திருக்குறள் பரிப்பெருமாள் உரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருக்குறள் பரிப்பெருமாள் உரை என்பது திருக்குறளுக்கு உரை எழுதிய பண்டைய உரையாசிரியர்களுள் ஒருவரான பரிப்பெருமாள் என்பவர் திருக்குறளுக்கு எழுதிய உரையைக் குறிக்கும். இவர் திருக்குறளுக்கு எழுதிய உரை மணக்குடவர் உரைக்கும் பிற்பட்டது ஆகும்.

பழைய உரையாசிரியர்கள் பத்துப்பேர்[தொகு]

திருக்குறளுக்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர்கள் பத்துப் பேர் என்பது மரபு. ஒரு பழம்பாடல் அவர்களது பெயரை இவ்வாறு குறிப்பிடுகிறது:

தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பரிதி பரிமே லழகர் - திருமலையர்
மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர் நூற்கு
எல்லையுரை செய்தார் இவர்.

இவர்களின் காலம் 10ஆம் நூற்றாண்டு முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை என அறிய முடிகின்றது. இந்தப் பதின்மருள், மணக்குடவர் முதல் உரையாசிரியர் என்பது ஆய்வாளர் துணிபு. நாம் அறியும் திருக்குறள் மூலத்தின் பதிவு இந்த உரைநூல் வழிதான் வாய்த்தது. அதன் பெறகே ஏனைய உரையாசிரியர்கள் வழியே திருக்குறள் மூலங்கள் பதிவு செய்யப்பெற்றுக் கிடைத்துள்ளன.

பழைய உரையாசிரியர்கள் பத்துப்பேர் என்றாலும், மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதியார், காலிங்கர், பரிமேலழகர் ஆகிய ஐவரின் உரைகளே இதுவரை கிடைத்துள்ளன. ஏனையோர் உரைகளில், ஒரு சில குறள்களுக்கு மட்டுமே உரைகள் கிடைத்துள்ளன.

மணக்குடவர் உரையும் பரிதிப்பெருமாள் உரையும்[தொகு]

பரிதிப்பெருமாள் திருக்குறளுக்கு எழுதும் உரை, மணக்குடவர் ஏற்கனவே எழுதிய உரையையே மிகவும் அடியொற்றிச் செல்கின்றது. பெரும்பான்மையான இடங்களில் இரண்டு உரைகளுக்கும் இடையே யாதொரு வேறுபாடும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பரிப்பெருமாளின் திருக்குறள் அமைப்பு[தொகு]

மணக்குடவர் திருக்குறளை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று மூன்று பால்களாகப் பிரித்திருப்பது போலவே, பரிப்பெருமாளும் பிற பழைய உரையாசிரியர்களும் செய்கின்றனர்.

முப்பாலுக்குள் நாற்பால் காணும் முயற்சி[தொகு]

திருக்குறள் அறம், பொருள், காமம் என்னும் முப்பால் பிரிவைக் கொண்டதாயினும், அப்பால்களுக்குள் நான்காவது பாலாக "வீடு" என்பதைக் காணும் முயற்சி பழைய உரையாசிரியர்களிடம் தெரிகிறது. இதைப் பரிதிப்பெருமாளும் பரிமேலழகரும் செய்வதற்கு முன்னரே மணக்குடவர் செய்துள்ளார். அவரது உரையில்,

புருடார்த்தமாகிய தன்மார்த்த காம மோட்சங்களுள் முதன் மூன்றனையும் வழுவாதொழுகவே மோட்சம் எய்தலான், அதற்கு வேறு வகுத்துக் கூற வேண்டுவது இன்மையின், அஃது ஒழித்துத் தன்மார்த்த காமப் பகுதிகளை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று பெயர் கூறுவார்...

என்று மணக்குடவர் விளக்குகிறார்.

