சிலப்பதிகாரத்தில் சமயக் கோட்பாடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிலப்பதிகாரம் சமணமத நூல் ஆயினும் இந்நூலினைப் படிக்குங்கால் இது மதசார்பற்ற நூல் என்றே தோன்றுமாறு இளங்கோவடிகள் இதனை யாத்துள்ளார். இந்நூலில் புத்த சமயக் கருத்துகள் மட்டுமன்றி பிற சமயக் கருத்துகளும் இடம் பெறுகின்றன. [சான்று தேவை]

சமயப்பொறை[தொகு]

சிலப்பதிகாரம் சமணமத நூலாகும். ஆயினும் அந்நூலில் எந்த மதத்தினரையும் புண்படுத்தாத கருத்துகளே உள்ளன. சிலப்பதிகாரத்தில் மத வேறுபடுகளைக் காண முடியாது. மாதரி எனும் இடைக்குல முதுமகள் கண்ணனை வழிபடும் வைணவ சமயத்தைச் சார்ந்தவளாயினும், இயக்கிக்கு பான்மடை கொடுத்து மீளும் ஏல்வையில் கவுந்தியடிகளைக் கண்ணில் கண்டு அவரை வணங்கிய செயலை அறியலாம்.

செங்குட்டுவன் வழிபாடு[தொகு]

சேரன் செங்குட்டுவன் வட நாட்டுக்குச் செல்வதற்கு முன்பாக அங்கிச்சாலையில் செய்த வேண்டுதலோடு நிற்காமல் சிவபெருமான் கோட்டம் புகுந்து அவர் தம் அடிகளையும் வணங்கினான். அங்குள்ள அரிதுயிலமர்ந்த பெம்மானுக்கு( திருவனந்தபுர பத்மநாபசாமி என்பர்) கடவுள் பணிபுரியும் சிலர் மாலையும் மலரும் கொணர்ந்து வாழ்த்தியளிக்க, அவற்றினைச் செங்குட்டுவன் தன் தோளின் மிசையணிந்தான். மேலும் சிலப்பதிகாரம், அலைவாய் முருகன் கோட்டத்தையும் திருச்செங்கோட்டினையும், ஏரகத்தையும், வெண்குன்றினையும் கூறுகிறது.

கூத்துத் தெய்வங்கள்[தொகு]

கொடுகொட்டி, பாண்டரங்கமென்னும் கூத்துகள் சிவபெருமானுக்குச் சிறந்தன போலவே துடிக்கூத்தும் குடக்கூத்தும் முருகனுக்குச் சிறந்தனவாகும். வெற்றித்தெய்வமாக கொற்றவையை வணங்கும் வழக்கமும் இருந்தது. கொற்றவைக்காக ஆடப்பெறும் வேட்டுவ வரி மறவர் போன்ற மலைவாணரால் அடிக்கடி நிகழ்த்தப்பெற்றது. சிலம்பின் பன்னிரண்டாங்காதையான வேட்டுவ வரி முழுவதும் இக்கூத்து நன்கு விளக்கப்படுகிறது. குருதிப்பலி கொடுக்கும் வழக்கும் பெரும்பான்மை இருந்தது. சிலம்பில் தேவி அல்லது கொற்றவை மயிடாசுரனைச் செற்றாவளாகத் துதிக்கப் பெறுகிறாள்.

சமய நம்பிக்கைகள்[தொகு]

