சிலுவைப் பாதை
சிலுவைப் பாதை (Stations of the Cross) என்பது இயேசு கிறித்து தம் மண்ணக வாழ்வின் இறுதி நாள்களில் துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்த நிகழ்வுகளை நினைவு கூர்கின்ற வழிபாட்டுச் செயல் ஆகும்.
இந்த வழிபாட்டுச் செயல் கத்தோலிக்கக் கிறித்தவரிடையே பரவலாக உள்ளது. லூத்தரன் மற்றும் ஆங்கிலிக்கன் சபையாரிடையே இப்பழக்கம் அதிகமாக இல்லை. அசிசி நகர் தூய பிரான்சிசு என்பவர் காலம் தொடங்கி (1181/1182-1226) சிலுவைப் பாதை கிறித்தவ கோவில்களில் நடைபெற்று வருகிறது. தவக் காலத்தின் போதும், குறிப்பாக பெரிய வெள்ளிக் கிழமையன்றும் கிறித்தவர்கள் சிலுவைப் பாதை கொண்டாடுகிறார்கள்.
பொருளடக்கம் |
[தொகு] சிலுவைப் பாதையின் வரலாறும் உட்பொருளும்
இயேசு கிறித்து துன்பங்கள் அனுபவித்து உயிர் துறந்த எருசலேம் நகருக்குத் திருப்பயணம் சென்றுவர மக்கள் எப்போதுமே விரும்பியதுண்டு. இயேசு தம் தோள்மேல் சுமத்தப்பட்ட சிலுவையைச் சுமந்துகொண்டு வழிநடந்த பாதையில் கிறித்தவர்களும் நடந்துசெல்ல விழைந்தார்கள். ஆனால் எருசலேம் சென்றுவர எல்லாருக்கும் வசதி இருக்கவில்லை. எனவே ஐரோப்பாவின் வெவ்வேறு நாடுகளில், குறிப்பாக இத்தாலி நாட்டில் சிலுவைப் பாதை அல்லது சிலுவை நிலைகள் (Way of the Cross or Stations of the Cross) என்னும் வழக்கம் உருவானது.
இயேசுவுக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்பட்ட நிகழ்ச்சி, அவர்மீது சிலுவை சுமத்தப்பட்ட நிகழ்ச்சி, அவர் சிலுவையில் அறையுண்ட நிகழ்ச்சி, அவர் சிலுவையில் உயிர்துறந்த நிகழ்ச்சி போன்றவற்றைப் படிமங்களாக அல்லது உருவச் சிலைகளாக வடித்து, தியானத்திற்கு உதவும் கருவிகளாகப் பயன்படுத்தினர். 18ஆம் நூற்றாண்டில் இவ்வழக்கம் கிறித்தவத் திருச்சபை முழுவதும் பரவியது. இயேசு அனுபவித்த துன்பங்களை நினைவுகூர்ந்து, தியானித்து, இறைவேண்டல் செய்ய மொத்தம் பதினான்கு நிலைகள் பயன்படும் எனவும் உறுதி செய்யப்பட்டது.
[தொகு] சிலுவைப் பாதையின் பதினான்கு நிலைகள்
- இயேசுவுக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்படுகிறது
- இயேசுவின்மீது சிலுவையைச் சுமத்துகிறார்கள்
- இயேசு முதல் முறை கீழே விழுகிறார்
- இயேசு தம் தாய் மரியாவைச் சந்திக்கிறார்
- சிரேன் ஊர் சீமோன் என்பவர் இயேசுவின் சிலுவையைச் சுமந்து உதவுகிறார்
- வெரோணிக்கா என்னும் பெண்மணி இயேசுவின் திருமுகத்தைத் துணியால் துடைக்கிறார்
- இயேசு இரண்டாம் முறை கீழே விழுகிறார்
- இயேசு எருசலேம் நகரப் பெண்களைச் சந்திக்கிறார்
- இயேசு மூன்றாம் முறை கீழே விழுகிறார்
- இயேசுவின் ஆடைகளை உரிகிறார்கள்
- இயேசுவைச் சிலுவையில் அறைகிறார்கள்
- இயேசு சிலுவையில் உயிர் துறக்கிறார்
- இயேசுவின் திருவுடலைச் சிலுவையிலிருந்து இறக்குகிறார்கள்
- இயேசுவைக் கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள்
மேற்கூறிய பதினான்கு நிலைகளோடு இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியைப் பதினைந்தாம் நிலையாகச் சேர்ப்பது இன்றைய வழக்கம்.