அதுபோலவே பழைய உரையாசிரியர் பரிப்பெருமாளும் கூறுகின்றார்:

உலகத்து மக்கட்கு உறுதி பயத்தல் காரணமாகப் பல வகைப்பட்ட சமய நூல்கள் எல்லாவற்றுள்ளும் துணிந்துரைத்த அறம் பொருள் இன்பம் வீடு நான்கினையும் அருங்கினமுகத்து உணர்த்துவான் எடுத்துக் கொண்டார்; அவற்றுள் வீடாவது அறஞ்செய்தாரது பயனாதலின் அவ்வீடு பேற்றை அறத்தினுள் அடக்கி அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்றார்.

திருக்குறளைப் புருடார்த்த வரையறைக்குள் கொண்டு வருகின்ற பரிமேலழகர் கூற்று[1] யாவரும் அறிந்ததே:

இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்தம் இல் இன்பத்து அழிவில் வீடும் நெறியறிந்து எய்துதற்குரிய மாந்தர்க்கு உறுதி என உயர்ந்தோரால் எடுக்கப்பட்ட பொருள் நான்கு. அவை, அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அவற்றுள் வீடு என்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆதலில், துறவறமாகிய காரண வகையாற் கூறப்படுவது அல்லது இலக்கண வகையாற் கூறப்படாமையின் நூற்களாற் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம்.

இப்பார்வை, திருவள்ளுவரை ஒரு "தெய்வ" நிலைக்கு உயர்த்தும் முயற்சி இருந்ததையே சுட்டுகிறது.


பரிப்பெருமாள் அறத்துப்பாலைப் பிரிக்கும் முறை[தொகு]

பண்டைய திருக்குறள் உரையாசிரியரான மணக்குடவர் அறத்துப்பாலைப் பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்று நான்காகப் பகுத்துள்ளது போன்றே, பரிப்பெருமாளும் பிற பழைய உரையாசிரியர்களும் அறத்துப்பாலை நான்கு இயல்களாகப் பகுக்கின்றனர்.

பரிப்பெருமாள் பொருட்பாலைப் பிரிக்கும் முறை[தொகு]

பரிப்பெருமாள் திருக்குறளின் பொருட்பாலைப் பிரிப்பதில், மணக்குடவர் எந்த முறையைப் பின்பற்றினாரோ அதையே பின்பற்றுகின்றார். ஆக, மணக்குடவரும் பரிப்பெருமாளும் பொருட்பாலைப் பிரிக்கும் முறை இது:

இயல் பெயர் அதிகாரங்கள் அமைப்பு
அரசியல் 39 முதல் 63 முடிய
அமைச்சியல் 64 முதல் 73 முடிய
பொருளியல் 74 முதல் 78 முடிய
நட்பியல் 79 முதல் 83 முடிய
துன்பவியல் 84 முதல் 95 முடிய
குடியியல் 96 முதல் 108 முடிய

பரிப்பெருமாள் காமத்துப்பாலைப் பிரிக்கும் முறை[தொகு]

காமத்துப்பால் இயல் பகுப்பில் உரையாசிரியர்களிடையே பெருத்த வேறுபாடு காணப்படுகின்றது. மணக்குடவர் காமத்துப்பாலைக் குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் எனப் பகுத்து ஒவ்வோர் இயலுக்கும் ஐந்தைந்து அதிகாரங்களாகக் கொண்டுள்ளார் என்பர்.

பரிப்பெருமாள் காமத்துப்பாலில் பின்வருமாறு ஒரு பகுப்பினைச் செய்துள்ளதாக அறியமுடிகின்றது:

அருமையிற் கூடல் - அதிகாரங்கள்: 109 - 111
பிரிந்து கூடல் - அதிகாரங்கள்: 112 - 129
ஊடிக்கூடல் - அதிகாரங்கள்: 130 - 133

பரிப்பெருமாள் அமைப்புப்படி இயலுக்குள் வரும் அதிகார வைப்பு முறை[தொகு]

திருக்குறளின் இயல்களில் வரும் அதிகார வைப்புகளிலும், அதிகார முறை வைப்புகளிலும் மணக்குடவர் போக்குக்கும் பரிதிப்பெருமாள் உட்பட பிற பழைய ஆசிரியர்களின் போக்குக்கும் வேறுபாடுகள் உள்ளன.

