ஹனி இரானி
ஹனி இரானி | |
---|---|
2018இல் ஹனி இரானி | |
பிறப்பு | 25 ஆகத்து 1955 மும்பை, மும்பை மாநிலம், இந்தியா |
தொழில் | நடிகை, திரைக்கதை ஆசிரியர் |
தேசியம் | இந்தியன் |
துணைவர் | ஜாவேத் அக்தர் (தி. 1972; ம.மு. 1985) |
பிள்ளைகள் | சோயா அக்தர் பர்கான் அக்தார் |
குடும்பத்தினர் | டெய்சி இரானி - சகோதரி |
ஹனி இரானி (Honey Irani) ஆகஸ்டு 25, 1955இல் பிறந்த இந்திய பாலிவுட் திரைப்பட நடிகை மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர், சிரக் கஹான் ரோஷ்னி கஹான், மற்றும் பாம்பே கா சோர் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமானார்.
பின்புலம் மற்றும் சொந்த வாழ்க்கை
[தொகு]இரானி, திரைக்கதை ஆசிரியர் மற்றும் பாடலாசிரியரான ஜாவேத் அக்தர் ஐ "சீதா ஆர் கீதா" படப்பிடிப்பில் சந்தித்தார். இவர்கள் இருவரும் மார்ச்சு 21, 1972இல் திருமணம் செய்து கொண்டனர். அப்போது அவருக்கு வயது 17 ஆக இருந்தது. குழந்தை நட்சத்திரமாக நடித்த இரானியின் தொழில் வாழ்க்கை முடிவடைந்த நிலையிலும், அக்தரின் திரைக்கதை ஆசிரியர் பணி சரியாகத் தொடங்காத காரணத்தினாலும் இருவரும் தங்குவதற்கு இடமில்லாமல் இருந்தனர். அந்நிலையில், ஹனியின் மூத்த சகோதரி மேனகாவின் வீட்டில் உள்ள ஒரு அறையில் குடும்ப வாழ்வை ஆரம்பித்தனர்.
இவர்களுக்கு, 1972இல் சோயா அக்தர் என்கிற மகளும், 1974இல் பர்கான் அக்தார் என்கிற மகனும் பிறந்தனர். இதனால் ஹனி இரானி வீட்டைக் கவனித்துக் கொள்ளும் இல்லத்தரசியாக இருந்தார். ஆனால் 1970களின் மத்தியில் இவரது கணவர் அக்தருக்கும் நடிகை சபனா ஆசுமிக்கும் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக இவர்களது மண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது.[1] 1978இல் பிரிந்து வாழ்ந்த இத் தம்பதியினர், 1985இல் விவாகரத்து பெற்றனர். 1984இல் அக்தர் சபனா ஆசுமியை மணந்தவுடன், இரானி தன் இரு குழந்தைகளுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தார். இவர் குழந்தைகளுக்கு ஆதரவாக பணத்தை சம்பாதிக்கும் விதமாக புடவைகளில் பூத்தையல் செய்ய ஆரம்பித்தார். இறுதியில், அவர் திரைக்கதை எழுத்தாளராக தன் இரண்டாவது வாழ்க்கையை ஆரம்பித்தார். இரானியின் குழந்தைகள் (மகன்) பர்கான் அக்தார் மற்றும் மகள் சோயா அக்தர் ஆகிய இருவரும் இந்தித் திரைப்படத் துறையில் வெற்றிகரமான திரைப்படத் தயாரிப்பாளர்களாக வளர்ந்தனர்.[2]
ஹனி இரானி, தன் சகோதரிகளான மேனகா மற்றும் டெய்சி இரானிக்கு இளையவராவார். இவரது மூத்த சகோதரி மேனகா தயாரிப்பாளரான கம்ரான் கானை மணந்து கொண்டார். இவர் இயக்குனர் மற்றும் படத்தயாரிப்பாளர்களான சஜித் கான், மற்றும் ஃபராஹ் கானின் தாயுமாவார்.[3] இவரது மற்றொரு சகோதரியான டெய்சி இரானியும் இவரைப் போலவே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். இவர் திரைக்கதை ஆசிரியரான கே. கே. சுக்லாவை மணந்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.[4]
தொழில்
[தொகு]ஹனி இரானி, சிரக் கஹான் ரோஷ்னி கஹான், மற்றும் பாம்பே கா சோர் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமானார். இவர் 72 படங்களில் நடித்துள்ளார். இவர் 1991இல் வெளிவந்த லாம்ஹெ திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். இதில் ஸ்ரீதேவி நடித்துள்ளார். இப் படம் இவருக்கு சிறந்த திரைக்கதைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுத் தந்தது. இதன் மூலம் வெற்றிகரமான திரைக்கதை ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "'Shabana and I are not sahelis'". Filmfare. 2 July 2012. பார்க்கப்பட்ட நாள் 17 December 2013.
- ↑ "Honey Irani – Sweet Taste of Success" பரணிடப்பட்டது 2015-09-24 at the வந்தவழி இயந்திரம், india-today.com; accessed 1 December 2014.
- ↑ "'I told Shah Rukh." The Telegraph. 7 October 2007. பார்க்கப்பட்ட நாள் 2013-12-17.
- ↑ Rana A. Siddiqui (22 May 2003). "Honey Irani... happy and sweet". The Hindu. Archived from the original on 18 ஜூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 16 December 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help)