கம்மாளரின் திருமணத்தை நடத்திவைக்கும் உரிமை வழக்கு - 1818

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கம்மாளரின் திருமணத்தை நடத்திவைக்கும் உரிமை வழக்கு என்பது தென்னிந்தியாவில் வாழும் ஒரு சாதிப் பிரிவினரான கம்மாளரின் திருமணம் மற்றும் பிற சமயச் சடங்குகளை தாங்களே நடத்திக்கொள்ளும் உரிமை பற்றிய 1818 ஆம் ஆண்டய வழக்கு ஆகும்.

பின்னணி[தொகு]

பிரித்தானிய இந்தியாவின், சென்னை மாகாணத்தின், வட ஆற்காடு (இன்றைய திருவண்ணாமலை மாவட்டம்) போளூர் வட்டம் சதுப்பேரி கிராமத்தில் 1814 ஆம் ஆண்டு கம்மாளர் வீட்டில் திருமணத்துக்குப் பந்தல்கால் நடும் நிகழ்வு நடந்தது. இந்த சடங்கை அவ்வகுப்பைச் சேர்ந்தவரும், அவ்வூரைச் சேர்ந்தவருமான பண்டித மார்க்கசகாய ஆச்சாரி நடத்துகிறார். இந்நிலையில் அவ்வூரிலுள்ள பார்ப்பனரான பஞ்சாங்கங் குண்டையர் என்பவர் இதைத் தடுக்கிறார்.[1]

இந்தத் தகராறு ஊர்ப் பஞ்சாயத்திடம் செல்கிறது. ஊர் பஞ்சாயத்தில் பஞ்சாங்கங் குண்டையர் “கம்மாளர்களுக்குப் புரோகிதம் செய்யும் உரிமை இல்லை. அவர்கள் வீட்டுத் திருமணங்களில் வேதப்படியான மந்திரங்களை ஓதக்கூடாது. அதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை; புராணப்படியான மந்திரங்களைத்தான் ஓத வேண்டும்” என்று வாதிட்டார். இதற்கு பண்டித மார்க்கசகாய ஆச்சாரி “வேதப்படியான மந்திரங்களை நாங்களே ஓதி எங்கள் வீட்டுத் திருமணம் உள்ளிட்ட இன்ப, துன்ப நிகழ்ச்சிகளை நாங்களே இதுகாறும் நடத்திக் கொண்டு வருகிறோம். அப்படியே நடத்திக் கொள்வதற்கு எங்களுக்கு உரிமை உண்டு” என்று பஞ்சாங்கங் குண்டையரின் வாதங்களை மறுத்தும், தங்களுக்கு உரிய உரிமைகளை வேதங்களிலும், சாஸ்திரங்களிலும் கூறப்பட்டுள்ளவற்றின் அடிப்படையில் வாதிட்டார்.[1]

முடிவில் ஊர் பஞ்சாயத்தார் கம்மாளர்கள் தங்கள் வீட்டு நிகழ்வுகளுக்கான சடங்குகளை தாங்கே நடத்திக் கொள்ளலாம் என்று தீர்ப்பு உரைத்தனர். ஆனால் பஞ்சயத்தாரின் தீர்ப்பை பஞ்சாங்கங் குண்டையர் ஏற்க மறுத்து தன் ஆதரவாலர்களுடன் சேர்ந்து அந்நிகழ்வை தடுத்ததுவிட்டார்.

வழக்கு[தொகு]

இந்த சிக்கலையடுத்து பண்டித மார்க்கசகாய ஆச்சாரி மாவட்டத் தலைநகரான சித்தூர் (அப்போது வடாற்காட்டின் தலைநகராக சித்தூரே இருந்தது) சென்று மாவட்ட அதாலத் நீதிமன்றத்தில் தங்களது உரிமையைக் காக்க வழக்குத் தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி இது குறித்து இந்து சமய அறிஞர்களிடம் வேதங்களும், சாஸ்திரங்களும் இதைப் பற்றி என்ன சொல்கின்றன எனவும், மார்க்க சகாய ஆச்சாரியின் வாதம் சரியானதுதானா என கேட்டறிந்தார். இதன் பிறகு வெள்ளைக்கார நீதிபதி ஜே. எச். டெக்கார் (J.H.DECKOR) 15. திசம்பர் 1818 இல், “மனுதாரர்கள் (அதாவது கம்மாளர்கள்) தங்கள் வீடுகளில் செய்யப்படும் சடங்குகளை வேதத்தை அனுசரித்து இதற்கு முன் செய்து வந்ததைப் போலவே, இனிமேலும் செய்வதற்கு உரிமை உடையவர்கள். பார்ப்பனர் இதில் தலையிடக் கூடாது” என்று தீர்ப்பு அளித்தார்.[1]

வன்முறைகள்[தொகு]

