கால்வினும் ஆபுசும் (படக்கதை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| கால்வினும் ஆபுசும் Calvin and Hobbes |
|
|---|---|
| எழுதியவர்(கள்) | பில் வாட்டர்சன் |
| இணையத்தளம் | Calvin and Hobbes |
| தற்போதைய நிலை / schedule | நிறைவுற்றது |
| வெளியிடப்பட்ட நாள் | 1985, நவம்பர் 18 |
| முடிவுற்ற நாள் | 1995, டிசம்பர் 31 |
| ஆலோசனைக்குழு | யுனிவேர்சல் பிரெஸ் சிண்டிகேட் |
| வெளியீட்டாளர்(கள்) | ஆண்ட்ரூஸ் மாக்மீல் |
கால்வினும் ஆபுசும் (Calvin and Hobbes) என்ற தலைப்பு கொண்ட படக்கதை பில் வாட்டர்சன் என்ற கலைஞர் எழுதி நாளிதழ்களில் வெளியிட்டு நூல்களிலும் தொகுத்தது. இது கால்வின் என்ற புனைவாற்றல் மிக்க ஆறு வயது சிறுவன் மற்றும் ஆபுசு என்ற பொம்மைப்புலி ஆகிய புனைவுப் பாத்திரங்களைக் கொண்டு வரையப்பட்ட படக்கதையாகும். இந்தப் பாத்திரங்களின் பெயர்கள் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சான் கால்வின் என்ற பிரெஞ்சு மறுமலர்ச்சி இறையியலாளர் மற்றும் பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தாமசு ஆபுசு என்ற ஆங்கிலேய அரசியல் மெய்யியலாளர் ஆகியோரின் பெயர்களைத் தழுவி அமைக்கப்பட்டன.[1]
நவம்பர் 18, 1985 இல் இருந்து திசம்பர் 31, 1995 வரை நாளிதழ்களில் இப்படக்கதை தொடராக வெளியிடப்பட்டது. இப்படக்கதை புகழின் உயரத்தில் இருந்த காலத்தில் பல நாடுகளிலுமாக 2,400 நாளிதழ்களில் வெளிவந்தது. தவிர, இதுவரை பதினெட்டு நூல்களாகவும் இவை தொகுக்கப்பட்டு 3 கோடி படிகளுக்கும் மேல் அச்சாகியுள்ளன.[2] வாட்டர்சன் படக்கதைத் தொடர்களை ஒரு கலை வடிவமாகக் கருதியபடியாலும் தனக்கு விளம்பரமும் பொதுமக்களிடையே அறியப்பட்டிருத்தலை விரும்பாமையாலும் இப்படக்கதையை மையப்படுத்தி அவரது ஏற்புபெற்ற பொருட்கள் எவையும் வெளிவரவில்லை.[3] எனினும் அவரது அனுமதியின்றி சில போலிப்பண்டங்களை விற்கத்தான் செய்கின்றனர்.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
வாட்டர்சன் தான் விரும்பாத[4] ஒரு விளம்பரப் பணியில் ஈடுபட்டிருக்கையில் நேரம் கிடைக்கும்போது தன் சொந்த விருப்பத்தின் பேரில் படக்கதைகள் வரையத் துவங்கினார். பல கதைக்கருக்களை படக்கதைகளின் பதிப்புரிமைத் தரகர்களிடம் அனுப்பியதில் அவர்கள் எதையும் ஏற்கவில்லை. இறுதியாக ஒரு நிறுவனம் ஒரு முதன்மைப் பாத்திரத்தின் தம்பி மற்றும் அவனது பொம்மைப்புலி ஆகியவை நல்ல அழுத்தமானவை என்றும் இவற்றைக் கொண்டு ஒரு படக்கதையை வளர்த்தெடுக்கலாமென்றும் தெரிவித்தனர். வாட்டர்சன் இப்பாத்திரங்களைக் கொண்டு உருவாக்கிய படக்கதையை[5] அவர்கள் ஏற்கவில்லை. பல மறுப்புகளுக்குப் பின்னர் வேறு நிறுவனமான யுனைட்டடு பிரசு சிண்டிகேட்டு என்ற நிறுவனம் அவரது படக்கதையை ஏற்றது.[6][3]
1985-ம் ஆண்டு நவம்பர் 18-ம் நாள் முதல் முறையாக வெளிவந்த படக்கதை விரைவில் பெரும் வெற்றியைக் கண்டது. ஒரே ஆண்டில் 250 நாளிதழ்களுக்கும் மேலானவை கால்வினும் ஆபுசும் படக்கதையைப் பதிப்பிக்கத் துவங்கின. இந்த படக்கதைக்காக வாட்டர்சன் பல விருதுகளையும் வென்றார்.[7] சில ஆண்டுகளிலேயே அமெரிக்க ஒன்றியத்துக்கு வெளியேயும் பல நாடுகளில் இப்படக்கதை வெளிவரத் துவங்கியது.
