கானா (விவிலியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டைக் கால கலிலேயா. நாசரேத்து நகரின் வடகிழக்கே கானா காட்டப்படுகிறது.

கானா (Cana) என்னும் ஊர் புதிய ஏற்பாட்டில் சிறப்பாகக் குறிக்கப்படுகின்ற ஓர் இடம் ஆகும் [1]. யோவான் நற்செய்தியாளர் கானாவில் நிகழ்ந்த திருமணத்தில் இயேசு கலந்துகொண்டதைப் பதிவுசெய்துள்ளார்.

கானாவில் நிகழ்ந்த திருமணம்[தொகு]

கிறித்தவர்களுக்கும் புதிய ஏற்பாட்டு ஆய்வில் ஈடுபடுவோருக்கும் கானா என்றதும் நினைவில் வருவது இயேசு அந்த ஊரில் நிகழ்ந்த திருமணத்தின்போது தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றினார் என்பதே ஆகும். இது இயேசு செய்த முதல் அரும் அடையாளம் என்று அழைக்கப்படுகிறது [2]. நற்செய்தி ஆசிரியராகிய யோவான் மட்டுமே இந்த அரும் அடையாளத்தை பதிவுசெய்துள்ளார் (காண்க: யோவான் 2:1-11). யோவான் வழங்கும் கூற்றுரை இதோ:

கானா திருமணம். ஓவியர்: பவுலோ வெரோனேஸே (1528-1588). காப்பிடம்: லூவெர் காட்சியகம், பாரிசு.

"ஒருநாள் இயேசுவும் அவருடைய தாய் மரியாவும் சீடர்களும் கானா என்னும் ஊரில் நடைபெற்ற ஒரு திருமணத்திற்குச் சென்றார்கள். திருமண விழாவின்போது வழக்கம்போல விருந்து நடந்தது. அப்போது திராட்சை இரசம் தீர்ந்துபோய்விட்டது. அதைக் கண்ட இயேசுவின் தாய் மரியா இயேசுவை நோக்கி, "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்றார். இயேசு அதைப் பற்றிக் கவலைப்பட்டதாகக் காட்டிக்கொள்ளாமல் தம் தாயிடம், "அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே" என்றார்.

இதைக் கேட்ட மரியா நம்பிக்கை இழக்காமல் விருந்தினருக்குப் பரிமாறிய ஆள்களிடம் "இயேசு உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்று கூறினார்.

திருமண விருந்து நடந்த இடத்தில் ஆறு கல்தொட்டிகள் இருந்தன. இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளும் அளவுக்கு ஒவ்வொரு கல்தொட்டியும் இருந்தது. அத்தொட்டிகள் யூதர் தம் தூய்மைச் சடங்குகளுக்குப் பயன்படுத்தியவை ஆகும். இயேசு பணியாளர்களை நோக்கி, "இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்" என்று கூறினார். அவர்களும் தொட்டிகளைத் தண்ணீரால் நிரப்பினார்கள். பின்பு இயேசு அவர்களைப் பார்த்து, "இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்" என்று கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.

பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியாது. தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது.

ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிடு, "எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம்போல் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?" என்று கேட்டார்.

இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இந்த அரும் அடையாளம் வழியாக இயேசு தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரில் நம்பிக்கை கொண்டனர்."

கானா திருமண நிகழ்ச்சியின் பொருள்[தொகு]

யோவான் நற்செய்தியில் மட்டுமே வருகின்ற இந்த அரும் அடையாளத்தின் பொருள் என்னவென்று விவிலிய அறிஞர்கள் ஆய்வு செய்துள்ளனர். அந்த ஆய்வுகளின் சுருக்கம் கீழே தரப்படுகிறது.