திருமாலைக் குறித்து ஆடப்பெறும் கூத்து குரவைக் கூத்து ஆகும். இடைக்குல மகளிர் இக்கூத்தினை பெரும்பாண்மை நிகழ்த்துவர். கோவலன் பாண்டியனால் கொல்லப்பட்ட போது மதுரை மாநகர்க்கு வரும் தீங்கினை உணர்த்த ஆங்கே பல துன்னிமித்தங்கள் நிகழ்ந்தன. அந்நாளிலே மக்கள் தமக்கு வரும் தீங்குகளை தெய்வங்களுக்குச் சாந்தி எடுத்தலால் போக்கிக்கொள்ளலாம் என நம்பி வந்தனர். இக்கருத்து பற்றியே இடைக்குல மாதான மாதரியும் அவள் மகள் ஐயை என்பவளும், கண்ணகிக்கு எதிரில் இக்கூத்தினை எடுப்பித்தனர். கண்ணகி தன் பேராப் பெருஞ்சினத்தால் மதுரையை அழித்து கொங்கின் கண்ணுள்ள நெடுவேள் குன்றத்து ஒரு வேங்கை மர நிழலில் நின்றபோது அங்கும் குன்றக்குறத்தியர் கண்ணகிக்காகக் குரவைக் கூத்தொன்றை ஆடினர். அதன் பின்னர் தெய்வ விமானத்தில் ஏறி கண்ணகி வானம் சென்றமையை அறியலாம்.

பிற தெய்வ வழிபாடு[தொகு]

மேலும் திருமாலின் முன்னோனாகிய வலியோன் எனப்படும் பலராமனுக்குக் கோட்டம் ஒன்று இருந்ததும் அவர் வணக்கம் பெருவாரியாய் இருந்ததும் சிலம்பினால் அறியலாகிறது. இவை தவிர பரிதி, மதி, கற்பதரு, அயிராவதம், சாத்தன் பாசண்டச் சாத்தன் ( மறைவழிப் படாததும், ஆன்றோர்வழிவராததுமான தெய்வங்கள் தொண்ணூற்றாறு வகையின. அவற்றுள் இச்சாத்தன் முதன்மையானவன் என திவாகரம் கூறுகிறது.) முதலிய கடவுள்களுக்கும் பிறர்க்கும் தனித் தனிக் கோயில்கள் இருந்த உண்மையை சிலப்பதிகாரம் மூலம் அறியலாம். எனவே கோவிலெடுக்கும் வழக்கம் அக்காலத்தே இருந்தது என அறியலாம்.

பூதங்கள்[தொகு]

பூதச் சதுக்கத்துப் பூதங்கள் நால்வகை வருணங்களின் பெயராலே வழங்கப்பட்டன. வேதங்களில் காணும் இந்திரன், வருணன், அங்கி, முதலான கடவுளர் இங்கும் துதிக்கப்பெற்றனர். மறை கண்ட அந்தணர்கள் பற்றியும் அவர்தம் வேள்வி முதலான ஒழுங்குகள் பற்றியும், மறையோதுதலையும் இளங்கோவடிகள் பல இடங்களில் குறித்துள்ளார்.

மத வேற்றுமை பாராட்டாமை[தொகு]

கோவலனும் கண்ணகியும் நீராடல், உண்ணல், உடுத்தல், பேச்சு முதலியவற்றால் சமண மதத்தவர் என்ற முடிவுக்கு வருமாறு அடைக்கலக்காதை செய்திகளும் பிற காதைச் செய்திகளும் இருக்கின்றன. மேற்கண்ட நீராடல் முதலிய செய்திகள் மாதரியின் இல்லின் கண் நிகழ்த்தப்பெற்று அவை மாதரி, ஐயை முதலானவர்களால் காணவும் பெற்றன என்கிறது சிலம்பு. இதன்கண் வைதீக மதத்தவர்க்கும் பிற மதங்கட்கும் அக்காலத்தே அவ்வளவாக வேற்றுமை இல்லை என்பதும் அவ்வாறிருந்தாலும் அவை அவ்வளவாகப் பாராட்டப்படவில்லை என்றும் அறியலாம். மேலும் செங்குட்டுவன் வைதீக மதத்தவன். அவனுடன் பிறந்த இளங்கோவடிகள் சமணச் சார்புடையவர். இவ்விருவர்க்கும் நண்பரான கூலவாணிகன் சாத்தனார் பௌத்தர் என்பதாலும் மதங்களால் மக்கள் ஒருவரை ஒருவர் அக்காலத்தே வெறுக்கவில்லை என்பதை அறியலாம்.
கோவலன் பெற்றோர் புத்த மதத்தினர். கண்ணகி ஆசீவக மதத்தினள். ஒருகாலத்துப் பிறந்தார் அவரவர் விரும்பியவாறு மதச்சார்புடையவராகலாம் என்பது அக்கால வழக்கு. இதனால் குடிமக்களிடம் மத வேற்றுமைகள் அக்காலத்தில் அவ்வளவாக இல்லை என்பதை அறியலாம்.

