திருவள்ளுவமாலை
திருக்குறளின் பெருமைகளையும், திருவள்ளுவரின் பெருமைகளையும் புகழ்ந்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பு திருவள்ளுவ மாலை ஆகும். ஒருநூலுக்கோ, நூலாசிரியனுக்கோ இப்படி எல்லாப் புலவர்களும் வரிசை கட்டிப் புகழாரம் தொடுத்தளித்தது, திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் மட்டுமே கிடைத்த முதற் சிறப்பு.திருவள்ளுவமாலையில் ஐம்பத்தைந்து புலவர்களின் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இடைக்காடர், அவ்வையார் இருவரும் குறட்பாவிலும், ஏனைய ஐம்பத்து மூவரும் வெண்பாக்களாலும், வள்ளுவரையும் திருக்குறளையும் புகழ்ந்த பாமாலைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
இவை தவிர்த்துக் கல்லாடனார், சிவப்பிரகாசர், பாரதியார், பேராசிரியர் மனோன்மணீயம் பெ.சுந்தரனார், கவிமணி, பாரதிதாசன் போன்ற இடைக்கால மற்றும் பிற்காலப் புலவர்களும் திருக்குறளைப் புகழ்ந்து பாடல்கள் இயற்றி உள்ளனர். அவை திருவள்ளுவ மாலையில் இடம் பெறா.
[தொகு] அசரீரி
-
- திருத்தகு தெய்வத் திருவள் ளுவரோடு
- உருத்தகு நற்பலகை ஒக்க - இருக்க
- உருத்திர சன்மர் எனஉரைத்து வானில்
- ஒருக்கஓ என்றதுஓர் சொல்
[தொகு] நாமகள்
-
- நாடா முதல்நான் மறைநான் முகன்நாவில்
- பாடா இடைப்பா ரதம்பகர்ந்தேன் - கூடாரை
- எள்ளிய வென்றி இலங்கிலைவேல் மாறபின்
- வள்ளுவன் வாயதுஎன் வாக்கு
[தொகு] இறையனார்
-
- என்றும் புலராது யாணர்நாள் செல்லுகினும்
- நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க் - குன்றாத
- செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்ம்
- மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்
[தொகு] உக்கிரப் பெருவழுதியார்
-
- நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்
- தான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த - நூல்முறையை
- வந்திக்க சென்னிவாய் வாழ்த்துகநல் நெஞ்சம்
- சிந்திக்க கேட்க செவி
[தொகு] கபிலர்
-
- தினையளவு போதாச் சிறுபுல் நீர்கண்ட
- பனையளவு காட்டும் படித்தால் - மனையளகு
- வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார்
- வெள்ளைக் குறட்பா விரி
[தொகு] பரணர்
-
- மாலும் குறளாய் வளர்ந்துஇரண்டு மாணடியால்
- ஞாலம் முழுதும் நயந்தளந்தான் - வாலறிவின்
- வள்ளுவரும் தம்குறள்வெண் பாவடியால் வையத்தார்
- உள்ளுவவெல்லாம் அளந்தார் ஓர்ந்து
[தொகு] நக்கீரர்
-
- தானே முழுதுணர்ந்து தண்தமிழின் வெண்குறளால்
- ஆனா அறம்முதலா அந்நான்கும் - ஏனோர்க்கு
- ஊழின் உரைத்தாற்கும் ஒண்ணீர் முகிலுக்கும்
- வாழிஉலகு என்ஆற்றும் மற்று
[தொகு] மாமூலனார்
-
- அறம்பொருள் இன்பம்வீ டென்னுமந் நான்கின்