இனியவை கூறல்
அடக்கமுடைமை
அழுக்காறாமை
வெஃகாமை
புறங்கூறாமை

ஆகிய ஐந்து அதிகாரங்களைத் துறவறவியலுள் முறையே 26, 27, 30, 31, 32 -ஆவது அதிகாரங்களாக மணக்குடவர் அமைத்துள்ளார்.

ஆனால், பரிதிப்பெருமாளும் பிற பழைய உரையாசிரியர்களும் இந்த அமைப்பு முறையை மாற்றி, இவற்றை இல்லறவியலில் முறையே 10, 13, 17, 18, 19 - ஆம் அதிகாரங்களாக அமைத்துள்ளார்கள்.

அதேபோல், மணக்குடவர் இல்லறவியலில் வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, புலால் மறுத்தல், கள்ளாமை என்னும் அதிகாரங்களை முறையே 10, 16, 17, 18, 19, 20 ஆம் அதிகாரங்களாக அமைத்திருக்க, பரிதிப்பெருமாளும் பிற பழைய உரையாசிரியர்களும் அவற்றை மாற்றி, துறவறவியலில் முறையே 30, 31, 32, 33, 26, 29 -ஆம் அதிகாரங்களாக அமைத்துள்ளார்கள்.

பரிதிப்பெருமாளின் குறள் வைப்பு முறை[தொகு]

அதிகாரங்களுக்குள் வரும் குறள்களை வரிசைப்படுத்தி வைப்பதில் மணக்குடவர் ஒரு முறையைக் கையாளுகின்றார். ஆனால் பரிதிப்பெருமாள் உள்ளிட்ட பிற பழைய உரையாசிரியர்கள் ஒவ்வொருவரும் அவரவர் எண்ணப்படி குறள் வைப்பு வரிசைமுறையை மாற்றியுள்ளார்கள்.

திருக்குறளின் முதல் அதிகாரத்தை எடுத்துக்காட்டாகப் பார்க்கலாம்:

திருக்குறள் முதல் அதிகாரத்தில் வரும் குறள்களின் முதல் சீர்கள் மணக்குடவர் வைப்பு முறை பரிப்பெருமாள் வைப்பு முறை பரிதியார் வைப்பு முறை காலிங்கர் வைப்பு முறை பரிமேலழகர் வைப்பு முறை
அகர முதல எழுத்தெல்லாம் 1 1 1 1 1
கற்றதனால் ஆய பயன் என்கொல் 2 2 2 2 2
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் 3 3 3 3 3
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு 6 6 5 7 4
இருள் சேர் இருவினையும் சேரா 7 7 6 6 5
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க 8 8 7 7 6
தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு 4 4 6 4 7
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு 5 5 10 9 8
கோளில் பொறியில் குணமிலவே 10 10 8 5 9
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் 9 9 9 10 10

பரிதிப்பெருமாள் கொள்ளும் திருக்குறள் பாடமும் வேறுபாடுகளும்[தொகு]

தலைமுறை தலைமுறையாக ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டு வந்த திருக்குறளின் படிகள் பல பாட வேறுபாடுகளைக் கொண்டிருப்பதில் வியப்பில்லை.

என்றாலும், மணக்குடவர் திருக்குறளின் முதல் உரையாசிரியராக விளங்குவதால் அவர் கையாளுகின்ற மூல பாடத்தை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் அவருடைய மூல பாடத்திலிருந்து, பின் வந்த பழைய உரையாசிரியர்களான பரிப்பெருமாள், பரிதியார், காலிங்கர், பரிமேலழகர் ஆகியோர் பின்வரும் எண்ணிக்கையில் வேறுபடுவதை அறிய முடிகிறது:

மணக்குடவர் குறள் பாடத்திலிருந்து வேறுபாடுகள்

உரையாசிரியர் குறள் பாட வேறுபாடுகளின் எண்ணிக்கை
பரிப்பெருமாள் 16
பரிதியார் 20
காலிங்கர் 171
பரிமேலழகர் 120

மேலே காட்டிய பட்டியலிலிருந்து பரிதிப்பெருமாள் மணக்குடவரின் திருக்குறள் பாடத்திலிருந்து பெரிதும் மாறுபடவில்லை என்று தெரிகிறது. என்றாலும், பிற்காலத்தில் திருக்குறளுக்கு முறை மாறிய உரைகள் எழுந்ததற்கு வித்திட்டோர் பழைய உரையாசிரியர்களே என்பது தெளிவாகிறது.

