குருதத்த வித்யார்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருதத்த வித்யார்த்தி
பண்டிட் குருதத்த வித்யார்த்தி
பிறப்பு(1864-04-26)ஏப்ரல் 26, 1864
முல்தான் நகரம்,  பாகிஸ்தான்
இறப்புமார்ச்சு 19, 1890(1890-03-19) (அகவை 25)

குருதத்த வித்யார்த்தி என்றறியப்படும் பண்டிட் குருதத்த வித்யார்த்தி (Gurudatta Vidyarthi) (1864 ஏப்ரல் 29 - 1890 மார்ச்சு 19) எனும் இவர், சமூக சேவகராகவும், கல்வியாளராகவும், மற்றும் ஆரியசமாசத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார். மேலும், இவரது முந்தைய, பெயர் வைராகி முல்லா குரான் திட்டா என்பது மூலத்தில் அறியப்பட்டது.[1]

பிறப்பு[தொகு]

வித்யார்த்தி, பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்தில் முல்தான் நகரில் புகழ்பெற்ற சர்தானா (Sardana) குடும்பத்தில் 1864-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 29-ம் நாள் பிறந்தார்.[2]

ஆரம்பக்கல்வி[தொகு]

பண்டிட், அவரது தந்தை லாலா ராம் கிருஷ்ணாவிடம் பாரசீக மொழி (Persian language) கற்றறிந்தார். இந்தியாவின் மிகத்தொன்மையான மொழிகளுள் ஒன்றான சமசுகிருதத்திலும் நாட்டம் கொண்டிருந்தார், அதே ஊரில் ஆரம்பக் கல்வியை பெற்ற குருதத்த வித்யார்த்தி, புத்தகம் படிப்பதில் அதிக நாட்டமுடையவராகவும், புத்தகத்தை கையில் எடுத்தால், முழுமூச்சில் படித்து முடித்துவிடுபவராகவும் காணப்பட்டார்.[3]

பன்மொழிப் படிப்பாற்றல்[தொகு]

உருது, ஆங்கில அறிஞர்களின் ஏராளமான புத்தங்கங்களை சிறு வயதிலேயே படித்து முடித்தார். ஆரியசமாசத்தின் சமசுகிருத வகுப்புகளில் சேர்ந்தவர் சமசுகிருதத்தில் தொடர்ந்து நெடுநேரம் உரையாற்றும் வல்லமை பெற்றார். உருது கவிதைகள் எழுதுவதில் அதிக ஆர்வமுடைய வித்யார்த்தி, ஆங்கிலத்திலும் அசாதாரணப் புலமை பெற்றிருந்தார்.[4]

கல்லூரிக்காலம்[தொகு]

லாகூரில் லாலா ஹன்ஸ்ராஜ், லாலா லஜபதி ராய் போன்றவர்கள் படித்துக்கொண்டிருந்த அதே அரசுக் கல்லூரியில் சேர்ந்தார்.[5] இவர்கள் மூவருக்குள் நெருக்கமான நட்பு மலர்ந்தது. அறிவியலில் நாட்டம் கொண்டிருந்த வித்யார்த்தி அனைத்தையும் அறிவியல் அடிப்படையிலேயே அலசிப் பார்த்ததால் இவருக்கு இறைவன் குறித்த வலுவான சந்தேகம் இருந்து வந்தது.1881-ஆம் ஆண்டு ஆரியசமாஜத்தில் இணைந்தார். சுவாமி தயானந்த சரஸ்வதிக்கு மிகவும் நெருங்கிய, பிரியமான சீடராக இடம்பெற்ற குருதத்த வித்யார்த்தி "இலவச விவாத சங்கம்" ஒன்றைத் தொடங்கினார். அங்கு தத்துவார்த்தமான விவாதங்கள் நடைபெற்றன. 1886-ல் அறிவியலில் எம்.ஏ. பட்டம் பெற்றார். அரசுக் கல்லூரியிலேயே பேராசிரியராகப் பணியாற்றினார். பஞ்சாப் மாகாணத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.[6]

புது அவதாரம்[தொகு]

