லவங்கி (திரைப்படம்)
லவங்கி | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | ஒய். வி. ராவ் |
தயாரிப்பு | ஒய். வி. ராவ் |
இசை | சி. ஆர். சுப்பாராமன் |
நடிப்பு | ஒய். வி. ராவ் குமாரி ருக்மிணி பி. ஆர். பந்துலு கே. ஆர். ஜெயம்மா கே. சாரங்கபாணி டி. ஆர். ராமச்சந்திரன் கே. ஆர். செல்லம் |
ஒளிப்பதிவு | ஜிதேன் பானர்ஜி |
கலையகம் | நியூடோன் ஸ்டூடியோஸ் |
விநியோகம் | ஸ்ரீ ஜெகதீஸ் ஃபிலிம்ஸ் |
வெளியீடு | 10 மே 1946 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
லவங்கி 1946 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். ஒய். வி. ராவ் தயாரித்து, இயக்கி வெளியிட்ட இத்திரைப்படத்தில் ஒய். வி. ராவ், குமாரி ருக்மணி, பி. ஆர். பந்துலு, கே. ஆர். ஜெயம்மா, கே. சாரங்கபாணி, கே. ஆர். செல்லம், டி. ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்.[1]
திரைக்கதை
[தொகு]லவங்கியின் கதை வரலாறும் கற்பனையும் கலந்த ஒன்றாகும். பேரரசன் ஷாஜஹானின் அவைக்களப் புலவராக இருந்தவர் என நம்பப்படும் ஜெகந்நாத பண்டிதர் என்ற பிரபல புலவர் ஒருவரை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டுள்ளது.
சம்ஸ்கிருத பண்டிதரான ஜெகந்நாத பண்டிதர் பல மொழிகளில் பாண்டித்தியம் உடையவர். அவர் காமேஸ்வரி என்ற கிராமத்து இளம்பெண் ஒருத்தியை திருமணம் செய்துள்ளார். புகழும், பொருளும் சேர்க்க எண்ணி பண்டிதர் ஊரை விட்டுக் கிளம்புகிறார். பல இடங்களுக்கும் சென்றபின் டில்லியில் பேரரசர் ஷாஜஹானின் அவைக்களப் புலவராக நியமிக்கப்படுகிறார்.
ஆண்டுகள் பலவாகின. ஊரை விட்டுச் சென்ற கணவன் திரும்பாததால் மனைவி காமேஸ்வரி துயரத்தில் இருக்கிறாள். மேலும் வறுமை, ஊரார் பழிச்சொல் என்பவற்றுக்கு ஆளாகிறாள். ஊரிலிருந்த முத்தண்ணா என்பவனும் அவனது மனைவியும் காமேஸ்வரிக்குத் தொல்லை கொடுக்கின்றனர்.
துன்பம் தாங்க முடியாமல் காமேஸ்வரி டில்லிக்குப் புறப்படுகிறாள், அங்கே ராணி மும்தாஜ் அவளை ஒரு தீயவனின் பிடியிலிருந்து காப்பாற்றித் தன்னுடன் அழைத்துச் செல்கிறாள். காமேஸ்வரி தன் கணவனான புலவரைச் சந்திக்க ராணி ஏற்பாடு செய்கிறாள். ஆனால் புலவர் காமேஸ்வரி யாரென்றே மறந்துவிட்டார்.
ராணி மும்தாஜின் ஏற்பாட்டில் காமேஸ்வரி தன் தோற்றத்தை மாற்றி லவங்கி என பெயரையும் மாற்றுகிறாள். ராணியின் மாளிகையில் அவளது நடனத்தைப் பார்த்த பேரரசர் ஷாஜஹான் அவளை அரசவையில் நடனமாட ஏற்பாடு செய்கிறார். லவங்கியின் நடனம் எல்லோரையும் கவருகிறது.
புலவரின் பிறந்த நாளன்று அவருக்கு என்ன பரிசு வேண்டும் எனப் பேரரசர் கேட்க, தனக்கு லவங்கி வேண்டும் எனப் புலவர் பதில் சொல்கிறார்.