இந்தத் தீர்ப்பு பிராமணர்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் சித்தூர், சேலம், திரிசிபுரம், பெங்களூர், மைசூர், பெல்லாரி, பந்தர், விஜயநகரம், திருநெல்வேலி, மதுரை, கும்பகோணம், சீர்காழி, சிதம்பரம் முதலான ஊர்களிலும் மாவட்டங்கள் தோறும் கம்மாளர் சாதியினரைத் தாக்கித் தொந்தரவு கொடுத்து, கலகம் செய்தனர்.[1]

இவற்றின் ஒரு பகுதியாக வட ஆற்காடு மாவட்டம், ஆற்காடு வட்டம், திமிரியில் 1836 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் நாள் கம்மாளர் தாண்டவாச்சாரி வீட்டில் சிரார்த்தம் நடத்திக் கொடுக்க கம்மாள வாத்தியார் வெங்கட்டசுப்பாச்சாரி சென்றார். அப்போது அந்த ஊரைச் சேர்ந்த பார்ப்பனரான பஞ்சாங்கம் கிருஷ்ணமாச்சாரி என்பவர் வந்த அந்த நிகழ்வை தடுத்தார். இதையடுத்து வெங்கட்டசுப்பாச்சாரி அந்த ஊரின் மணியக்காரரிடம் (இவர் ஒரு பார்ப்பனர்) முறையிட்டார். இதற்கு மணியக்காரர் தாசில்தாரிடம் உத்தரவு பெற்றுவருமாறு கூறினார். அதன்படியே வெங்கட்டசுப்பாச்சாரி தாசில்தாரிடம் உத்தரவு பெற்றுவந்து சடங்கு நிகழ்வை நடத்தத் தொடங்கினார். அப்போது பார்பனரான ஊர் மணியக்கார், அப்புவையங்கார், சீனிவாசய்யங்கார், பஞ்சாங்கம் கிருஷ்ணமாச்சாரி போன்றோர் வந்த சிரார்த்த நிகழ்வை தடுத்தனர். அவர்களிடம் தாசில் தாரின் உத்தரவு, சித்தூர் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவு ஆகியவற்றைக் காட்டினாலும் அவர்கள் ஏற்க்க மறுத்து இரகளையில் ஈடுபட்டு நிகழவை தடுத்தனர்.[1]

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு[தொகு]

இதைத் தொடர்ந்து வெங்கட சுப்பாச்சாரி வேலூர் குற்றிவியல் நீதிமன்றத்தில் பஞ்சாங்கம் கிருஷ்ணமாச்சாரி மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கின் முடிவில் நீதிபதி ஜே. ஏ. போர்டுல்லாங் (J. A. Bourdhllong ) 1838 சூன் மாதம் 5 ஆம் நாள் தீர்ப்பளித்தார். தீர்பில் பஞ்சாங்கம் கிருஷ்ணமாச்சாரிக்கு ரூ 20 அபராதம் விதித்தார்.[1]

பின் விளைவு[தொகு]

தங்கள் குலத்தினரின் வீடுகளில் பாரம்பரியமாக தாங்களே சடங்குகளை நடத்திவந்த நிலையில் அதை பார்பனர்கள் தடுத்ததையும், நீதிமன்றம்வரை சென்று தங்கள் உரிமையை நிலைநாட்டிய நிலையில் பல ஊர்களில் தங்கள் இனத்தவர் பார்ப்பனர்களால் தாக்கபட்டதையும், நீதிமன்ற உத்தரவையும், தாசிலதார் உத்தரவையும் பார்பனர்கள் மதிக்காமல் நடந்துகொண்டதற்கு காரணம் அரசு பணிகள் அனைத்திலும் பார்பனர்களின் ஆதிக்கம் உள்ளதுவே காரணம் என்பதை கம்மாளர்கள் கண்டுகொண்டனர். இதன் விளைவாக 1840 ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 32 பாஞ்சாலர்கள் (மரவேலை, பொன், இரும்பு, பஞ்ச உலோகம், கல் ஆகிய பொருட்களைக் கொண்டு ஐந்தொழில் செய்யும் கம்மாளரைக் குறிக்கும்) பொறுப்புமிக்க அரசாங்க வேலைகளைப் பார்ப்பனர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாகுபாடு காட்டாமல் அவ்வேலைகள் எல்லா வகுப்புகளுக்கும் கொடுக்கப்பட வேண்டும், என்று ஆங்கில அரசிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 கலசம் (2020). "வகுப்புரிமைக் கோரிக்கைக்கு வித்திட்ட பார்ப்பனரின் வன்முறையும் எச்சரிக்கையும் நீதிமன்ற அவமதிப்பும்,". கட்டுரை. சிந்தனையாளன் (இதழ்). pp. 21–24. பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2020.