1991 மே மாதம் முதல் 1992 பிப்ரவரி வரையும் 1994-ம் ஆண்டு ஏப்ரல் முதல் திசம்பர் வரையும் வாட்டர்சன் புதிய படங்கள் வரையவில்லை.
பின்னர் 1995-ல் திடீரென அந்த ஆண்டு இறுதியுடன் தான் இப்படக்கதையை முடித்துக்கொள்ளப் போவதாக அறிவித்தார். 1995 திசம்பர் 31-ம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று கால்வினும் ஆபுசும் படக்கதையின் 3,160-ஆவதும் இறுதியானதுமாகிய படம் வந்தது.[2] அன்று புதிதாய் விழுந்திருந்தப் பனியில் கால்வினும் ஆபுசும் பனிச்சறுக்கு வண்டியில் சென்று கொண்டிருக்கையில் கால்வின் "நண்பா, வா, இந்த வியத்தகு உலகைச் சென்று ஆராய்வோம்" என்று சொல்வதாக அமைந்து நிறைவுற்றது.[8] அத்துடன், ஒரு விமர்சகரின் பார்வையில், "படக்கதைப்பக்கங்களில் வேறு எந்தவொரு தொடரும் நிரப்ப முடியாத வெற்றிடம் ஏற்பட்டு விட்டது."[9]
[தொகு] நடை தாக்கங்கள்
நிரப்பப்படாமல், அதே வேளை, நுணுக்கமாக வடிக்கப்பட்டிருத்தல், அறிவார்ந்த நகைச்சுவை, ஆழமான உன்னிப்பான நோக்கல்கள், கூர்மையான நக்கலான குமுக மற்றும் அரசியல் கிண்டல்கள், நன்கு வளர்த்தெடுத்த பாத்திரங்கள் ஆகியன கால்வினும் ஆபுசும் படக்கதையின் குறிப்படத்தக்க பண்புகள். கால்வினின் கற்பனை உலகு போன்று பார்னபி, பீநட்சு, சுகிப்பி, புளூம் கவுன்ட்டி, கார்ஃவீல்டு, கிரேசி காட் போன்ற பிற வரைகதைத் தொடர்களில் ஏற்கெனவே பயன்படுத்தியுள்ளனர். வாட்டர்சனின் சமூக-அரசியல் கருத்தாடல்கள் போன்று போகோ, மஃவால்டா போன்ற பிற படக்கதைகளில் வந்துள்ளன. பீநட்சின் ஆக்குனர் சுல்சு மற்றும் போகோவை உருவாக்கிய கெல்லி ஆகியோர் வாட்டர்சனின் இளவயதில் படக்கதைகள் பற்றிய எண்ணம் வடிவமைகையில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள்.[6]
பலவாறானவும் பல வேளைகளில் மிகைப்படுத்தப்பட்டும் அமைந்த பாத்திரங்களின் முக வெளிப்பாடுகள், மிகுந்த ஏற்பாட்டுடன் கூடிய வழக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பின்புலத்துடன் கூடிய கால்வினின் புனைவு, சட்டங்களில் நன்கு கவரப்பட்ட நகர்வுகள், சொற்களுக்கும் அப்பால் படங்களில் அமைந்த நகைச்சுவை மற்றும் உருவகங்கள் ஆகியன வாட்டர்சனின் கலையில் கவனிக்கத்தக்கவை. பின்னாளில், தனது படக்கதைக்குக் கூடுதல் இடம் ஒதுக்கப்பட்டிருக்கையில் பல்வேறு அளவுகளிலான சட்டங்கள், பல்வேறு வரைகலை உத்திகள், உரையாடல்களே இல்லாத கதைகள், வெற்றிடத்தின் மேம்பட்ட பயன்பாடு ஆகியவற்றை வெள்ளோட்டம் விட்டு ஆய்வு செய்துள்ளார். கதையில் சில நிகழ்வுகளையும் புனைவுப் பொருட்களையும் பற்றிக் குறிப்பிட்டு அவற்றை விளக்காமல் படிப்பவர்களின் கற்பனைக்கு விட்டுவிடும் உத்தியையும் கையாண்டுள்ளார். வாசகர்களின் கற்பனையில் தன்னுடையதைக் காட்டிலும் எதிர்பாரா இயல்புடைய புனைவுகள் ஏற்படக்கூடும் என்று அவர் கருதினார்.[10]