- திறந்தெரிந்து செப்பிய தேவை - மறந்தேயும்
- வள்ளுவன் என்பான் ஓர்பேதை அவன்வாய்ச்சொல்
- கொள்ளார் அறிவுடையார்
[தொகு] கல்லாடர்
-
- ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறுஎனின்
- அன்றென்ப ஆறு சமயத்தார் - நன்றுஎன
- எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார்
- முப்பால் மொழிந்த மொழி
[தொகு] சீத்தலைச் சாத்தனார்
-
- மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும்
- மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும் - மும்மாவும்
- தாமுடைய மன்னர் தடமுடிமேல் தாரன்றோ
- பாமுறைதேர் வள்ளுவர்முப் பால்
[தொகு] மருத்துவன் தாமோதரனார்
-
- சீந்திநீர்க் கண்டம் தெறிசுக்குத் தேன்அளாய்
- மோந்தபின் யார்க்கும் தலைக்குத்தில் - காந்தி
- மலைக்குத்தும் மால்யானை வள்ளுவர் முப்பாலால்
- தலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு
[தொகு] நாகன் தேவனார்
-
- தாளார் மலர்ப்பொய்கை தாம்குடைவார் தண்ணீரை
- வேளாது ஒழிதல் வியப்பன்று - வாளாதாம்
- அப்பால் ஒருபாவை ஆய்பவோ வள்ளுவனார்'
- முப்பால் மொழிமூழ்கு வார்
[தொகு] அரிசில்கிழார்
-
- பரந்த பொருள் எல்லாம் பாரறிய வேறு
- தெரிந்து திறந்தொறும் சேரச் - சுருங்கிய
- சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல்
- வல்லார்ஆர் வள்ளுவர்அல் லால்
[தொகு] பொன்முடியார்
-
- கான்நின்ற தொங்கலாய் காசிபனார் தந்ததுமுன்
- கூநின்று அளந்த குறளென்ப - நூல்முறையான்
- வான்நின்று மண்ணின்று அளந்ததே வள்ளுவனார்
- தாம்நின்று அளந்த குறள்
[தொகு] கோதமனார்
-
- ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப்
- போற்றி யுரைத்துஏட்டின் புறத்தெழுதார் - ஏட்டெழுதி
- வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச்
- சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று
[தொகு] நத்தத்தனார்
-
- ஆயிரத்து முன்னூற்று முப்பது அருங்குறளும்
- பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின் - போயொருத்தர்
- வாய்கேட்க நூலுளவோ மன்னுதமிழ்ப் புலவ
- ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்
[தொகு] முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
-
- உள்ளுதல் உள்ளி உரைத்தல் உரைத்ததனைத்
- தெள்ளுதல் அன்றே செயற்பால - வள்ளுவனார்
- முப்பாலின் மிக்க மொழியுண்டு எனப்பகர்வார்
- எப்பா வலரினும் இல்
[தொகு] ஆசிரியர் நல்லந்துவனார்
-
- சாற்றிய பல்கலையும் தப்பா அருமறையும்
- போற்றி உரைத்த பொருள் எல்லாம் - தோற்றவே
- முப்பால் மொழிந்த முதற்பா வலரொப்பார்
- எப்பா வலரினும் இல்
[தொகு] கீரந்தையார்
-
- தப்பா முதற்பாவால் தாம்மாண்ட பாடலினால்
- முப்பாலின் நாற்பால் மொழிந்தவர் - எப்பாலும்