இந்திர விழா[தொகு]

சிலப்பதிகாரத்தின் ஐந்தாம் காதை 'இந்திரவிழா ஊரெடுத்த காதை' ஆகும். இந்திர விழா தோன்றிய நாள்தொட்டு அதன் இறுதிவரையில் அவ்விழா இனிது நடைபெற அரசன் முழுமுதல் தலைவனாய் நிற்பான். வடநாட்டிலிருந்து பலர் தம் மகளிருடன் விழாக்காண வருவர். தேவர் வானத்திலிருந்து விழாவினைக் கண்டு மகிழ்வர். ஒவ்வோர் ஆண்டிலும் சித்திரைத் திங்கள் முழுமதி தொடங்கி இருபத்தெட்டு நாட்கள் தொடர்ச்சியாய் இவ்விழா நடைபெறும். புகாரைத் தலைநகராய்க்கொண்டு ஆட்சி செய்த முசுகுந்த சோழற்கு துணை செய்ய இந்திரனால் அனுப்பப் பெற்ற காப்பு தெய்வத்திற்கு முதற்கண் வணக்கம் நிகழும். புகார் நகரின் ஐவகை மன்றங்களிலும் பலியிடப்பெறும். யானையின் பிடர்த்தலையில் முரசேற்றி வச்சிரக்கோட்டத்தின் கண்ணிருந்து ஐராவதக் கோட்டஞ்சென்று அம்முரசினை இறக்கி வைத்து விழாவின் முதலும் இறுதியும் சாற்றுவர். அரசன் கொற்றாங்கொள்வான் ஆகேனென்று காவிரி நீரைப் பொற்குடத்திலேந்தி இந்திரனை நீராட்டுவார். ஆகிய செய்திகள் இக்காதையால் அறியப்படுகின்றன.

ஊழ்வினை நம்பிக்கைகள்[தொகு]

அவர் தம்முள் ஒவ்வொருவர்க்கும் வினையே உயிர். நல்வினை தீவினைக்குத் தக்கபடி நன்மையும் தீமையும் அவற்றைச் செய்தவரை நாடி வரும் என்பது அவர்தம் உறுதியான நம்பிக்கையாகும். இப்பிறவியில் ஒருவன் துன்புற அவன் பழவினையே காரணம். மனிதன் விடுதலையடைய விரும்பினால் அவன் நற்கருமங்களைச் செய்ய வேண்டும். அக்காலத்தில் இவ்வுண்மையினை நம்பியும், கடைப் பிடித்தும், பிறர்க்குச் சொல்லியும், தாமும் ஒழுகியும் வந்தனர்.

உசாத்துணை[தொகு]

  • ஆர்.கே.சண்முகம் செட்டியார். சிலப்பதிகாரம். புகார்க் காண்ட உரை. புதுமலர் நிலையம் -வெளியீடு- 1946
  • வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர். சிலப்பதிகாரம். புகார்க் காண்ட மதிப்புரை. புதுமலர் நிலையம் வெளியீடு -:1946
  • எஸ். வையாபுரிப்பிள்ளை. தமிழ் ஆராய்ச்சித்துறைத்தலைவர். சென்னைப் பல்கலைக்கழகம்- சிலப்பதிகாரப் : புகார்க்காண்டம் முன்னுரை.

புதுமலர் நிலையம் வெளியீடு- 1946