முதலில் பென்சிலைக் கொண்டு கோட்டுப்படங்களை வரைவார். பின்னர் நார்த்துகிலிகை கொண்டு மையிட்டு படத்தை முடிப்பார். வண்ணங்களைப் பயன்படுத்துவதில் மிக்க அக்கறை கொண்டு ஞாயிற்றுக்கிழமைக்கான படக்கதைக்கு நிறங்களைத் தேர்ந்தெடுப்பார்.[11]பின்னாளில் வண்ணங்களைத் தானே தெரிவு செய்து கருவிகள் கொண்டு வண்ணம் சேர்க்கும் நிறுவனத்துக்கு அனுப்பி வைத்து விடுவார். அவர்கள் வண்ணமேற்றுவர்.[12]
[தொகு] பாத்திரங்கள்
[தொகு] முதன்மை
[தொகு] கால்வின்
பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இறையியலாளர் சான் கால்வினின் பெயரைத் தாங்கிய இந்த ஆறு வயது சிறுவன் இப்படக்கதையில் மிகுதியான புனைவாற்றலும், அறிவுக்கூர்மையும், ஆர்வமும், ஆற்றலும், பாய்ச்சலும் கொண்டவனாகக் காட்டப்படுகிறான். சில வேளைகளில் தன்னலம் மிக்கவனாகவும் தென்படுகிறான்.[13] தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்களே பெறும் கால்வின் பெரியவர்களுக்கிணையான சொல்வளமுடையவனாகவும் ஒரு மலரும் மெய்யியல் சிந்தை கொண்டவனாகவும் உள்ளான். காட்டாகப் பின்வரும் உரையாடலைக் காணலாம்.
-
- கால்வின்: "அப்பா, நீங்கள் உங்களுடைய இடைத்தரமான வாழ்க்கையை எனது வெற்றிகளின் வாயிலாகச் செல்லுபடியாக்கலாம் என்றும் நீங்கள் தவறவிட்ட வாய்ப்புகளை ஈடுகட்டலாம் என்றும் எண்ணிக்கொண்டு என் வழியாக பகராள் வாழ்வைத் துய்க்கின்றீர்களா?"
-
- கால்வினின் தந்தை: "அப்படி ஒரு எண்ணத்தை கொண்டிருந்தால், நான் இந்நேரம் அந்த உத்தியை மறு ஆய்வு செய்து கொண்டிருப்பேன் என்பது உறுதி."
-
- கால்வின் (பின்னர், தன் தாயிடம்) 'அம்மா, அப்பா என்னை எப்போதுமே நோகடிக்கிறார்.'
அவன் பெரும்பாலும் தன்னுடைய வேறுபட்ட சிவப்பு-கருப்பு வரியிட்ட சட்டை, கருப்பு கால்சட்டை, மற்றும் வாடாமல்லி நிறமுடைய காலணிகளையும் அணிந்திருப்பான்.[14] அவன் படக்கதைகளை விரும்பிப் படிப்பவன். மேலும் அக்கதைகளில் விளம்பரப்படுத்தப்படும் பொருள்களையும் தான் விரும்பி உண்ணும் "சாக்கிலேட்டு உறைந்த சர்க்கரை வெடி" என்ற உணவின் அட்டையில் இருக்கும் பொருள்களையும் விலைகொடுத்துத் தருவிப்பது இவனது வழக்கம்.
வாட்டர்சன் கால்வினைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்;
- "கால்வின் பாத்திரத்தைச் செய்வது எளிதாக இருந்தது. ஏனெனில், அவன் வெளிப்படையானவனாகவும், சுட்டியானவனாகவும், நினைப்பதைச் சொல்பவனாகவும் உள்ளான்."[15]
- "அவன் தனது வயதை மீறிய அறிவாற்றல் உடையவன். அவனிடம் எனக்குப் பிடித்தது என்னவென்றால், அவனுக்கு எந்தவித கட்டுப்பாடும் தெரியாது, எதைச் செய்யக்கூடாது என்று அறிந்து கொள்ளும் அளவிற்கு அவன் இன்னும் வளரவில்லை."
