உள்ளடக்கத்துக்குச் செல்

எலிசபெத் ஃபிரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலிசபெத் ஃபிரை
எலிசபெத் ஃபிரை
பிறப்புஎலிசபெத் (பெஸ்டி)
(1780-05-21)21 மே 1780
நார்விச், இங்கிலாந்து
இறப்பு12 அக்டோபர் 1845(1845-10-12) (அகவை 65)
ராம்ஸ்கேட், இங்கிலாந்து
இறப்பிற்கான
காரணம்
பக்கவாதம்
வாழ்க்கைத்
துணை
ஜோசப் ஃபிரை (19 ஆகஸ்ட் 1800–12 அக்டோபர் 1845)

எலிசபெத் ஃபிரை (Elizabeth Fry, 21 மே 1780 – 12 அக்டோபர் 1845) ஆங்கிலேயச் சிறைச்சாலை சீர்திருத்தவாதி ஆவார். இவர் சமூக சேவகர், கிறித்தவ வள்ளல் எனப் பன்முகங்களைக் கொண்டவர். இவரை "சிறைகளின் தேவதை" எனவும் அழைத்தனர்.[1][2] ஃபிரை கைதிகள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும் என்ற புதிய சட்டத்தை உருவாக்க பாடுபட்டார்.

பிறப்பும் குடும்பப் பின்னணியும்

[தொகு]

1780 ஆம் ஆண்டு மே மாதம் 21ம் நாள் இங்கிலாந்தின் நார்விச் நகரில் பிறந்தார். 12 வயதில் அவர் தாய் இறந்த பிறகு தம்பி தங்கைகளைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு அவருக்கு இருந்தது.

சமூக விழிப்புணர்வு

[தொகு]

18 வயதில் நண்பர்கள் கழகத்தைச் சேர்ந்த கிறித்துவரான வில்லியம் சேவரியின் சமய சொற்பொழிவைக் கேட்டது, அவரின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பின், ஏழைகளுக்கும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கும், சிறைச்சாலைகளில் துன்பப்படுவர்களுக்கும் சேவை செய்ய உறுதியேற்றார். பழைய துணிகளைச் சேகரித்து ஏழைகளுக்கும் நோய் வாய்ப்பட்டவர்களுக்கும் வழங்கினார். 'ஞாயிற்றுக்கிழமை பள்ளி ' ஒன்றை தொடங்கி ஏழைக் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார்.

சிறைச்சாலைப் பணி

[தொகு]

1800 ஆம் ஆண்டு ஜோசப் பிரை என்ற நண்பர்கள் கழக கிருத்துவரைத் தன் 20ஆவது வயதில் திருமணம் செய்து கொண்டார். பின், லண்டன் நகருக்குச் சென்று தன் சேவைகளை அங்கும் தொடர்ந்தார். ஒரு முறை நியூகேட் சிறைச்சாலைக்குச் செல்ல நேர்ந்தது. சிறைக் கைதிகளின் மோசமான நிலையைப் பார்த்து அவர் மனம் வருந்தினார். குறிப்பாகப் பெண்களுக்கான சிறைச்சாலைப் பகுதியில் பெண்களும் குழந்தைகளும் நிரம்பிக் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கேயே அவர்கள் சமைத்து உண்பதையும், துணிகளைத் துவைப்பதையும் வைக்கோலின் மீது தூங்குவதைப் பார்த்து வேதனையடைந்தார். சில நாட்கள் அவர்களுடனே தங்கி அந்தத் துன்பத்தைத் தானும் அனுபவித்தார். தன் அனுபவங்களைத் தொகுத்து ” ஸ்காட்லாந்திலும் வட இங்கிலாந்திலும் உள்ள சிறைச்சாலைகளைப் பற்றிய குறிப்பு” (Notes on visit made to some of the prisons in Scotland) என்ற புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் உணவையும் உடைகளையும் சேகரித்து சிறைச்சாலையில் துன்பப்படும் கைதிகளுக்கு வழங்கி வந்தார். 1816ல் சிறையில் இருந்த பெண்களுக்கும் சிறைச்சாலையிலேயே ஒரு பள்ளியைத் தொடங்கி அவர்கள் கல்வி கற்க ஏற்பாடுகள் செய்தார். எலிசபெத்திடம் நட்புடன் பழகிய பல்வேறு கைதிகளும் அவரை ”சிறைச்சாலையின் தேவதை ” என்றும் அழைத்தனார். 1817ல் ”நியூகேட் சிறைசாலையின் பெண் கைதிகளுக்கான சீர்திருத்தச் சங்கம்” (Association for the Reformation of the Female Prisoners in Newgate). தொடங்கினார். அதைத் தொடர்ந்து இங்கிலாந்தின் முதல் தேசிய மகளிர் சங்கமான 'பெண் கைதிகள் சீர்திருத்த முன்னேற்ற சங்கம்' தோன்றியது.

இறப்பு

[தொகு]

'கைதிகளும் மனிதர்கள்தான்' என்று உணர்த்திய ஃபிரை 1845ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ம் நாள் மறைந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Fairhurst, James. "The Angel of Prisons." Ireland's Own 4539 (Fall 1996):5.
  2. "1817 Elizabeth Fry Angel of the prisons". பார்க்கப்பட்ட நாள் 24 நவம்பர் 2014.
  • The Dramatic Biography of Prison Reformer Elizabeth Fry என்ற புத்தகத்திலிருந்து தகவல்கள் எடுக்கப்பட்டது
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிசபெத்_ஃபிரை&oldid=3858025" இலிருந்து மீள்விக்கப்பட்டது