பரிதிப்பெருமாளின் உரை நயம்[தொகு]

நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகை என்ப வாய்மைக் குடிக்கு. (குறள்: 343)

என்னும் குறளுக்கு பரிப்பெருமாள் எழுதும் உரை இது:

முகமலர்ச்சியும் கொடையும் இனியவை கூறலும் பிறரை இகழாமையும் ஆகிய நான்கினையும் மெய்ம்மையுடைய குலத்தின் உள்ளார்க்கு அங்கம் என்று செல்லுவர்.

இந்த உரை மணக்குவடவர் இக்குறளுக்கு எழுதும் உரையை அப்படியே மீண்டும் எடுத்துக் கூறுவதாக உள்ளது. எனவே, மணக்குடவர் உரையின் சிறப்புகள் அவரை அப்படியே எடுத்து எழுதுகின்ற பரிப்பெருமாளது உரையின் சிறப்புகளாகவும் மாறுகின்றன என்பதில் ஐயமில்லை.

இக்குறளுக்கு மணக்குடவரும் அவரை அடியொற்றி பரிப்பெருமாளும் தரும் உரை பற்றி எடுத்துரைக்கின்ற அறிஞர் ச. தண்டபாணி தேசிகர் பின்வருமாறு கூறுகிறார்:

"நகை" என்பதற்கு "முகமலர்ச்சி" என்றும், "மகிழ்ச்சி" என்றும் உரை கூறுவர். இவற்றுள் மகிழ்ச்சி மனத்தின் நிறைவாகவும் மலர்ச்சி மகிழ்ச்சியின் விளைவாக முகத்தில் காணப்படும் மெய்ப்பாடாகலானும் வேறென்றே துணியப்படும் ஆதலால் "மலர்ச்சி" என்ற உரையே சிறந்தது. மகிழ்ச்சியைப் பிறரறியத் துணையாயிருப்பது மலர்ச்சியே ஆதலான்.

ஈண்டு நகை என்றது இகழ்ச்சிக் குறிப்பானும் துன்ப மிகுதியானும், இன்ப நுகர்ச்சியானும் தோன்றும் எள்ளல் முதலிய நான்கனடியாக வந்ததன்று. பெறுதற்கரியாரைப் பெற்றுவிட்டோமே என்றும், அவர்கட்கும் ஈயவும், இன்சொல் கூறவும், வாய்ப்பினைப் பெற்றோமே என்றும் எண்ண மனத்தின்கண் நிகழும் மனநிறைவே மகிழ்ச்சி, அதன் வெளிப்பாடே முகமலர்ச்சி, மலர்ச்சியென்ற உரையே சிறக்கும், மலர்ச்சிதான் ஏற்பானை அணுகச் செய்வது ஆகலான்.

மேலும் காண்க[தொகு]

மணக்குடவர் (திருக்குறள் உரையாசிரியர்)
திருக்குறள் பழைய உரைகள்
திருக்குறள் வைப்புமுறை
திருக்குறள் அமைப்பும் முறையும் (நூல்)

ஆதாரங்கள்[தொகு]

  1. முனைவர் இரா. சாரங்கபாணி, திருக்குறள் பரிமேலழகர் உரை, தொகுதி 1 அறத்துப்பால், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, இரண்டாம் பதிப்பு, 2003, பக். 33).