[தொகு] ஆபுசு
கால்வினைத் தவிர மற்ற அனைவரையும் பொறுத்தமட்டில் ஆபுசு ஒரு பொம்மைப்புலி. ஆனால் கால்வினைப் பொறுத்தவரை ஆபுசு மனிதப் பண்புகளுடைய, தன்னைக் காட்டிலும் பெரிய, தன்னுணர்வுமிக்க ஒரு புலி. இந்த வேற்றுமைத்தன்மையை வாட்டர்சன் இவ்வாறு விளக்குகிறார்:
"ஆபுசை ஒரு சட்டத்தில் பொம்மைப்புலியாகவும் அடுத்த சட்டத்தில் உயிருடனும் வரையும்பொழுது, வளர்ந்தோர் பார்வையையும் கால்வினின் பார்வையையும் அருகருகே வைக்கிறேன். படிப்பவர் எவ்வுண்மையை வேண்டுமானாலும் "கூடுதல் உண்மை" எனத் தேர்ந்து கொள்ளட்டும்."[6]
ஆபுசின் மெய்யான தன்மையைக் குழப்பும் வகையில் ஆபுசின் நடவடிக்கைகளுக்கு சில கதைகளில் விளைவுகள் கூட ஏற்படுவதாக அமைந்துள்ளன. காட்டாக, கால்வின் பள்ளியில் இருந்து திரும்பியதும் ஆபுசு அவன் மேல் விளையாட்டாகப் பாய்ந்து தாக்குவதாக வருமிடங்களில் மற்றவர்களும் அவனது காயங்களைப் பார்க்கின்றனர். ஒருமுறை ஆபுசு கால்வினை ஒரு நாற்காலியில் கட்டி வைத்து விடுகையில் கால்வினின் அப்பா, கால்வினால் எப்படி தன்னைத் தானே கட்டி வைக்க முடியுமென வியக்கிறார்.
தாமசு ஆபுசு என்ற 17-ம் நூற்றாண்டு மெய்யியலாளரின் பெயரை இப்புலிக்குச் சூட்டியதாகவும் அம்மெய்யியலாளர் "மனித இயல்பைப் பற்றிய ஒரு மங்கலான பார்வையைக் கொண்டிருந்ததாகவும்" வாட்டர்சன் தெரிவித்துள்ளார்.[16] கால்வினின் தோற்றமும் இயல்பும் தாமசு ஆபுசின் நூல்களில் ஒன்றான இலெவியத்தனில் அவர் விவரித்திருந்த மாந்தரின் இயல்பைப் போன்றே "வஞ்சகமிக்க, நாகரிகமற்ற, குள்ளமான" ஒன்றாக உள்ளது என்கிறார்.[17] ஆபுசு கால்வினைக் காட்டிலும் பகுத்தறிவுடையதாகவும், அவனது செயல்களினால் ஏற்படக்கூடிய விளைவுகளை உணர்ந்திருந்தாலும், அவ்வப்போது விடுக்கும் மறைமுக எச்சரிக்கைகளைத் தவிர அவனது சேட்டைகளை முழுவதுமாகத் தடுக்க முயன்றதில்லை. ஏனெனில் இதனால் கால்வினுக்குத் தானே சிக்கல், தனக்கு ஒன்றுமில்லை என்பதால். கால்வின் தனது விருப்பு வெறுப்புக்களுக்கு அறிவு சார்ந்த காரணங்களைக் கற்பிக்க முயலுகையில் அவனது போலித்தனத்தைக் கிண்டல் செய்வது ஆபுசின் வழக்கம்.[18]
தொடக்கத்தில் வந்த சில தொடர்களில் ஒரு மீன்ரொட்டியைத் தூண்டியாகக் கொண்டு கால்வின் ஆபுசைப் பொறி வைத்துப் பிடிப்பதாகக் காட்டினாலும், பின்னால் வந்த ஒரு கதையில் ஆபுசு கால்வினைக் காட்டிலும் அகவையில் மூத்ததாகவும், கால்வின் பச்சிளங்குழந்தையாக இருந்தபோதே அவனை அறிந்திருந்தது போலவும் காட்டப்படுகிறது. பின்வரும் உரையாடல் அக்கதையில் வருவது:
கால்வின்: "என் வாழ்வின் முதல் பகுதி முழுமையும் வெறுமையாகத் தோன்றுகிறது!"
ஆபுசு: "(கைக்குழந்தையாக இருந்த) அந்நாளில் பெரும்பாலும் நீ ஏப்பம் விட்டுக்கோண்டிருந்ததாக நினைவிருக்கிறது."
இறுதியில் வாட்டர்சன் இவர்கள் ஒன்று சேர்ந்தது எப்படி என்ற தகவல் தேவையற்ற ஒன்று என முடிவெடுத்தார்.[16]
[தொகு] துணை
[தொகு] அடிக்கடிப் பயன்பட்ட கருப்பொருள்
[தொகு] நூல்கள்
[தொகு] குறிப்புகளும் மேற்கோள்களும்
- ↑ "Calvin and Hobbes Trivia". பார்க்கப்பட்ட நாள் 2007-05-12.
