பல்லடம் சஞ்சீவ ராவ்
பல்லடம் சஞ்சீவ ராவ் | |
---|---|
1942 இல் சஞ்சீவ ராவ் | |
பிறப்பு | பல்லடம், தமிழ் நாடு | 18 அக்டோபர் 1882
இறப்பு | சூலை 11, 1962 | (அகவை 79)
அறியப்படுவது | புல்லாங்குழல் கலைஞர் |
பெற்றோர் | வெங்கோபாச்சார் |
பல்லடம் சஞ்சீவ ராவ் (Palladam Sanjeeva Rao; அக்டோபர் 18, 1882 – சூலை 11, 1962) தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கருநாடக இசை புல்லாங்குழல் வாத்தியக் கலைஞர் ஆவார்.
வரலாறு
[தொகு]கோயம்புத்தூர் மாவட்டம், பல்லடம் என்ற ஊரில் கல்வியாளர்களான ஒரு குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை வெங்கோபாச்சார் ஒரு சமஸ்கிருத பண்டிதர். அத்துடன் 'நோய்களைக் குணப்படுத்தக் கூடியவர்' எனப் பெயர் பெற்றவர்.
ஜமீந்தார் சத்கல சேலம் நரசையா இசை நுட்பங்கள் தெரிந்தவர். அவர் நோய்வாய்ப்பட்டபோது வெங்கோபாச்சார் அவரைக் குணப்படுத்தினார். இதற்குப் பதிலாக வெங்கோபாச்சாரின் பிள்ளைகளில் ஒருவருக்கு இசை நுட்பங்களை கற்றுக் கொடுக்க ஜமீந்தார் முன்வந்தார். பிள்ளைகளில் மூத்தவரும் பார்வை பாதிக்கப்பட்டவருமான பிரணநாதாச்சார் தெரிவு செய்யப்பட்டு பயிலத் தொடங்கினார். ஆனால் இளையவரான சஞ்சீவ ராவ் இந்தப் பயிற்சியினால் அதிகம் பயனடைந்தார். இரண்டு வருடங்களின் பின் நரசையா காலமாகவே, குடும்பம் சென்னைக்குக் குடி பெயர்ந்தது. அங்கு சஞ்சீவ ராவ் முதலில் கரூர் தேவுடு ஐயரிடமும் பின்னர் சீர்காழி நாராயணசுவாமி பிள்ளையிடமும் வயலின் கற்றுக் கொண்டார். தனது 12ஆவது வயதில் வயலின் கச்சேரிகள் செய்யத் தொடங்கினார்.[1]
ஒரு சமயம் பார்வை இழந்தவரான சரப சாஸ்திரி (1872-1904)[2] என்பவரின் புல்லாங்குழல் கச்சேரியை சஞ்சீவ ராவ் கேட்க நேர்ந்தது. அதிலிருந்து தான் ஒரு புல்லாங்குழல் வித்துவானாக வரவேண்டும் என்ற எண்ணம் தலைதூக்கவே, சஞ்சீவ ராவ் தனது சகோதரருடன் சாஸ்திரியின் ஊரான கும்பகோணத்துக்குச் சென்று அவரிடம் புல்லாங்குழல் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். பயிற்சி ஏழு வருடங்கள் தொடர்ந்தது. அவ்வளவு காலமும் உஞ்சவிருத்தி[கு 1] மூலம் தமது வாழ்க்கையை கொண்டு நடத்தினர்.
சரப சாஸ்திரி தனது 32ஆவது வயதில் காலமானபோது அவர் தனது சொந்த புல்லாங்குழலை சஞ்சீவ ராவிடம் கொடுத்தார்.[1]
கருநாடக இசையில் புல்லாங்குழல் ஒரு வாத்தியமாக ஏற்றுக் கொள்ளப்படாமல் இருந்துவந்தது. சரப சாஸ்திரி தனது சொற்ப வாழ்நாளில் புல்லாங்குழல் வாசிப்பில் ஒரு லாகவத்தையும் பாணியையும் ஏற்படுத்தி அதனை ஒரு மதிப்பிற்குரிய இசைக்கச்சேரி வாத்தியமாக மாற்றினார். அவர் இளவயதில் காலமாகிவிடவே அவருக்குப் பின் அவரது பணியை அவரின் முன்னணி மாணாக்கரான பல்லடம் சஞ்சீவ ராவ் தொடர்ந்தார்.[2]
புல்லாங்குழல் இசையில் சாதனைகள்
[தொகு]பல்லடம் சஞ்சீவ ராவ் புல்லாங்குழல் வாசிப்பில் பல முன்னேற்றங்களை செய்தார். துளைகளில் விரல்களை வைத்து இசை எழுப்புவதில் ஒரு முறையை உருவாக்கினார். இதன் மூலம் கருநாடக இசையை புல்லாங்குழல் மூலம் வாசிக்க ஒரு முறைமையை நிறைவு செய்து மக்கள் மத்தியில் புல்லாங்குழலிசையை பிரபலப்படுத்தினார்.[3][4] மாலி என அழைக்கப்பட்ட டி. ஆர். மகாலிங்கம் தோன்றும்வரை பல்லடம் சஞ்சீவ ராவ் புல்லாங்குழல் இசை மன்னராக விளங்கினார்.[2] இவரது புல்லாங்குழல் இசை பல கிராமபோன் இசைத்தட்டுகளாக வெளியானது. மேலும் அக்காலத்தில் திருவையாற்றில் தியாகராஜர் ஆராதனை விழா இரண்டு குழுக்களால் தனித்தனியாக நடத்தப்பட்டது. அதில் சின்னக் கட்சி என அழைக்கப்பட்ட குழுவில் இவர் முக்கிய பங்காற்றினார். இவரால் பிரபலப்படுத்தப்பட்ட சேதுலரா என்ற கீர்த்தனை அவருக்கு மரியாதை செய்யுமுகமாக இற்றைவரை தியாகராஜர் ஆராதனை விழாவில் எல்லா புல்லாங்குழல் இசைக்கலைஞர்களாலும் இசைக்கப்பட்டு வருகிறது.[1]