- வைவைத்த கூர்வேல் வழுதி மனம்மகிழத்
- தெய்வத் திருவள் ளுவர்
[தொகு] சிறுமேதாவியார்
-
- வீடொன்று பாயிரம் நான்கு விளங்கறம்
- நாடிய முப்பத்துமூன்று ஒன்றூழ் - கூடுபொருள்
- எள்ளில் எழுபது இருபதிற்றைந் தின்பம்
- வள்ளுவர் சொன்ன வகை
[தொகு] நல்கூர் வேள்வியார்
-
- உப்பக்கம் நோக்கி உபகேசி தோள் மணந்தான்
- உத்தர மாமதுரைக்கு அச்சென்ப - இப்பக்கம்
- மாதானுபங்கி மறுவுஇல் புலச்செந்நாப்
- போதார் புனற்கூடற்கு அச்சு
[தொகு] தொடித்தலை விழுத்தண்டினார்
-
- அறம்நான்கு அறிபொருள் ஏழொன்று காமத்
- திறம்மூன்று எனப்பகுதி செய்து - பெறல்அறிய
- நாலும் மொழிந்தபெரு நாவலரே நன்குணர்வார்
- போலும் ஒழிந்த பொருள்
[தொகு] வெள்ளி வீதியார்
-
- செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த
- பொய்யா மொழிக்கும் பொருள்ஒன்றே - செய்யா
- அதற்குரியர் அந்தணரே ஆராயின் ஏனை
- இதற்குரியர் அல்லாதார் இல்
[தொகு] மாங்குடி மருதனார்
-
- ஓதற்கு எளிதாய் உணர்தற்கு அரிதாகி
- வேதப் பொருளாய் மிகவிளங்கித் - தீதற்றோர்
- உள்ளுதொறு உள்ளுதொறு உள்ளம் உருக்குமே
- வள்ளுவர் வாய்மொழி மாண்பு
[தொகு] எறிச்சலூர் மலாடனார்
-
- பாயிரம் நான்குஇல் லறம்இருபான் பன்மூன்றே
- தூய துறவறம்ஒன் றுஊழாக - ஆய
- அறத்துப்பால் நால்வகையா ஆய்ந்துரைத்தார் நூலின்
- திறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து
[தொகு] போத்தியார்
-
- அரசியல் ஐயைந்து அமைச்சியல் ஈரைந்து
- உருவல் அரண்இரண்டு ஒன்றுஒண்கூழ் - இருவியல்
- திண்படை நட்புப் பதினேழ்குடி பதின்மூன்று
- எண்பொருள் ஏழாம் இவை
[தொகு] மோசிகீரனார்
-
- ஆண்பால் ஏழ்ஆ றிரண்டுபெண்பால் அடுத்தன்பு
- பூண்பால் இருபால்ஓர் ஆறாக - மாண்பாய
- காமத்தின் பக்கம்ஒரு மூன்றாகக் கட்டுரைத்தார்
- நாமத்தின் வள்ளுவனார் நன்கு
[தொகு] காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
-
- ஐயாரும் நூறும் அதிகாரம் மூன்றுமாம்
- மெய்யாய வேதப் பொருள்விளங்கப் - பொய்யாது
- தந்தான் உலகிற்குத் தான்வள் ளுவனாகி
- அந்தாமரை மேல் அயன்
[தொகு] மதுரைத் தமிழ்நாகனார்
-
- எல்லாப் பொருளும் இதன்பால்உள இதன்பால்
- இல்லாத எப்பொருளும் இல்லையால் - சொல்லால்
- பரந்த பாவால் என்பயன் வள்ளுவனார்
- சுரந்தபா வையத் துணை
[தொகு] பாரதம் பாடிய பெருந்தேவனார்
-
- எப்பொருளும் யாரும் இயல்பின் அறிவுறச்
- செப்பிய வள்ளுவர்தாம் செப்பவரும் - முப்பாற்குப்
- பாரதஞ் சீராம கதைமனுப் பண்டைமறை
- நேர்வனமற் றில்லை நிகர்
[தொகு] உருத்திர சன்மகண்ணர்
-
- மணற்கிளைக்க நீர்ஊறும் மைந்தர்கள் வாய்வைத்து
- உணச்சுரக்கும் தாய்முலை ஒண்பால் - பிணக்குஇலா
- வாய்மொழி வள்ளுவர் முப்பால்மதிப் புலவோர்க்கு