தொடர் வரிசை எண் திருக்குறளுக்கு முறை மாறிய உரை வகுத்த ஆசிரியர் உரையாசிரியர் வாழ்ந்த காலம்/உரை வெளியான ஆண்டு முறை மாறிய உரையின் தன்மை
0 மணக்குடவர் பழைய உரையாசிரியர் - பொ.ஊ. சுமார் 10ஆம் நூற்றாண்டு மணக்குடவர் உரையில் அமைந்த திருக்குறள் மூலப் பதிவே முதற் பதிவு என்பதாலும், பரிமேலழகர் மணக்குடவருக்கு இருநூறு அல்லது முந்நூறு ஆண்டுகள் பிற்பட்டவர் என்பதாலும், திருக்குறளில் காணும் பால், இயல், அதிகாரம், குறள்கள் போன்றவற்றிலான வைப்பு முறைகளை மணக்குடவர் அவர்களின் உரையை அடிப்படையாகக் கொண்டு காண்பதுதான் முறை
1 காலிங்கர் பழைய உரையாசிரியர் - பொ.ஊ. சுமார் 10-13ஆம் நூற்றாண்டு முப்பால் பிரிவு ஏற்கப்படுகிறது. ஆனால் இயல், அதிகாரம், அதிகாரங்களில் வரும் குறட்பாக்கள் ஆகியவற்றின் வைப்பு முறையில் மணக்குடவரிலிருந்து வேறுபாடு உள்ளது. மணக்குடவரிலிருந்து பாட வேறுபாடுகள்: 171.
2 பரிதியார் பழைய உரையாசிரியர் - பொ.ஊ. சுமார் 10-13ஆம் நூற்றாண்டு முப்பால் பிரிவு ஏற்கப்படுகிறது. ஆனால் இயல், அதிகாரம், அதிகாரங்களில் வரும் குறட்பாக்கள் ஆகியவற்றின் வைப்பு முறையில் மணக்குடவரிலிருந்து வேறுபாடு உள்ளது. மணக்குடவரிலிருந்து பாட வேறுபாடுகள்: 20.
3 பரிப்பெருமாள் பழைய உரையாசிரியர் - பொ.ஊ. சுமார் 10-13ஆம் நூற்றாண்டு முப்பால் பிரிவு ஏற்கப்படுகிறது. ஆனால் இயல், அதிகாரம், அதிகாரங்களில் வரும் குறட்பாக்கள் ஆகியவற்றின் வைப்பு முறையில் மணக்குடவரிலிருந்து வேறுபாடு உள்ளது. மணக்குடவரிலிருந்து பாட வேறுபாடுகள்: 16.
4 பரிமேலழகர் பழைய உரையாசிரியர் - பொ.ஊ. 13ஆம் நூற்றாண்டு முப்பால் பிரிவை ஏற்கின்றார். ஆனால் இயல், அதிகாரம், அதிகாரங்களில் வரும் குறட்பாக்கள் ஆகியவற்றின் வைப்பு முறையில் மணக்குடவரிலிருந்து பல இடங்களில் வேறுபடுகின்றார். மணக்குடவரிலிருந்து பாட வேறுபாடுகள்: 120.
5 சுகாத்தியர் T.M. Scott என்ற ஆங்கில நாட்டு அறிஞர்; தம் பெயரை "சுகாத்தியர்" என்று தமிழ்ப்படுத்திக் கொண்டார் - உரை வெளியீடு: 1889: "திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்த குறள் மூலமும் சுகாத்தியர் இயற்றிய கருதுரயட்டவணையும் பொழிப்புரயும்" திருக்குறளின் முப்பால்களின் பெயர்களை மாற்றினார். அறத்துப்பாலிலுள்ள பாயிரத்தைத் தனியே பிரித்து அப்பாயிரத்துக்கு "நூன்முகம்" என்று பெயரிட்டு, அந்தப் பாயிரத்தில் வரும் அதிகாரப் பெயர்களையும் மாற்றியமைத்தார். ஒவ்வொரு பாலையும் மூன்று ஆண்மைகளாகவும், ஒவ்வோர் ஆண்மையையும் மூன்று இயல்களாகவும், ஒவ்வோர் இயலையும் மூன்று உடைமைகளாகவும் பிரித்தார். எதுகை மோனை அமைவுகளில் தாம் கருதும் அமைவு கருதிப் பெரும் மாற்றங்களைச் செய்தார். அவரே புதுப்புதுக் குறள்களை உருவாக்குவதுபோல் தெரிகிறது.
