கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1960களில் அமெரிக்க டைட்டன் 2 வகை ஐசிபிஎம் அமெரிக்காவில் சோதனை செய்யப்படுகிறது

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (intercontinental ballistic missile -ICBM) பொதுவாக 5,000 கிலோமீட்டர்களுக்கும் மேலாக பறக்கும் திறன் கொண்ட நெடுவீச்சு ஏவுகணையாகும். இவை பொதுவாக அணு ஆயுதங்களை சுமந்து செல்லுமாறு வடிவமைக்கப்படும். இவை எறிகணை (ballistics missile) வகையைச் சார்ந்தவை. இவை ஆங்கில முன்னெழுத்துளால் ஐசிபிஎம் என்றும் பரவலாக அறியப்படுகின்றன.

ஆரம்ப காலகட்டத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் தாக்குதலின் துல்லியத்தன்மை மிகக் குறைவாக இருந்தது, ஆகையால் பெரிய இலக்குகளை, எ-டு: நகரங்கள், தாக்கவே இவை பயன்படுத்தப்பட்டன. தற்காலத்தில் இவற்றின் துல்லியத்தன்மை ஒரு சில மீட்டர்கள் வரை மேம்பட்டுள்ளது. நீர்மூழ்கிகளிலிருந்து ஏவப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளும் அதிகளவில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவ்வகை ஏவுகணைகள் மற்றவகை ஏவுகணைகளை விட அதிக தூரம் சென்று தாக்குபவையாகவும் அதிக வெடிபொருள் தாங்கிச்செல்பவையாகவும் உள்ளன. மற்ற ஏவுகணைகள்: இடைப்பட்ட தூரம் பாயும் ஏவுகணைகள் (Intermediate-range ballistic missiles - IRBMs), நடுத்தர தூரம் பாயும் ஏவுகணைகள் (Medium-range ballistic missiles - MRBMs), குறுகிய தூர ஏவுகணைகள் (Short-range ballistic missiles - SRBMs). மேற்கண்டபடி ஏவுகணைகளை, கண்டம் விட்டு கண்டம் பாயும், இடைப்பட்ட-வீச்சு, நடுத்தர-வீச்சு, குறுகிய-வீச்சு ஏவுகணைகளாக வகைப்படுத்துவதற்கு எந்தவொரு குறிப்பிட்ட அளவுகோலும் இல்லை. மேலும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் அணு ஆயுதம் சுமந்து செல்லும் ஏவுகணைகளாகவே பாவிக்கப்படுகின்றன, எனினும் வழமையான வெடிபொருட்களை சுமந்து செல்லும் வகையிலும் சில வடிவமைப்புகள் உள்ளன.

அமெரிக்க மைனூட்மேன் 3 எறிகண சோதனை

பறத்தல் நிலைகள்[தொகு]

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் பறத்தலை பின்வருமாறு பிரிக்கலாம். அவை:

  • உந்துநிலை: 3லிருந்து 5 நிமிடங்கள் நீடிக்கும் (திரவ எரிபொருளைப் பயன்படுத்தும் கணைகளைவிட திட எரிபொருள் பயன்படுத்தும் கணைகளின் உந்துநிலை நேரம் குறைவாக இருக்கும்.). இந்த நிலை முடியும் போது, ஆரம்பத்தில் பறப்பதற்கு முடிவுசெய்யப்பட்ட பாதையைப் பொறுத்து, 150 லிருந்து 400 கிமீ வரையான உயரத்தில் இருக்கும். எரிதல் முடியும் வேகம் 7 கிமீ/வி ஆக இருக்கும், இது ஏறக்குறைய தாழ்-புவி சுற்றுப்பாதை வேகமாகும்.
  • இடைநிலைப் பறத்தல்: ஏறக்குறைய 25 நிமிடங்கள் - நீள்வட்டப் பாதையில் துணை-சுற்றுப்பாதை விண்வெளிப் பறத்தல்.
  • மீள்நுழைவு (பொதுவாக 100 கிமீ உயரத்தில் ஆரம்பிக்கிறது): 2 நிமிடங்கள் நீடிக்கும் - நவீன ஏவுகணைகளின் தாக்கு வேகம் பொதுவாக 4 கிமீ/வி ஆகும். முற்காலத்தில் தாக்கு வேகம் 1 கிமீ/வி ஆகவிருந்தது.

நவீன ஏவுகணைகள்[தொகு]

நவீன கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் தனித்த பல மீள்நுழைவுத் தாக்கு வாகனங்களைக் கொண்டுள்ளன - ஒவ்வொன்றும் தனித்தனி அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் வல்லமை கொண்டது.

தற்காலத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் பல்வேறு ஏவு-வசதிகளிலிருந்து ஏவப்படுகின்றன. அவை:

  • ஏவுகணை ஏவும் அமைப்புகள்
  • நீர்மூழ்கிகள்
  • பெரிய ஏவுகணைதாங்கு தானுந்துகள்
  • தொடர்வண்டிகள்

கடைசி மூன்று விதங்களிலும் ஏவுகணைகளை வெவ்வேறு இடங்களிலிருந்து ஏவும் வசதி உடையவையாக இருப்பதால், அவற்றை கண்டுபிடித்து அழிப்பது கடினமாகும்.

மேலும் பார்க்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]