- ஆய்தொறும் ஊறும் அறிவு
[தொகு] பெருஞ்சித்திரனார்
-
- ஏதம்இல் வள்ளுவர் இன்குறள் வெண்பாவினால்
- ஓதிய ஒண்பொருள் எல்லாம் உரைத்ததனால்
- தாதுஅவிழ் தார்மாற தாமே தமைப்பயந்த
- வேதமே மேதக் கன
[தொகு] நரிவெரூஉத் தலையார்
-
- இன்பம் பொருள்அறம் வீடுஎன்னும் இந்நான்கும்
- முன்பு அறியச்சொன்ன முதுமொழிநூல் - மன்பதைகட்கு
- உள்ள அரிதென்று அவைவள் ளுவர்உலகம்
- கொள்ள மொழிந்தார் குறள்
[தொகு] மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர்க் கிழார்
-
- புலவர் திருவள்ளுவர் அன்றிப் பூமேல்
- சிலவர் புலவர் எனச்செப்பல் - நிலவு
- பிறங்குஒளி மாமலைக்கும் பெயர்மாலை மற்றும்
- கறங்குஇருள் மாலைக்கும் பெயர்
[தொகு] மதுரை அறுவைவணிகன் இளவேட்டனார்
-
- இன்பமும் துன்பமும் என்னும் இவைஇரண்டும்
- மன்பதைக்கு எல்லாம் மனம்மகிழ - அன்பொழியாது
- உள்ளி உணர உரைத்தாரே ஓதுசீர்
- வள்ளுவர் வாயுறை வாழ்த்து
[தொகு] கவிசாகரப் பெருந்தேவனார்
-
- பூவிற்குத் தாமரையே பொன்னுக்குச் சாம்புநதம்
- ஆவிற்கு அருமுனியா ஆனைக்கு அகரும்பல்
- தேவில் திருமால் எனச்சிறந்த தென்பவே
- பாவிற்கு வள்ளுவர்வெண் பா
[தொகு] மதுரைப்பெருமருதனார்
-
- அறம்முப்பத் தெட்டு பொருள்எழுபது இன்பத்
- திறம்இருபத் தைந்தால் தெளிய - முறைமையால்
- வேதவிழுப் பொருளை வெண்குறளால் வள்ளுவனார்
- ஓதஅழக் கற்றது உலகு
[தொகு] கோவூர்க் கிழார்
-
- அறம்முதல் நான்கும் அகலிடத்தோர் எல்லாம்
- திறமுறத் தேர்ந்து தெளியக் - குறள்வெண்பாப்
- பன்னிய வள்ளுவனார் பால்முறைநேர் ஒவ்வாதே
- முன்னை முதுவோர் மொழி
[தொகு] உறையூர் முதுகூற்றனார்
-
- தேவிற் சிறந்ததிரு வள்ளுவர் குறள்வெண்
- பாவிற் சிறந்திடும்முப் பால்பகரார் - நாவிற்கு
- உயலில்லை சொற்சுவை ஓர்வில்லை மற்றும்
- செயலில்லை என்னும் திரு
[தொகு] இழிகண் பெருங்கண்ணனார்
-
- இம்மை மறுமை இரண்டும் எழுமைக்கும்
- செம்மை நெறியின் தெளிவுபெற - மும்மையின்
- வீடவற்றின் நான்கின் விதிவழங்க வள்ளுவனார்
- பாடினர் இன்குறள்வெண் பா
[தொகு] செயிர்க் காவிரியார் மகனார் சாத்தனார்
-
- ஆவனவும் ஆகாதனவும் அறிவுடையார்
- யாவரும் வல்லார் எடுத்தியம்பத் - தேவர்
- திருவள்ளுவர் தாமும் செப்பியவே செய்வார்
- பொருவில் ஒழுக்கம் பூண்டார்
[தொகு] செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனார்
-
- வேதப்பொருளை விரகால் விரித்துலகோர்
- ஓதத் தமிழால் உரைசெய்தார் - ஆதலால்
- உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப
- வள்ளுவர் வாய்மொழி மாட்டு
[தொகு] வண்ணக்கஞ் சாத்தனார்
-
- ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து இதனினிது
- சீரியது என்றொன்றைச் செப்பரிதால் - ஆரியம்
- வேதம் உடைத்து தமிழ்திரு வள்ளுவனார்