6 வ. உ. சிதம்பரனார் உரை வெளியீடு: 1935: "திருக்குறள் அறத்துப்பால் விருத்தியுரையுடன்" திருக்குறளில் வரும் முதல் மூன்று அதிகாரங்களை இடைச்செருகல் என்று கருதுகிறார். எனவே, அப்பகுதியை "இடைப்பாயிரம்" என்கிறார். அறத்துப்பால் என்பதை அறப்பால் என்று மாற்றுகிறார். காமத்துப்பாலை இன்பப்பால் என்கிறார். அறத்துப்பாலில் மட்டும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் திருக்குறள் பாடத்தைத் திருத்தியுள்ளார். சில வேளைகளில் பரிமேலழகருக்கு முற்பட்ட பழைய உரையாசிரியர்களைப் பின்பற்றி இத்திருத்தங்களைச் செய்துள்ளார்.
7 திரு. வி. கலியாணசுந்தரனார் உரை வெளியீடு: 1939: "திருக்குறள் விரிவுரை - பாயிரம்"; 1941: "திருக்குறள் விரிவுரை - அறத்துப்பால்-இல்லறவியல்" இவர் செய்த முக்கிய மாற்றம், அதிகாரங்களில் வரும் குறள்களின் வைப்பு முறையை மாற்றியது ஆகும். பரிமேலழகரைப் போலவே திரு.வி.க.வும் தம் போக்கிற்கேற்ப குறட்பாக்களின் வைப்புமுறையை மாற்றியுள்ளார். அதற்கான காரணங்களையும் கூறுகின்றார்.
8 மு. வரதராசன் உரை வெளியீடு: 1948: "திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்" இவர் திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் என்னும் நூலில் பால் அமைப்பு முறையைக் காமத்துப்பால், பொருட்பால், அறத்துப்பால் என்று வரிசை மாற்றி வைத்துள்ளார். ஆனால் 1949இல் மு. வரதராசனார் "திருக்குறள் தெளிவுரை" என்னும் நூலில் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்றே வரிசைப்படுத்தியுள்ளார். உரை நூலில் மரபு மாறினால் குழப்பம் ஏற்படும் என்ற காரணத்தால் பழைய மரபை அப்படியே பயன்படுத்தியுள்ளார்.
9 புலவர் அ.மு. குழந்தை உரை வெளியீடு: 1949: "திருக்குறள் குழந்தையுரை" பரிமேலழகரின் வைதிக உரைக்கு மாற்றாக, திராவிட இயக்கப் பின்னணியில் முதலில் வெளிவந்த உரை "திருக்குறள் புலவர் குழந்தையுரை" ஆகும். இவர் திருக்குறளுக்குப் பகுத்தறிவு நோக்கில் எளிமையாகப் புரியும் வகையில் உரை வழங்குவதையே முதன்மை நோக்காகக் கொண்டுள்ளார். எனவே, இயல், அதிகாரப் பகுப்பு போன்றவற்றில் மிகுந்த கவனம் செலுத்தவில்லை; என்றாலும் நடைமுறைக்கு ஏற்ப அதிகார வைப்பு முறையில் சில மாற்றங்களைச் செய்துகொள்கின்றார்.
10 ரா.ந. கல்யாணசுந்தரம் உரை வெளியீடு: 1955: "தொகுப்புத் திருக்குறள் (மூலமும் உரையும்)" இவரது உரை நூலில், திருக்குறளில் வரும் இறுதிச் சீர்களின் அகரவரிசையில் குறள்களை மாற்றி அமைத்து, குறட்பாக்களுக்குப் பரிமேலழகரின் உரையைத் தழுவி உரைகண்டுள்ளார். நினைவாற்றல் பயிற்சிக்கு இது பெரும் துணையாகும். இது முறைமாறிய அமைப்பு ஆயினும் பயனுள்ள ஒன்று.