பாலஸ்தீன நாட்டுத் திருமணக் கொண்டாட்டம்

பாலஸ்தீனா நாட்டில் திருமணக் கொண்டாட்டம் பல நாள்கள் நீடிக்கும் வழக்கம் இருந்தது. அப்போது விருந்தினர் வருவதும் போவதுமாக இருப்பர். கானாவிலும் ஏற்கனவே நிகழ்ந்துகொண்டிருந்த திருமணத்தில்தான் இயேசுவும் அவருடைய தாயும் சீடர்களும் கலந்துகொள்கின்றனர். யூத மக்கள் மானம், தன்மதிப்பு, சுயகவுரவம் என்பவற்றை மிகவும் வலியுறுத்தினர். அவர்கள் நடுவே, பலர்முன் கேவலத்துக்கு உள்ளாவது மிகப்பெரிய இழிவாகக் கருதப்பட்டது. திருமணக் கொண்டாட்டத்தின்போது எதிர்பாராத விதமாகத் திராட்சை இரசம் குறைபட்டுவிட்டால், அது திருமண வீட்டாருக்கு ஒரு பெரிய இழுக்காக, அவர்களது மதிப்புக்கு ஒரு மாபெரும் ஊறாகக் கருதப்பட்டிருக்கும். அது ஒரு பெரிய வெட்கக்கேடு. அவர்களுடைய நண்பர்களும் ஊராரும் அவர்களைக் கஞ்சத்தனம் கொண்டவர்கள் என்றோ, தேவைகளை முன்கூட்டியே அறியத் தெரியாதவர்கள் என்றோ இழிவாகப் பேசுவதற்கு இது ஒரு வாய்ப்பாகிவிடும். விருந்து அளித்த குடும்பத்தின் கவுரவத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கோடுதான் இயேசுவின் தாய் அவரிடம், "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்று கூறி, அவர்களுக்காகப் பரிந்து பேசினார். இயேசுவும் தூய்மைச் சடங்குகளுக்குப் பயன்படுத்துவதற்காக ஆறு கல்தொட்டிகளில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த தண்ணீரைச் சுவைமிகுந்த திராட்சை இரசமாக மாற்றினார்.

கதையில் வரும் பாத்திரங்கள்

இயேசுவே இக்கூற்றுரையில் வருகின்ற முதன்மையான கதாபாத்திரம். மற்றவர்கள்: இயேசுவின் தாய், சீடர்கள், பணியாளர்கள், பந்தி மேற்பார்வையாளர், மணமகன் ஆகியோர். இவர்களின் இயக்கமும் செயலும் இயேசுவை நோக்கியே அமைகின்றன. உச்சக்கட்டமாக, இயேசுவின் மாட்சி எல்லாரும் காணுமளவில் வெளிப்படுகிறது.

புதுமைக் கதை

இலக்கிய அமைப்புப்படி பார்த்தால் இக்கூற்றுரை புதுமைக் கதை (miracle story) என்னும் வகையைச் சார்ந்தது. இயேசு புரிந்த புதுமைகளை குணமளிக்கும் புதுமை (healing miracle), தீய ஆவிகளை ஓட்டும் புதுமை (exorcism), இயற்கைப் புதுமை (nature miracle) என வகைப்படுத்துவர். கானாவில் தண்ணீர் திராட்சை இரசமாக மாறியது ஓர் இயற்கைப் புதுமை ஆகும். ஏனெனில், இங்கே இயற்கையின் விதிகளுக்கு மாறாக, அல்லது இயற்பியல் விதிகளுக்கு அப்பாற்பட்ட விதத்தில் ஒரு செயல் நிகழ்கிறது. இதுபோல இயேசு புரிந்த வேறு இயற்கைப் புதுமைகள் இவை: இயேசு காற்றையும் கடலையும் அடக்குதல்; இயேசு கடல்மீது நடத்தல்; இயேசு அப்பங்களையும் மீனையும் பலுகச் செய்தல் போன்றவை.

இயற்கை விதிகளைக் கடவுளே ஏற்படுத்தினார் என்றும், அவ்விதிகளுக்கு அப்பால் நின்று செயல்படும் இயேசு கடவுளின் வல்லமையால் இப்புதுமையை நிறைவேற்றினார் என்றும் அறிஞர் விளக்குகின்றனர். வேறு சிலர் கானாவில் நிகழ்ந்த புதுமையை அடையாள முறையில் (symbolic) மட்டுமே புரிந்துகொள்வர்.

