பண்டார மும்மணிக் கோவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்டார மும்மணிக்கோவை [1] [2] [3] என்பது குமரகுருபரர் இயற்றிய நூல்களில் ஒன்று. 17 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. பண்டாரம் என்னும் சொல் கருவூலத்தைக் கருவூலம் குறிக்கும். அக்காலத்தில் சைவ ஆசாரியர்களைப் பண்டாரம் என்று குறிப்பிட்டுவந்தனர். அரசுப் பொருளைப் பாதுகாக்கும் பண்டாரம் போலச் சைவ-நெறிகளைப் பாதுகாத்தவர்கள் பண்டாரம் எனப்பட்டனர்.

தருமபுரம்புர ஆதீனம் நான்காம் பட்டத்தில் இருந்தவர் மாசிலாமணி தேசிகர். இவர் இந்த நூலின் ஆசிரியரான குமரகுருபரரின் குரு. இவரைப் போற்றி இந்த நூல் பாடப்பட்டுள்ளது. குருவின் கட்டளைப்படி குருபரர் புள்ளிருக்கு-வேளூர், தில்லை ஆகிய ஊர்களை வழிபட்டுவிட்டுத் தரும்புரம் மீண்டு இதனைப் பாடினார்.

இந்த நூல் மும்மணிக்கோவை இலக்கண வழக்குப்படி காப்புச்செய்யுள் ஒன்றும் 30 பாடல்களும் கொண்டு அமைந்துள்ளன. இவை முறைப்படி வெண்பா, ஆசிரியம், கட்டளைக் கலித்துறைப் பாடல்களால் ஆனவை. இதில் உள்ள ஆசிரியப் பாக்கள் பொதுவாக அளவால் நீண்டவை. இந்த நூலின் பாடல்கள் சிறப்பாகச் சைவ சமய நெறிகளையும், ஆசிரியருடைய அருளையும் போற்றிப் பாடுகின்றன.

நூல் தரும் செய்திகள்[தொகு]

  • மாசிலாமணி தேசிகர் தருமபுரம், கமலை என்னனும் திருவாரூர், மதுரை ஆகிய இடங்களிலிருந்த மடங்களில் தலைவராக விளங்கினார். [4] [5]
  • இவர் குடிலை [6] என்னும் வயலில் அருள் என்னும் விதையை நட்டுக் கருணை என்னும் நீரைப் பாய்ச்சி வேதம் என்னும் மரத்தை வளர்த்தார். அதிலிருந்த தளிர், இலை, அரும்பு, பிஞ்சு, காய், முதலானவற்றைப் பலர் அவரவர் விருப்பம் போலப் பறித்துச் சென்றனர். ஆனால் சைவ சித்தாந்தம் என்னும் கனியைப் பறித்துச் சென்றவர் சிலரே. [7]
  • மாசிலாமணி என்னும் பெயரை, சிந்தாமணி, சிகாமணி, சூளாமணி என்னும் நூலின் பெயர்கள் நினைவு கொண்டு பாராட்டுகிறார். [8]
  • சரியை, கிரியை, யோகம், போகம் என எண்ணாமலும், 'நாளைக்கு' என்று சொல்லாமலும் இன்றே அருள் செய்யவேண்டும் என ஆசிரியரை வேண்டுகிறார். [9]

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1990, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினேழாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 110. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. குமரகுருபரர் (நூல் பதிப்பு 1939,). ஸ்ரீ குமரகுருபர சிவாமிகள் பிரபந்தங்கள். சென்னை, கேசரி அச்சகம்: திருப்பனந்தாள் மடம், காசிவாசி சுவாமிநாத சுவாமிகள், (உ. வே. சாமிநாதையர் குறிப்புரையுடன்). p. 430. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: extra punctuation (link)
  3. பண்டார மும்மணிக்கோவை நூல் மூலம்
  4. மாசிலாமணி தேசிகருக்கு ஞானசம்பந்தன் என்னும் பெயரும் உள்ளமையால் ஞானசம்பந்தர் மதுரையில் அமணரை வென்ற செயலை இவர்மேல் ஏற்றி மதுரையில் அரசு வீற்றிருந்தார் என்கிறார்
  5. பாடல் 8
  6. குடில்
  7. நான்காம் ஆசிரியப்பா
  8. பாடல் 13
  9. பத்தாம் ஆசிரியப்பா
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டார_மும்மணிக்_கோவை&oldid=1881162" இலிருந்து மீள்விக்கப்பட்டது