11 டாக்டர் தே. ஆண்டியப்பன் உரை வெளியீடு: 1978: "குறள் கண்ட நாடும் வீடும்" இந்நூலில் இவர் பொருட்பாலில் தொடங்கி, 1330 குறள்களையும் அவற்றின் அதிகார உள்ளடக்கத்தைச் சிதைக்காமல், அதிகாரங்களை மாற்றி, நாடும் வீடும் என்பதற்குள் அடக்கி விடுகின்றார். இந்நூல் ஓர் உரைத்தொகுப்பு விளக்க ஆய்வுநூல் என்னும் முறையில் அமைகின்றது.
12 கு. ச. ஆனந்தன் உரை வெளியீடு: 1986: "திருக்குறள் உண்மைப் பொருள்" இவர் தமது திருக்குறள் உண்மைப் பொருள் என்னும் நூலில், ஒரு புதிய பகுப்பு முறையை உருவாக்கிக் கொண்டு, அறத்துப்பாலையும் பொருட்பாலையும் ஒன்றாக்கி 1080 குறள்களையும் தாம் விரும்பும் வகையில் மாற்றியமைத்து, ஒரு புதிய பார்வையில் தருகின்றார். இவர் பால், இயல், அதிகாரம், அதிகாரத்தில் வரும் குறள்கள் என்னும் அனைத்தையும் மாற்றித் தாமே ஒரு புதுப் பகுப்பை உருவாக்கிக்கொண்டுள்ளார். 108 அதிகாரங்களை 115 தலைப்புகளில் அடக்கியுள்ளார். ஒரு தலைப்பில் ஒன்றுமுதல் 23 வரை குறட்பாக்கள் உள்ளடக்கமாகியுள்ளன. காமத்துப்பாலில் வரும் குறட்பாக்களை ஒரு நாடகப் போக்கில் மாற்றி அமைத்து உரை எழுதி தனி நூலாக 1989இல் "மலரினும் மெல்லிது காமம்" என்னும் பெயரில் வெளியிட்டார். இவருடைய படைப்பை உரைநூல் என்பதைவிட ஆய்வுநூல் எனலாம்.
13 கவிரத்தின நலங்கிள்ளி உரை வெளியீடு: 1990: "பொதுமறை அமுது" இவர் இந்நூலில் திருக்குறள் அதிகார முறையில் சில முக்கிய மாற்றங்கள் செய்துள்ளார். அதற்கான காரணங்களையும் காட்டுகின்றார்.
14 டாக்டர் ஜனகாசுந்தரம் உரை வெளியீடு: 1995: "திருக்குறள் தொகுப்புரை" இந்நூலில் இவர் இறுதிச் சீர் அடிப்படையில் திருக்குறளுக்கு உரைகண்டுள்ளார். குறள் வரும் அதிகார எண், அந்த அதிகாரத்தில் குறள் பெரும் வரிசை எண் போன்றவை தரப்படவில்லை. குறளின் எண் மட்டுமே சுட்டிக்காட்டப்படுகிறது.
15 சாலமன் பாப்பையா உரை வெளியீடு: 1995: "திருக்குறள் - உரையுடன்" இவர் திருக்குறள் வைப்பு முறையில் பல மாற்றங்கள் செய்து தம் உரை நூலை வெளியிட்டார். பால், இயல் என்னும் பிரிவுகளை விளக்கி, 133 அதிகாரங்களையும் ஏழு பிரிவுகளாகப் பிரித்துள்ளார். களவியலில் வரும் சில அதிகாரங்களைத் திருமண வாழ்க்கையில் வருமாறு இணைக்கிறார். திருவள்ளுவரின் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளை சமுதாயம் என்னும் பிரிவின்கீழ் கொண்டுவருகின்றார்.
16 ஆரூர் தாஸ் உரை வெளியீடு: 2000: "அய்யன் திருக்குறள் அகரவரிசைக் குறள் அகராதி" இவர் வெளியிட்ட குறள் அகராதி நூலில் 1330 குறட்பாக்களையும் முதல் சீர்களின் அகர வரிசையில் தொகுத்து, அக்குறள்களுக்கு உரை வரைந்துள்ளார். குறள் எண்ணுக்குப் பரிமேலழகர் முறை வைப்பையே பயன்படுத்துகிறார். முறை மாறிய உரை ஆயினும் பயன் கருதிய மாற்றம் இது.
