திராய்க்கேணி படுகொலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திராய்க்கேணி படுகொலைகள்
இடம்திராய்க்கேணி
நாள்ஆகத்து 6, 1990 (+6 GMT)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
தமிழர்
தாக்குதல்
வகை
சுடப்படல்
ஆயுதம்துப்பாக்கிகள்
இறப்பு(கள்)47
தாக்கியதாக
சந்தேகிக்கப்படுவோர்
இலங்கை இராணுவம், முஸ்லிம் ஊர்காவல்படை

திராய்க்கேணி படுகொலைகள் (Thiraikkerney massacre) என்பது 1990 ஆம் ஆண்டு ஆகத்து 6 ஆம் நாள் இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் தமிழ்க் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற படுகொலை நிகழ்வைக் குறிக்கும். சிறப்பு இராணுவப் படையினர் எனச் சந்தேகிக்கப்படுபவர்களின் உதவியுடன் இனந்தெரியாதோரால் 47 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

பின்னணி[தொகு]

திராய்க்கேணி ( Thiraayk-kea'ni) கிராமம் மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்கே 70 கிமீ தொலைவில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. 1990 ஆகத்து 5 ஆம் நாள் தீகவாபி என்ற இடத்தில் 13 முஸ்லிம் பணியாளர்கள் இனந்தெரியாதோரால் கொல்லப்பட்டனர். இப்படுகொலைகளை விடுதலைப் புலிகளே நிகழ்த்தியதாக அயல் கிராமங்களில் வதந்திகள் பரவ ஆரம்பித்தன.[1]

படுகொலைகள்[தொகு]

முஸ்லிம்கள் படுகொலைகளுக்குப் பழி வாங்கும் முகமாக அடுத்த நாள் சிறப்பு இராணுவத்தினரின் உதவியுடன் திராய்க்கேணி கிராமத்தினுள் நுழைந்த குண்டர்கள் அங்குள்ள கோயிலில் தஞ்சமடைந்திருந்த 47 தமிழர்களைப் படுகொலை செய்தனர். வீடுகளினுள் வைத்து முதியவர்கள் பலர் உயிருடன் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர். 350 வீடுகள் குண்டர்களால் தீக்கிரையாக்கப்பட்டன[2]. சரோஜா என்ற 13 வயதுச் சிறுமி ஒருத்தி கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாள். காலை ஏழு மணிக்கு ஆரம்பமான இப்படுகொலை நிகழ்வுகள் மத்தியானம் வரை நீடித்திருந்தது[1] இப்படுகொலைகளை அடுத்து அக்கிராமத்தில் இருந்து வெளியேறிய மக்கள் காரைதீவு அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பின்னரே ஊர் திரும்பினர்.

இப்படுகொலைகள் குறித்து முழுமையான விசாரணைகள் வேண்டும் எனக் குரல் கொடுத்த திராய்க்கேணி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஈ. மயிலைப்போடி என்பவர் 1997 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார்[2].

புதைகுழி கண்டுபிடிப்பு[தொகு]

2003 அக்டோபர் 12 ஆம் நாள் திராய்க்கேணி பெரியதம்பிரான் கோயில் பகுதியில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்குள்ள குழி ஒன்றில் மனித எச்சங்கள் பலவற்றக் கண்டுபிடித்தனர். இவ்வெச்சங்கள் திராய்க்கேணிப் படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களினதாய் இருக்கலாம் என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்[1]. இது தொடர்பான விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]