முகப்புவயல் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்
முகப்புவயல் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 9°40′28.82″N 80°1′46.61″E / 9.6746722°N 80.0296139°E |
பெயர் | |
பெயர்: | முகப்புவயல் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் |
அமைவிடம் | |
நாடு: | இலங்கை |
மாகாணம்: | வடக்கு |
மாவட்டம்: | யாழ்ப்பாணம் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | முருகன் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
இணையதளம்: | முகப்புவயல் |
மண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் யாழ்ப்பாணம், மண்டைதீவில் அமைந்துள்ளது.
தல வரலாறு
[தொகு]மண்டை தீவின் தெற்கே வசித்து வந்த முத்தர் என அழைக்கப்பட்ட முத்துத்தம்பி என்னும் பெரியார் பெரும் நிலபுலன்களைக் கொண்டவராக விளங்கியுள்ளார். இவர் தனது காணியிலே ஐயனார் கோயிலை அமைத்து வணங்கி வந்தார். இவர் இறந்த பின் இவரது மகன் குமாரவேலு என்பவர் இக்கோவிலை பராமரித்துவந்தார். இவரை முத்தர்மோன் என்று மக்கள் அழைப்பார்கள். ஆன்மீக ஈடுபாட்டின் காரணமாகத் இவர் துறவு நிலையை மேற்கொண்டவராக காணப்பட்டார். இக்காரணத்தால் மண்டைதீவில் துறவியர் கூட்டம் ஒன்று உருவாயிற்று. இவ்வாறான துறவியர் கூட்டம் மண்டைதீவில் இருப்பதை அறிந்த கடையிற் சுவாமிகள் இங்கு வந்து ஏனைய துறவியருடன் சேர்ந்து கொண்டார். கடையிற்சுவாமிகள் இந்த இடத்திலே ஓர் அற்புதத்தை நிகழ்த்திக் காண்பித்தார். முத்தர்மோனை அழைத்து தன் முன்பு இருக்கும்படி பணித்தார். பின்பு தான் வைத்திருந்த குடையை விரித்துப் பிடித்துக்கொண்டு தன் இருபக்கத்திலும் இருவரை நிற்கும்படி பணிந்தார். இச்சந்தர்ப்பத்தில் அவர் அருகில் இருந்த முத்தர்மோன் திடீரென ஏதோவோர் சக்தியால் உந்தப்பட்டு அருகில் கிடந்த கற்களை எல்லாம் பொறுக்கி எடுத்து கடையிற் சுவாமிகளை முருகனாகவும் அவர் அருகில் நின்ற இருவரையும் வள்ளி தெய்வானையாகவும் கருத்திற்கொண்டு முருகப் பெருமான் திருக்கோயிலை அடையாளப்படுத்தினார். பின்னர் தெளிந்து நடைபெற்றவை யாவும் முன்னைத் தவவிசேடத்தினால் நிகழ்ந்தவை என்றுணர்ந்து அவ்விடத்திலேயே முருகன் கோயிலை கட்டினார். ஆரம்பத்தில் இவரால் வணங்கப்பட்ட ஐயனாரை புதிதாக அமைந்த கோயிலின் வெளிப்பிரகாரத்தில் தாபித்து பரிவாரக் கோயிலாக அமைத்துக் கொண்டார்.
ஆண்டுதோறும் வரும் ஆனி பௌர்ணமியில் திருக்குளிர்த்தி பொங்கல் என்பன நடைபெறும். இக்காலத்தில் பறை மேளம் வாசிக்கப்படும். பூநகரியில் இருந்து பூசாரிகள் இங்கு வந்து குளிர்த்தியில் உருக்கொண்டு கட்டுச் சொல்லும் வழக்கமும் காணப்படுகிறது.
புதிதாக முருகன் கோயில் அமைக்கப்பட்ட பின்னர் ஐயன் கோயில் என்றழைக்கப்படும் வழக்கு மறைந்து முகப்புவயல் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் என்று அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது.
கடையிற் சுவாமிகள் வாழ்ந்த காலம் கிபி 1810-1875 எனக் குறிப்பிடப்பட்டு உள்ளதால் இக் கோயில் இக்காலப்பகுதிக்குள் அமைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. குமாரவேலுவின் ஆண்வழிச் சந்ததியினரே தலைமுறை தலைமுறையாக இக்கோயிலை பராமரித்து வருகின்றனர். முத்தர்மோன் என்றழைக்கப்பட்ட குமாரவேலுவின் சமாதி இக் கோயிலின் தெற்கே உள்ள இவரது காணியில் கட்டப்பட்டு உள்ளது.