விருதுகள்
[தொகு]ஆற்றும் கலைகளுக்கான ஜனாதிபதி விருது என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்த விருது 1954 ஆம் ஆண்டு தொடக்கம் சங்கீத நாடக அகாதமி விருது என பெயரிடப்பட்டது. புதிய பெயரில் இந்த விருதினைப் பெற்ற முதல் கருநாடக இசைக் கலைஞர்கள் மைசூர் வாசுதேவாச்சாரும் புல்லாங்குழல் வித்துவான் பல்லடம் சஞ்சீவ ராவ் ஆகியோராவர்.[5] வயதில் முதுமையுற்ற மைசூர் வாசுதேவாச்சார் விருதை வாங்க தில்லிக்கு நேரில் போகமுடியவில்லை. ஆனால் பல்லடம் சஞ்சீவ ராவ் மார்ச் 31ஆம் திகதி நேரில் விருதினைப் பெற்றுக் கொண்டார். ஏப்ரல் 16இல் கோயம்புத்தூர் அகில பாரத மாத்வா மகா மண்டல் ஒரு பொது வரவேற்பு ஊர்வலம் நடத்தி கோபாலசுவாமி கோயிலில் வைத்து கன்னட மொழியில் வாழ்த்துப் பத்திரம் வழங்கினர்.
அடுத்து 21 திகதி தொடக்கம் 23 வரை கும்பகோணத்தில் மூன்று பாராட்டு விழாக்கள் நடந்தன. 21 ஆம் திகதி பஜனை மடத்தில் விழா நடந்தது. விழாவில் வயலின் வித்துவான் இராஜமாணிக்கம் பிள்ளை, வாக்கேயக்காரர் பாபநாசம் சிவன், ஹரிகதை வித்துவான் வதிராஜ பாகவதர் ஆகியோர் பாராட்டிப் பேசினார்கள். பின்னர் வாணி விலாச சபாவிலும், 23 ஆம் திகதி சத்குரு தியாகப்பிரம்ம சமாஜத்திலும் பாராட்டு விழாக்கள் நடந்தன.
ஏப்ரல் 25ஆம் திகதி சென்னை ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில் அப்போதைய தமிழ் நாடு நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியம் முன்னிலையில் சபையின் செயலாளர் மகாராஜபுரம் சந்தானம் ஒரு பாராட்டுப் பத்திரம் படித்தளித்தார். பின்னர் சூன் 27 ஆம் திகதி பெங்களூரில் காயன சமாஜ் அவரை கௌரவித்தது. நவம்பர் 22 ஆம் திகதி திருச்சி மாத்வ மகாஜன சபா பாராட்டுவிழா நடத்தியது.[1]
ஒரு சமயம் திருச்சி ஸ்ரீரங்கத்தில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் வங்காளத்தைச் சேர்ந்தவருமான சித்தரஞ்சன் தாஸ் (சி. ஆர். தாஸ்) பல்லடம் சஞ்சீவ ராவின் புல்லாங்குழல் இசையைக் கேட்டு "இந்த சங்கீதத்துக்கு ஈடு இணை கிடையாது என்பதை மனப்பூர்வமாக ஒத்துக் கொள்கிறேன்" என்று பாராட்டினார்.[6]
விருதுகள்
[தொகு]- 1943 ஆம் ஆண்டு சென்னை மியூசிக் அகாதமி சங்கீத கலாநிதி விருது வழங்கி கௌரவித்தது.
- 1943 ஆம் ஆண்டு தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி சங்கீத கலாசிகாமணி விருது வழங்கியது.
- இவர் புல்லாங்குழலில் வாசித்த "இங்கிலிஷ் நோட்" என்ற இசையைக் கொண்டுள்ள கொலம்பியா இசைத்தட்டில் "வேணுகான சிகாமணி" பல்லடம் சஞ்சீவ ராவ் என பெயர் அச்சிடப்பட்டுள்ளது.[7]
இசைப் பரம்பரை
[தொகு]பல்லடம் நாகராஜ ராவ், திருச்சி இராமச்சந்திர சாஸ்திரி ஆகியோர் இவரது மாணாக்கர்கள்.[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ உஞ்சவிருத்தி என்பது உணவை யாசித்து உண்பது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 A star in his time
- ↑ 2.0 2.1 2.2 [Palladam Sanjeeva Rao[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ My Coimbatore
- ↑ இதே நாளில் அன்று. தினமலர். 17 அக்டோபர் 2019.
- ↑ "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.
- ↑ நினைவுத் திரையில்...
- ↑ Palladam Sanjeeva Rao - English Note-78 rpm