கெஃபிர் கன்னா, இசுரயேல் நாடு. கானா திருமண நிகழ்ச்சிக் கோவில்.
திருமணத்தின் மதிப்பு

இயேசு அன்றைய திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் திருமணத்தை உயர்ந்ததாகப் போற்றினார் என்றும், குடும்ப வாழ்வு பற்றிய உண்மையை உணர்த்தினார் என்றும் கிறித்தவர் ஏற்கின்றனர். திருமண நிகழ்ச்சியின்போது திராட்சை இரசம் பரிமாறப்பட்டதைக் காட்டி, மது அருந்துவது ஏற்புடையதே என்றும், அளவுக்கு மிஞ்சி அருந்துவதுதான் தவறு என்றும் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். இந்நிகழ்ச்சியின் உட்பொருள் இயேசுவை மையமாக்குவதே என்றொரு விளக்கம் உண்டு. புதிய, சுவைமிகுந்த திராட்சை இரசம் இயேசுவையே குறிக்கிறது என்றும், அவர் முன்னாளைய யூத முறைமைகளுக்கு முற்றிப்புள்ளி வைத்துவிட்டு, புதியதொரு நெறியை மக்களுக்கு அறிவித்ததே இங்கு புதிய இரசமாகக் காட்டப்படுகிறது என்றும் விளக்கம் தருவர்.

கானா எங்கே உள்ளது?

இயேசு தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றிய நிகழ்ச்சி நடந்த கானா எங்கே உள்ளது என்னும் கேள்விக்கு அறிஞர்கள் தரும் பதில்கள் பல. இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது என்று மட்டுமே யோவான் கூறுகிறார் (காண்க: யோவான் 2:1,11). எனவே, கலிலேயப் பகுதியில் கானாவைத் தேடுவது பொருத்தமே. கெஃபர் கன்னா (Kafr Kanna) என்னும் இடம் புதிய ஏற்பாட்டில் வரும் கானாவாக இருக்கலாம் என்பது ஒரு கருத்து. இந்த ஊர் அரபியில் كفر كنا‎ (kafr kanā) எனவும் எபிரேயத்தில் כַּפְר כַּנָּא‎ (kafr Kanna‎) எனவும் அழைக்கப்படுகிறது. இம்மரபு கி.பி. 8ஆம் நூற்றாண்டிலிருந்தே உள்ளது. இந்த ஊர் இசுரயேல் நாட்டில் நாசரேத்து என்னும் நகருக்கு வடகிழக்காக 7 கி.மீ. தொலையில் உள்ளது.

இருப்பினும், பெரும்பாலான அறிஞர் கருத்துப்படி, இன்று கிர்பத் கானா (Khirbet Qanah) என்று வழங்கப்படும் ஊர்தான் நற்செய்தியில் வருகின்ற கானா ஆகும். இவ்வூர் கெஃபர் கன்னா என்னுமிடத்திலிருந்து இன்னும் 9 கி.மீ. வடக்காக உள்ளது.

மேற்கூறிய இரு ஊர்களைத் தவிர நாசரேத்துக்கு அருகில் உள்ள அயின் கானா (Ain Kana) என்னும் ஊரும், லெபனான் நாட்டின் தென்பகுதியிலுள்ள கானா (Qana) என்னும் ஊரும் நற்செய்தியில் வரும் கானாவாக இருக்கலாம் என்னும் கருத்துகளும் உள்ளன.

கானா திருமணம்: ஓவியம்[தொகு]

கானா திருமணத்தைப் பல கலைஞர்கள் ஓவியமாக வடித்துள்ளனர். இத்தகைய ஓவியங்களுள் பவுலோ வெரோனேஸே (1528-1588) என்பவர் வரைந்தது மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது [3].

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கானா_(விவிலியம்)&oldid=3850645" இலிருந்து மீள்விக்கப்பட்டது