இரத்மலானை நந்தீசுவரம் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருநந்தீசுவரம் கோயில் இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் இரத்மலானையில் அமைந்துள்ள இந்துக் கோயில் ஆகும். இரத்மலானையிலிருந்து கடற்கரையோரமாக ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில் ஜயசுமனாராம வீதியில் உள்ளது. இக்கோயிலில் மூலவராக இருப்பவர் சொர்ணா அம்பிகா சமேத நந்தீஸ்வரர் ஆவார்.

வரலாறு[தொகு]

இராமாயண காலத்தில் இராமன் வழிபட்ட சிவத்தலமாக இக்கோயிலைக் கருதுவர். இந்த ஆலயம் யாரால், எப்பொழுது எழுப்பப்பட்டது? எவ்வாறு தோன்றியது? என்பதை கண்டறியக்கூடிய சான்றுகள் கிடைக்கவில்லை. எனினும் கோட்டை அரசனாக இருந்த ஆறாம் பராக்கிரமபாகு காலத்தில் (1454 இல்) தொடகமுவே சிறீ ராகுல தேரர் என்ற சிங்களப் பெளத்த துறவி ‘சலலிஹினி சந்தேசய’ என்ற சிங்கள மொழிக் காவியத்தில் இந்த நந்தீசுவரர் ஆலயத்தில் நடைபெறும் பூசை, மற்றும் வழிபாட்டு முறைபாடுகளை பற்றி பாடியுள்ளார். பக்தர்கள் விரும்பும் இனிமையான தமிழ் மொழியில் இத்தலத்தின் மீது தோத்திரங்கள் பாடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போர்த்துக்கேயரினால் அழிப்பு[தொகு]

1505 இல் இலங்கைக்கு வந்த போர்த்துக்கேயர் 1518 ஆம் ஆண்டு இந்த நந்தீஸ்வரத்தை சேதமாக்கி அழித்தனர். அங்கு பூசைகள் நடத்தி வந்த குப்புசாமி என்ற குருக்களையும் அவரது குடும்பத்தினரையும் அதே இடத்திலேயே போர்த்துக்கேயர் கொலை செய்துள்ளனர். அவரது மகனை மதம் மாறுமாறு கூறி இழுத்துச் சென்றனர். அதன்பின் அப்பகுதியில் ‘பெர்னாண்டோ’ என்ற பரம்பரைப் பெயருடன் வாழ்ந்து வந்த சிங்களவர் இந்த ஆலயத்தை பராமரித்து வந்துள்ளார். பெர்ணான்டோவுக்குப் பின், இக்கோயிலை காமினி பெர்ணாண்டோ என்பவர் பராமரிந்து வந்தார்.

போர்த்துக்கேயர் இத்திருத்தலத்தை நிர்மூலமாக்கியதை நினைவுறுத்தும் சித்திரங்கள் இக்கோயிலில் வரையப்பட்டுள்ளன. இந்த ஆலயம் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்த ஆலயம் என்பதற்கு சான்றாக இந்த ஆலயத்தில் உள்ள ஆலமரம் விளங்குகிறது. இந்த ஆலமரத்தின் அடிவாரத்திலே விநாயகர் கோயில் உள்ளது.

அகழ்வாய்வுகள்[தொகு]

1980 ஆம் ஆண்டு சிவன் ஆலயம் அமைப்பதற்கு நிலத்தை அகழ்ந்தபோது உடைந்த நிலையிலுள்ள நந்தியும் சிவலிங்கத்தின் உடைந்த மேல் பகுதியும் மேலும் பல கோயிற் படிமங்களும் கிடைத்தன. இவ்வாறு அகழ்ந்தபோது கிடைத்த அம்மன் சிலையொன்று தொல்பொருள் காட்சியகத்தில் உள்ளது. அகழும்போது ஏற்பட்ட தாக்கத்தினால் அச்சிலை சேதமுற்றது. இச்சிலை 11, 12 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தது எனச் சான்றுபடுத்தப்பட்டுள்ளது. 1984 ஆம் ஆண்டு நிலத்தை அகழ்ந்தபோது கிடைத்த ஆவுடையார் இவ்வாலயத்தின் மூலமூர்த்தியானார்.

சிவாலயம் இருந்த இந்த இடத்திலே 1717 ஆம் ஆண்டு முருகனுக்கு கோயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை இப்பகுதியில் உள்ள சிங்களவர்கள் கொனாபெந்தி கத்தரகம தேவாலய என்று அழைத்தனர். இன்று இது மருவி கோணாகோயில் என்று அழைக்கப்படுகின்றது.

உசாத்துணை[தொகு]