உள்ளடக்கத்துக்குச் செல்

வள்ளுவன் (சாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வள்ளுவர் (Valluvar) அல்லது வள்ளுவன் எனப்படுவோர் தமிழ்நாட்டில் வாழுகின்ற ஒரு பட்டியல் சாதியினர் ஆவர்.[1][2][3]

சோதிடம் கணித்துச் சொல்லுதல் கை ரேகை கொண்டு அகத்தியர், அத்திரி போன்ற சித்தர் வழியில் நாடி சோதிடம் பார்த்தல், மரபு வழி சித்த மருத்துவம், வாழ்வியல் சடங்கு ஆசிரியர்களாகவும் சில பாரம்பரிய வழிபாடுகளை கொண்டு தொழில் செய்து வருகிறார்கள்.

வள்ளுவன் எனும் சாதி தமிழகத்தின் மிகப் பழமையான சாதிகளுள் ஒன்று. போகர் சித்தர் தனது போகர் ஏழாயிரம் என்ற நூலில் அவர் வாழ்ந்த காலத்தில் தமிழகத்தில் இருந்த சாதிகளின் பெயர்களை பட்டியலிட்டு உள்ளார். அச்சாதிகளில் வள்ளுவன் சாதியையும் குறிப்பிட்டிருக்கிறார். திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் வள்ளுவன் சாதியில் தோன்றியவர் என்பதாலும், அவரது இயற்பெயர் அறியமுடியவில்லை என்பதாலும், அவர் தமது சாதிப் பெயரான வள்ளுவன் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறார் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

வள்ளுவன் சாதியில் சிவ கோத்திரத்தார் வகையினர் தங்களது வள்ளுவன் சாதி ஐந்து சகோதரர்களைக் கொண்டு உருவானதாக தங்களது முன்னோர்களால் வழிவழியாக சொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர். அதன் படி சகோதரர்களில் முதலாமவர் கச்சக் குலாவன், இரண்டாமவர் காக்ய நாய்க்கன், மூன்றாமவர் ஓடிவந்த செல்வன், நான்காமவர் பாலவராயன், ஐந்தாமவர் கூவம் சம்பந்தன். இந்த ஐந்து முன்னோர்களால் உருவாக்கப்பட்ட இச்சாதியில் இவ்வைந்து பெயர்களே தலைமை கோத்திரங்களாக இருக்கின்றன. மற்றவை கிளைக் கோத்திரங்கள். மற்ற சாதியினரைப் போன்றே இவர்களும் ஒரே கோத்திரத்தில் பெண் கொடுப்பது எடுப்பது இல்லை. இவர்கள் தங்களை நாயனார் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள். நாயனார் என்பது இச்சாதியினருக்கான பட்டம் என்று சொல்லப் படுகிறது. திருவள்ளுவர் நாயனார் என்று குறிப்பிடப்படுவதால் இவர்களும் தங்களை நாயனார் என்று அழைத்துக் கொள்கிறார்களா என்று தெரியவில்லை.

வரலாறு

வள்ளுவன் இனத்தைப் பற்றிய வரலாறு முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை. தொன்மையான இச்சாதியினர் பழங்காலத்தில் அரசர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருந்துள்ளார்கள். அனைத்து விதமான நற்காரியங்களுக்கும் நேரம் காலத்தைக் கணித்துச் சொல்லும் அரசாங்க சோதிடர்களாகவும், அரசர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். கேரளாவில் உள்ள வள்ளுவநாடு இச்சாதியினர் பெற்றிருந்த பெருமைக்கு ஒரு எடுத்துக் காட்டாகும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

தொழில்

தமிழகம் முழுவதும் வள்ளுவன் சாதியினர் ஒரே பெயரில் அழைக்கப்படுகிறார்கள் என்றாலும் சில இடங்களில் வேறு பெயர்களிலும் அழைக்கப் படுவதாகத் தெரிகிறது. தமிழகத்தில் இச்சாதியினர் தெற்கத்தியர், வடக்கத்தியர் என பிரிந்தே கிடக்கிறார்கள். தங்களை இன்னார் என்று தெரியப் படுத்திக் கொள்வதிலும் இவர்களுக்கு தயக்கம் இருப்பதாகவே தெரிகிறது. இவர்களில் பெரும்பாலோர் சோதிடத் தொழில் செய்து வருகிறார்கள். மேலும் வேளாண்மை, நாட்டு வைத்தியமும் செய்து வருகிறார்கள். இன்று இளைய தலைமுறையினர் போதிய கல்வி அறிவைப் பெற்றிருக்கின்றனர். காலச்சூழலுக்கு ஏற்ப அரசு மற்றும் தனியார் துறைகளில் பலர் பணியாற்றி வந்தாலும், பொருளாதாரத்தில் இவர்களில் பெருபான்மையோர் பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறார்கள்.

மேற்கோள்கள்

  1. Castes and Tribes of Southern India, Pg 303
  2. Bayly, susan (2004). Saints, Goddesses and Kings: Muslims and Christians in South Indian Society, 1700-1900. Cambridge University Press. p. 387. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0521891035.
  3. Daniel, E. Valentine (1996). Charred Lullabies: Chapters in an Anthropography of Violence. Princeton University Press. p. 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0691027730.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளுவன்_(சாதி)&oldid=4102880" இலிருந்து மீள்விக்கப்பட்டது