- ஓதுகுறட் பாஉடைத் து
[தொகு] களத்தூர்க் கிழார்
-
- ஒருவர் இருகுறளே முப்பாலின் ஓதும்
- தர்மம் முதல்நான்கும் சாலும் - அருமறைகள்
- ஐந்தும் சமயநூல் ஆறும்நம் வள்ளுவனார்
- புந்தி மொழிந்த பொருள்
[தொகு] நச்சுமனார்
-
- எழுத்துஅசை சீரடி சொற்பொருள் யாப்பு
- வழுக்கில் வனப்பு அணிவண்ணம் - இழுக்கின்றி
- என்றெவர் செய்தன எல்லாம் இயம்பின
- இன்றிவர் இன்குறள்வெண் பா
[தொகு] அக்காரக்கனி நச்சுமனார்
-
- கலைநிரம்பிக் காண்டற்கு இனிதாகிக் கண்ணின்
- நிலைநிரம்பும் நீர்மைய தேனும் - தொலைவுஇலா
- வான்ஊர் மதியம் தனக்குண்டோ வள்ளுவர்முப்
- பால்நூல் நயத்தின் பயன்
[தொகு] நப்பாலத்தனார்
-
- அறம்தகளி ஆன்ற பொருள்திரி இன்பு
- சிறந்தநெய் செஞ்சொல் தீதண்டு - குறும்பாவா
- வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள்
- உள்ளிருள் நீக்கும் விளக்கு
[தொகு] குலபதி நயனார்
-
- உள்ளக் கமலம் மலர்த்தி உளத்துஉள்ள
- தள்ளற்கு அரிய இருள் தள்ளுதலால் - வள்ளுவனார்
- வெள்ளைக் குறட்பாவும் வெங்கதிரும் ஒக்கும்எனக்
- கொள்ளத் தகுங்குணத்தைக் கொண்டு
[தொகு] தேனிக்குடிக் கீரனார்
-
- பொய்ப்பால பொய்யேயாய்ப் போயின பொய்அல்லா
- மெயப்பால மெய்யாய் விளங்கினவே - முப்பாலின்
- தெய்வத் திருவள் ளுவர்செப் பியகுறளால்
- வையத்து வாழ்வார் மனத்து
[தொகு] கொடிஞாழல் மாணிபூதனார்
-
- அறனறிந்தேம் ஆன்ற பொருளறிந்தேம் இன்பின்
- திறன்தெரிந்தேம் வீடு தெளிந்தேம் - மறன்எறிந்த
- வாளார் நெடுமாற வள்ளுவனார் தம்வாயால்
- கேளா தனவெல்லாம் கேட்டு
[தொகு] கவுணியனார்
-
- சிந்தைக்கு இனிய செவிக்கினிய வாய்க்கினிய
- வந்த இருவினைக்கு மாமருந்து - முந்திய
- நன்நெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார்
- பன்னிய இன்குறள்வெண் பா
[தொகு] மதுரைப் பாலாசிரியனார்
-
- வெள்ளி வியாழம் விளங்குஇரவி வெண்திங்கள்
- பொள்என நீக்கும் புறஇருளை - தெள்ளிய
- வள்ளுவர் இன்குறள் வெண்பா அகிலத்தோர்
- உள்இருள் நீக்கும் ஒளி
[தொகு] ஆலங்குடி வங்கனார்
-
- வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மடுக்கும்
- தெள்ளமுதின் தீஞ்சுவையும் ஒவ்வாதால் - தெள்ளமுதம்
- உண்டறிவார் தேவர் உலகடைய உண்ணுமால்
- வண்தமிழின் முப்பால் மகிழ்ந்து
[தொகு] இடைக்காடர்
-
- கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
- குறுகத் தறித்த குறள்
[தொகு] அவ்வையார்
-
- அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
- குறுகத் தறித்த குறள்
(திருவள்ளுவமாலை நிறைவு)
[தொகு] குறிப்புதவி
திருக்குறள் - பரிமேலழகர் உரை பின்னிணைப்பு.
[தொகு] இணைப்பு
மேலே உள்ள பாடல்கள் பற்றிய தொகுப்புக் கண்ணோட்டம் \ திருவள்ளுவ மாலை \ திருக்குறளுக்குப் புகழாரம்