ளுவர் கி.பி. முதல் நூற்றாண்டில் மயிலாப்பூரில் வசித்தார் என்று கொள்ளுதற்கு இடமுண்டு; ஆதலின் அவ்வமயம் அவ்விடத்திற்கு வந்த கிருத்துவப் பிரசாரகர் (ஏசு கிருத்துவின் மாணவர்) பரப்பிய அச்சமயக் கோட்பாடுகளின் தாக்கத்தால் பிறந்தது என்னும் விளக்கம் ஒன்றே பொருந்துவதாகும். திருக்குறள் ஆகிய நூல் முழுவதிலும் உள்ளடக்கமான பண்டைய பார்ப்பன-இந்து சமயப் பண்பாட்டின் கருவின் மேற்பூச்சாக ஜைன, பெளத்த, கிருத்துவக் கொள்கைகள் அமைந்துள்ளமை காணப்படும். ஆய்வாளர்கள் இதனைக் காண்பர்; ஆனால் காணவிரும்பாதார் காணார் என்பதில் வியப்பின்று. (பக்கங்கள்: 198-199)

குறிப்பு[தொகு]

  1. ந. சுப்ரமண்யன், திருக்குறட் கட்டுரைகள், என்னெஸ் பப்ளிகேஷன்ஸ், உடுமலைப்பேட்டை, 2004, பக்கங்கள்: 202.