பெரும் பண்டிதராக போற்றப்பட்ட போதிலும், மிகுந்த அடக்கத்தோடு தன்னை ‘வித்யார்த்தி’ (மாணவன்) என்றே கூறிக்கொள்வார். 1883-ல் பிணியால் பிடிக்கப்பட்ட சுவாமி தயானந்த சரஸ்வதியை கவனித்துக்கொள்ள லாகூரில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட இருவரில் இவரும் ஒருவர்.[7] தயானந்த சரஸ்வதி மறைவுக்குப் பின்னர், அங்கிருந்து திரும்பிய இவர், புதிய அவதாரம் எடுத்ததுபோல் காணப்பட்டார். தயானந்தராகவே மாறும் முனைப்புகளை மேற்கொண்டு தீவிர தேடல் தாகம் கொண்டவராக மாறியவர், பிறகு அவரது நினைவாக ‘தயானந்த் ஆங்கிலோ வைதிக் கல்லூரி’ என்ற கல்வி அமைப்பை நிறுவ முடிவெடுத்து இதற்காக நிதி திரட்டும் முயற்சியில் லாலா லஜபதி ராய், லாலா ஹன்ஸ்ராஜ் ஆகியோருடன் இணைந்து நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு, இறுதியில் 1886-ல் லாகூரில் டிஏவி பள்ளி தொடங்கப்பட்டது.[8]

கல்விச் சேவைகள்[தொகு]

வேதக் கல்வி, வேத பாரம்பரியத்தைப் பரப்பும் முனைப்புகளிலும் சமூக சேவைகளிலும் தீவிரமாக ஈடுபட்டார். ‘எ டெர்மினாலஜி ஆப் தி வேதாஸ்’ என்ற இவரது ஆய்வுக் கட்டுரை ஆக்சுபோர்டு பல்கலைக்கழக சமசுகிருதப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது.[9] உபநிடதங்களுக்கு ஆங்கிலத்தில் உரை எழுதி, அவற்றை மொழி பெயர்த்ததோடு, பல நூல்களையும் எழுதியுள்ளார். ஆரிய சமாசத்தின் அனைத்து சமூக சேவைகளிலும் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.[10]

இறப்பு[தொகு]

அறிவைத் தேடுவதிலும், பரப்புவதிலும், சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்த இவர், தன் உடல்நலத்தில் கவனம் கொள்ளவே இல்லை. தனது மேதைமையாலும் சமூக சிந்தனையாலும் மகத்தான பல சாதனைகளை நிகழ்த்திய, பண்டிட் குருதத்த வித்யார்த்தி காசநோயால் பாதிக்கப்பட்டு 1890-ல் தனது 26-வது வயதில் மறைந்தார்.[11]

புற இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. thearyasamaj.org |Pandit Gurudutt Vidhyarthi|வலை காணல்|28|04|2016
  2. "aryasamaj.org|Gurudatta Vidyarthi|வலை காணல்|29|04|2016". Archived from the original on 2019-01-06. பார்க்கப்பட்ட நாள் 2016-04-29.
  3. aryasamajhouston.org|Pandit Gurudatta Vidyarthi|வலை காணல்|29|04|2016
  4. aryamantavya.in|PANDIT GURUDATTA: A GREAT GEM OF ARYA SAMAJ|வலை காணல்|29|04|2016
  5. culturalindia.ne | Cultural India : Leaders : Lala Lajpat Rai|வலை காணல்|3|05|2016
  6. isrj.org|Dept. of History, Govt. First Grade College Bidar, Karnataka|வலை காணல்|3|05|2016[தொடர்பிழந்த இணைப்பு]
  7. agniveerfan|Biography of Swami Dayanand.|The Last Conversion|வலை காணல்|04|05|2016
  8. "davcmc.net.in|DAV MOVEMENT|Background|வலை காணல்|04|05|2016". Archived from the original on 2014-07-19. பார்க்கப்பட்ட நாள் 2016-05-04. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  9. roobinio.ru|The Terminology of the Vedas and European Scholars (Classic Reprint)|Pandit Guru Datta Vidyarthi|வலை காணல்|04|05|2016[தொடர்பிழந்த இணைப்பு]
  10. "aryasamajnairobi.com|Maharishi Dayanand : The Founder of Arya Samaj|The pioneers of Arya Samaj|வலை காணல்|04|05|2016". Archived from the original on 2016-03-21. பார்க்கப்பட்ட நாள் 2016-05-04.
  11. thearyasamaj.org|Pandit Gurudutt Vidhyarthi|வலை காணல்|04|05|2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருதத்த_வித்யார்த்தி&oldid=3850571" இலிருந்து மீள்விக்கப்பட்டது