பூமன் ஆந்தை
பூமன் ஆந்தை (உயிரியல் பெயர்: Bubo zeylonensis leschenaulti) என்பது பழுப்பு மீன் ஆந்தையின் துணை இனமாகும். இப்பறவை இந்தியாவில் இருந்து மியான்மர் வழியாக மேற்கு தாய்லாந்து வரையான பகுதியை வாழ்விடமாக கொண்டுள்ளது.[1] இலங்கையில் இப்பறவையை ஊமத்தம் கூகை என்று அழைப்பர்.
விளக்கம்
[தொகு]பூமன் ஆந்தை சற்று பருமனான ஒரு ஆந்தை ஆகும். இது சுமார் 56 செ.மீ. நீளம் இருக்கும். இதன் அலகு பசுமை தோய்ந்த வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். விழிப்படலம் நல்ல பொன் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் கால்கள் ஆழ்ந்த மஞ்சள் அல்லது பசும் நிறத்தில் இருக்கும். இந்த ஆந்தை கருஞ் சிவப்புக் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். தலையில் கொம்புகள் போன்ற மயிர் குஞ்சங்கள் இருக்கும். உடலின் மேற் பகுதியில் நெருக்கமாக கறுப்புக் கோடுகள் காணப்படும். உடலின் கீழ்ப்பகுதி மஞ்சளும், இளஞ்சிவப்பும் தோய்ந்த வெண்மையான நிறத்தில் இருக்கும். நெளி நெளியான பழுப்பு நிறக் குறுக்குப் பட்டைக் கோடுகளும், பெரிய கறுப்புக் கோடுகளும் காணப்படும். தொண்டையும் முன் கழுத்தும் எத்தகைய கறையும் இன்றி நல்ல வெண்மை நிறத்தில் இருக்கும். கால்களில் தூவி போர்வை இருக்காது.[2]
பரவலும் வாழிடமும்
[தொகு]இப்பறவை இந்தியாவில் இருந்து மியான்மர் வழியாக மேற்கு தாய்லாந்து வரையான பகுதியை வாழ்விடமாக கொண்டுள்ளது. இப்பறவை சமவெளிகளில் நீர்வளம் மிகுந்த பகுதிகளில் அடர்ந்த மாந்தோப்புகளிலும், சாலை ஓரங்களில் உள்ள பெரிய மரங்களிலும் காண இயலும். நீலகிரி, பழனி மலைகளில் 1144 மீட்டர் உயரம் வரைக் காணப்படுகின்றன.[2]
நடத்தை
[தொகு]பூமன் ஆந்தையானது நீர்நிலைகளை அடுத்து உள்ள மரங்களிலோ, பாறைகளிலோ அமர்ந்தபடி நீர்ப்பரப்பை நோட்டமிட்டபடி சமயம் வாழ்க்கும்போது மீனைப் பிடிக்கும். நீர்பரப்பை ஒட்டி குறுக்கும் நெடுக்குமாக பறந்து மீனைப் பிடிப்பதும் உண்டு. நீரில் பாயாமல் மீன்களைக் கால்களால் இலாவகமாகப் பற்றிப் பிடிக்கும். ஆழமற்ற நீரில் இறங்கி நீராடும் பழக்கம் இதற்கு உண்டு. இதன் முதன்மை உணவில் மீன், தவளை, நண்டு போன்றவை உள்ளன. 'பூம்ம், பூம்ம்' எனக் கொஞ்ச நேரத்திற்கு ஒருமுறை கத்தும்.[2]
இனப்பெருக்கம்
[தொகு]இவை திசம்பர் முதல் மார்ச் வரை இனப்பெருக்கம் செய்கின்றன. மாமரங்கள், அத்தி மரங்கள், அரச மரங்கள், ஆல மரங்கள், குங்கிலிய மரம் மற்றும் தாழ்நில காடுகளில் உள்ள மற்ற பெரிய மரங்களில் நிழலான இடங்களில் கூடு கட்டுகின்றன. பெரிய மரக்கிளைகளின் பிரிவில் உள்ள பொந்துகளிலும் பாறைகளிடையேயான பிளவிலும் பாழடைந்த கட்டிடங்களிலும் ஒன்றி அல்லது இரண்டு முட்டைகள் இடும்.[3] பொதுவாக நீரிநலைக்கு அருகிலேயே இனப்பெருக்கம் செய்யும். அடைகாத்தல் 38 நாட்கள் அல்லது சற்றே குறைவாக இருக்கும். குஞ்சுகள் வளர ஏழு வாரங்கள் ஆகும். குஞ்சுகள் வளர்ந்து முதிர்ந்த பறவைகளுக்கு உரிய அடர்த்தியான நிறத்தை அடைய மூன்றாண்டுகள் ஆகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Temminck, C. J. (1838). "Hibou Leschenault. Strix Leschenault". Nouveau recueil de planches coloriées d'oiseaux : pour servir de suite et de complément aux planches enluminées de Buffon, édition in-folio et in-4⁰ de l'Imprimerie royale, 1770. Vol. II. Paris, Strasbourgh, Amsterdam: F. G. Levrault, Legras Imbert et Comp.
- ↑ 2.0 2.1 2.2 2.3 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. pp. 264–266.
- ↑ தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:77