புலவருக்கும் லவங்கிக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடக்கிறது. திருமண வைபவத்தின் போது லவங்கியின் கழுத்தில் ஒரு மாங்கல்யம் இருப்பதைப் புலவர் கண்டு அவள் ஒரு ஏமாற்றுக்காரி என அரசரிடம் முறையிடுகிறார்.
புலவருக்கு எவ்வாறு உண்மையை உணர்த்தி அவரும் அவர் மனைவியும் மீண்டும் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதே மீதிக்கதை.[1][2]
நகைச்சுவை
[தொகு]இத்திரைப்படத்தில் இடம் பெற்ற நகைச்சுவை காலத்தால் முந்தியது. கே. சாரங்கபாணி, கே. ஆர். செல்லம் ஆகியோரின் மகன் டி. ஆர். ராமச்சந்திரன். மகன் ஒரு அசடன். இவன் ஒரு நாள் தன் தாயிடம் திருமண நாளின் முதலிரவில் என்ன நடக்கும் என்று கேட்கிறான். அப்போது அங்கு பிச்சை கேட்க வந்த ஒரு நாடோடிப் பெண் அவனிடம் தான் அதற்கு விடை சொல்லித்தருவதாக அவனைக் கூட்டிச் செல்கிறாள். பின்னர் டி. ஆர். ராமச்சந்திரனுக்குத் திருமணம் நடக்கிறது. தாலி கட்டும் சமயத்தில் அந்த நாடோடிப் பெண் திடீரென அங்கு வந்து தான் அவனது குழந்தையுடன் கர்ப்பமாக இருப்பதாகச் சொல்கிறாள்.[1]
நடிகர்கள்
[தொகு]நடிகர்/நடிகை | கதாபாத்திரம் |
---|---|
ஒய். வி. ராவ் | ஜெகந்நாத பண்டிதர் |
குமாரி ருக்மிணி | காமேஸ்வரி/லவங்கி |
பி. ஆர். பந்துலு | பேரரசர் ஷாஜஹான் |
கே. ஆர். ஜெயம்மா | அரசி மும்தாஜ் |
கே. சாரங்கபாணி | முத்தண்ணா |
கே. ஆர். செல்லம் | முத்தண்ணாவின் மனைவி கோமளம் |
டி. ஆர். ராமச்சந்திரன் | முத்தண்ணாவின் மகன் கோபு |
விஞ்சமூரி வரதராஜ ஐயங்கார் | |
கே. ஆர். ஜெயகௌரி | |
செல்வி அஜூரி | நடனம் |
தயாரிப்பு விபரம்
[தொகு]பதிவு செய்யப்பட்ட வரலாற்றின்படி ஜெகந்நாத பண்டிதர் லவங்கி என்ற முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்ததாக உள்ளது. ஆனால் ராவ் கதையை மாற்றி எழுதினார். சென்னையின் பழமையான நியூடோன் கலையகத்தில் இத்திரைப்படம் படமாக்கப்பட்டது. ஜிதேன் பானர்ஜி ஒளிப்பதிவு செய்தார். எஃப். நாகூர் கலை, காட்சி ஜோடனை செய்தார். கதை, இசை, நகைச்சுவை எல்லாம் நன்றாக இருந்தும் ராவ் திருப்திப்படும் அளவுக்கு திரைப்படம் வெற்றி பெறவில்லை. இத்திரைப்படம் பின்னர் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.[1]
பாடல்கள்
[தொகு]திரைப்படத்துக்கு சி. ஆர். சுப்பாராமன், ஹெச். பத்மநாப சாஸ்திரி ஆகியோர் இசையமைத்தனர். பாடல்களை இயற்றியவர் பாபநாசம் சிவன். பம்பாயைச் சேர்ந்த செல்வி அஜூரியின் நடனம் ஒன்றும் படத்தில் இடம் பெற்றது. அவரது கவர்ச்சி உடை பலரின் புருவத்தை உயர்த்த வைத்தது. வாசக்காரர் போலத் தோணுதே என்ற ராவும் ருக்மிணியும் பாடிய பாடல் பிரபலமானது.[1]