- ↑ 2.0 2.1 "Andrews McMeel Press Release". பார்க்கப்பட்ட நாள் 2006-05-03.
- ↑ 3.0 3.1 Paul Dean. "Calvin and Hobbes Creator Draws On the Simple Life", Los Angeles Times, May 26 1987.
- ↑ Watterson, Bill (1990). "Some thoughts on the real world by one who glimpsed it and fled". பார்க்கப்பட்ட நாள் 2006-03-16.
- ↑ Neely Tucker. "The Tiger Strikes Again", Washington Post, 4 October 2005, பக். C01.
- ↑ 6.0 6.1 6.2 Andrew Christie. "An Interview With Bill Watterson: The creator of Calvin and Hobbes on cartooning, syndicates, Garfield, Charles Schulz, and editors", Honk magazine, January 1987.
- ↑ "NCS Reuben Award winners (1975–present)". National Cartoonists Society. பார்க்கப்பட்ட நாள் July 12, 2005.
- ↑ Watterson (2005), vol. 3, p. 481. Comic originally published 1995-12-31.
- ↑ "The Complete Calvin and Hobbes". Charles Solomon. Day to Day. NPR. 2005-10-21. 3:28.50 minutes in. “In the final strip, Calvin and Hobbes put aside their conflicts and rode their sled into a snowy forest. They left behind a hole in the comics page that no strip has been able to fill.”
- ↑ Watterson (1995), p. 200.
- ↑ Watterson, Bill (2001). Calvin and Hobbes Sunday Pages 1985–1995. Andrews McMeel. ISBN 0-7407-2135-6.
- ↑ வாட்டர்சன், பில் (1995). The Calvin and Hobbes Tenth Anniversary Book. Andrews McMeel Publishing. பக். 20. ISBN 978-0-8362-0438-4.
- ↑ வாட்டர்சன், பில் (1995). Calvin and Hobbes Tenth Anniversary Book. Andrews and McMeel. பக். 21. ISBN 0-8362-0438-7.
- ↑ Watterson (2005), vol. 1, p. 303. Comic originally published 1987-07-26.
- ↑ Williams, Gene (1987). Watterson: Calvin's other alter ego.
- ↑ 16.0 16.1 Watterson, Bill (October 1995). The Calvin and Hobbes Tenth Anniversary Book. Andrews McMeel. ISBN 0-8362-0438-7.
- ↑ Hobbes, Thomas. "13". Of the Natural Condition of Mankind as Concerning Their Felicity and Misery.
- ↑ Watterson, Bill (1995). Calvin and Hobbes Tenth Anniversary Book. Andrews and McMeel. பக். 22. ISBN 0-8362-0438-7.
[தொகு] வெளி இணைப்புகள்
[தொகு] நிறுவன ஏற்பு பெற்ற தளங்கள்
- CalvinAndHobbes.com: The Official Calvin and Hobbes site at GoComics
- Official Calvin and Hobbes Publicity site at Andrews McMeel Publishing, LLC
[தொகு] ஆர்வலர் தளங்கள்
- Calvin and Hobbes :: Magic on Paper
- CaHA - The Calvin and Hobbes Album
- Calvin and Hobbes at the Open Directory Project
http://calvinandhobbes.freehostia.com ( Voted as the Paws comic fansite of the year in 2004)
[தொகு] பல்லூடகம்
- "Radio show in which fans of the comic strip express their views about the ending of Calvin and Hobbes" (MP3). CBC Canada (1995).
- "Review of The Complete Calvin and Hobbes featuring an interview with Bill Watterson's editor Lee Salem" (Real, Windows Media). NPR (2005).
- "In Search of Bill Watterson: A podcast interview with Bill Watterson's mother" (MP3). Jawbone Radio (2005).
[தொகு] மேலும் தகவல்களுக்கு
- Chris Suellentrop. "The last great newspaper comic strip", Slate (magazine), November 7, 2005.
- James Renner. "Missing! Calvin and Hobbes creator Bill Watterson.", Cleveland Scene, November 26, 2003.
- Neely Tucker. "The Tiger Strikes Again", The Washington Post, October 4, 2005.
- சித்திரப்புலி - எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுடைய கட்டுரை
|
|
|
|---|---|
| பாத்திரங்கள் | கால்வின் · Hobbes · துணை பாத்திரங்கள் · Calvin's alter egos |
| கருத்துக்களும் பொருள்களும் | Horrendous Space Kablooie · Transmogrifier |
| பிற | கால்வினும் ஆப்சும் மொழிபெயர்ப்புகள் · கால்வினும் ஆப்சும் நூல்கள் |