17 இராஜகாந்தீபன் உரை வெளியீடு: 2000: "ஆளவும் வாழவும்" இவர் வெளியிட்ட நூல் மரபு சார் உரை நூல் அல்ல என்றாலும், இவர் புதுக்கவிதை நடையில் தந்துள்ள விளக்கங்கள் பல குறள்களுக்கு விளக்கங்களாகவும் அமைந்துள்ளன. இவர் திருக்குறளை ஓர் அரசியல் நூலாகக் கொண்டு, அதில் காமத்துப்பாலுக்கு இடம் இல்லை என்கிறார். திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால்களில் வரும் 108 அதிகாரங்களையும் 38 பெயர்களாலான பகுப்புகளுள் அடக்க முயன்றுள்ளார். இது திருக்குறளுக்கு முற்றிலும் புதிய வகையிலான முறை வைப்பு.
18 புலவர் குடந்தையான் உரை வெளியீடு: 2001: "திருக்குறள் ஒரு பகுத்தறிவுப் பார்வை" இவர் வெளியிட்ட திருக்குறள் உரை நூலில் பால் வைப்பு முறை மாற்றங்களும் அதிகார வைப்பு முறை மாற்றங்களும் ஒரு சில குறட்பா மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. மு. வரதராசனைப் போல் இவரும் காமத்துப்பாலில் தொடங்குகின்றார். அதன் பின் பொருட்பால் வருகிறது. இதில் 58 அதிகாரங்களை மட்டுமே கொண்டு, மீதமுள்ள 12 அதிகாரங்களையும் அறத்துப்பாலில் சேர்த்து அறத்துப்பாலை 50 அதிகாரங்களாகக் கொள்கிறார். இவர் அதிகார வைப்பு முறையில் தமது பார்வைக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்துள்ளார். ஆனால், அதிகாரப் பெயர்களை மாற்றவில்லை, குறளில் வரும் சொற்களையும் மாற்றவில்லை.
19 அ.மா. சாமி உரை வெளியீடு: 2003: "திருக்குறள் செம்பதிப்பு (கருத்துரை)" கடந்த இரண்டாயிரம் ஆண்டுக் காலத்தில் திருக்குறள் பல முறை சிதைக்கப்பட்டது என்றும், எனவே "செம்பதிப்பு" ஒன்று தேவை என்றும் கருதி, அறிஞர்கள் ஒன்று கூடி அததகைய படைப்பை ஆக்காத நிலையில் தானாகவே அந்த முயற்சியில் இறங்கியதாக இவர் கூறுகிறார். தமது உரைக்கு "திருக்குறள் செம்பதிப்பு" என்றே பெயர் இட்டுள்ளார். பழைய உரைகாரர்களுள் முதல்வராகிய மணக்குடவரின் பாடத்தை மிகுதியாக எடுத்துக்கொண்டதாகக் கூறுகின்றார். அதிகாரங்களை மாற்றியுள்ளார். குறள்களில் சில சொல் மாற்றங்களையும் செய்துள்ளார். அதற்கான காரணங்கள் தரப்படவில்லை.
20 க.ப. அறவாணன் உரை வெளியீடு: 2006: "திருவள்ளுவம்" இவர் திருக்குறள் முழுமைக்கும் "கருத்துவழிப் பகுப்பு முறை"யில் தெளிவுரை எழுதியுள்ளார். காமத்துப்பால் அதிகார வரிசை மாற்றப்படவில்லை. ஆனால் "இக்காலத் தமிழ் வாசகர் தேவையை முன்னிறுத்தி" அறப்பாலிலும் பொருட்பாலிலும் அதிகார வரிசையை மாற்றியுள்ளார். திருக்குறள் முழுமையையும் 16 இயல்களாக முறைப்படுத்துகின்றார்.