சந்திரகௌரி சிவபாலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்திரகௌரி சிவபாலன்
பிறப்புமட்டக்களப்பு, ஏறாவூர்
பெற்றோர்வேலுப்பிள்ளை, பரமேஸ்வரி

சந்திரகௌரி சிவபாலன் இலக்கியம், கவிதை, சிறுகதை, கட்டுரை ஆன்மீக சிந்தனை, பாடல்கள் என பல்துறைகளிலும் ஈடுபாடு காட்டிவரும் ஒரு பெண் எழுத்தாளராவார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

வேலுப்பிள்ளை, பரமேஸ்வரி தம்பதியினரின் மகளாகப் பிறந்த சந்திரகௌரி, மட்டக்களப்பு, ஏறாவூர் மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியையும், மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலையில் உயர்தரக் கல்வியையும் கற்றார். பின்பு பேராதனை பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தையும், நுகேகொடை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வியியல் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுள்ளார். தனது சிறப்புக் கலைமாணிப் பட்டத்தேர்வுக்காக "இருபதாம் நூற்றாண்டு மட்டக்களப்புத் தமிழ் இலக்கியமும், பிரதேசப் பண்பும்" எனும் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தார். தற்போது புலம் பெயர்ந்து தனது கணவர் சிவபாலன், மகள் மெனூஷா ஆகியோருடன் செருமனியில் 'சோலிங்கன்' நகரில் வசித்து வருகின்றார்.

தொழில் முயற்சிகள்[தொகு]

இலங்கையில் வாழ்ந்த காலத்தில் தொழில் ரீதியாக ஆசிரியையாகப் பணியாற்றிய இவர் பின்பு செருமனிக்குப் புலம்பெயரும் வரை நீர்கொழும்பு கல்வித் திணைக்களத்தில் ஆசிரிய ஆலோசகராகத் தனது பணியினைத் தொடர்ந்துள்ளார். தற்பொழுது சோலிங்கனிலுள்ள ஜேர்மனி மொழி ஆரம்பப் பாடசாலையில் (Open all day School) பணியாற்றுகின்றார்.

இலக்கியப் பணி[தொகு]

தனது பெயரின் முதலெழுத்தான 'கௌ' வையும், தனது கணவர் சிவபாலனின் பெயரில் முதலெழுத்தான 'சி'யையும் இணைத்து 'கௌசி' எனும் புனைபெயரில்[1] புலம்பெயர் நாட்டில் இவர் ஆக்கங்களைப் படைத்து வரும் சந்திரகௌரியின் கன்னியாக்கம் 1986ஆம் ஆண்டில் தினகரன் பத்திரிகையில், 'யானை உரியும் உமையாள் அச்சமும்' எனும் தலைப்பில் பிரசுரமானது. இதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான கவிதைகள், சிறுகதைகள் ஆன்மீக சிந்தனைகள் பாடல்கள் போன்ற ஆக்கங்களை இவர் இலங்கைத் தேசிய பத்திரிகைகளிலும், மண், தமிழ்நாதம்| போன்ற சஞ்சிகைகளிலும், இலண்டன் தமிழ் வானொலியிலும் எழுதியுள்ளார்.

இலண்டன் தமிழ் வானொலியில் 'ஓடி விளையாடு பாப்பா' என்னும் ஒரு நிகழ்ச்சியினை நடத்தி வருகின்றார்.[2] இத்துடன் இணையத்தளங்களில் சமுதாயச் சீர்திருத்தக் கட்டுரைகள், கவிதைகள், ஆக்கங்கள் போன்றவற்றை எழுதிவருவதுடன் தன்னுடைய வலைப்பூ இலும் ஆக்கங்களை எழுதிவருகின்றார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரகௌரி_சிவபாலன்&oldid=3407764" இலிருந்து மீள்விக்கப்பட்டது