பத்தாயிரம் புத்தர்கள் மடாலயம்
பத்தாயிரம் புத்தர்கள் மடாலயம் (Ten Thousand Buddhas Monastery) என்பது ஒரு பௌத்த விகாரையாகும். இந்த விகாரை ஹொங்கொங், சா டின் மாவட்டத்தில் "பய் டவ் கிராமம்" எனும் கிராமத்தில் உள்ளது. பத்தாயிரம் புத்தர்கள் மடலாயம் என்பதன் பொருள், மடாலயத்திற்கு செல்லும் பாதையின் இருபக்கமும், ஆரம்பம் முதல் மடாலயம் வரை பத்தாயிரத்திற்கும் அதிகமான பௌத்தப் பிக்குகளின் சிலைகள் கட்டப்பட்டிருப்பதே ஆகும். மொத்தம் 12,000 சிலைகள் உள்ளன.
உண்மையில் இந்த பௌத்த விகாரை "மடாலயம்" என்று அழைக்கப்பட்டாலும், சாதாரணமாக பௌத்த பிக்குகளுக்கும் பிக்குனிகளுக்கும் வசிப்பதற்கு அமைக்கப்பட்ட ஒரு மடமாக இல்லை.
வரலாறு
[தொகு]1933ம் ஆண்டுகளின் வணக்கத்திற்குரிய "யுவட் கை" எனும் சீனப் பௌத்த பிக்கு சீனாவில் இருந்து வருகைத் தந்திருந்தார். அவரே 1951ம் ஆண்டில் இந்த பத்தாயிரம் புத்தர்கள் மடாலயத்தைக் கட்டியவர் என அறியப்படுகிறது. அவர் பௌத்த போதனைகளை உள்ளூர் மக்களுக்கு போதிக்க என்று வந்தவர், பௌத்த கல்லூரி ஒன்றை இங்கு நிறுவும் முயற்சியில் இறங்கியுள்ளார். அக்காலகட்டத்தில் சா டின் பகுதியில் முன்னாள் பௌத்தராக இருந்த ஒரு வணிகரிடம் இருந்து நிலத்தை பெற்ற இவர், இந்த பத்தாயிரம் புத்தர்கள் மடாலயத்தை 1949களில் கட்டும் பணியைத் தொடங்கியுள்ளார். இந்த மடாலயம் கட்டுமானப் பணி ஆரம்பத்தின் போது போதிய வசதிகள் இன்மையால், இவரும் இவரது சீடர்களுமாக கட்டுமானப் பணிக்கான பொருட்களை கடும் உடல் உழைப்பின் பயனாகவே தூக்கிச் சென்று கட்டினராம். இதன் முதல் கட்டுமானப் பணிகள் எட்டு ஆண்டுகளில் நிறைவுற்றன.
அதன் பின்னர் 12,000 பௌத்தப் பிக்குகளின் சிலைகளை கட்டி, விகாரைக்கு செல்லும் பாதையின் தொடக்கத்தில் இருந்து விகாரை வரை நிறுவுவதற்கு 10 ஆண்டுகள் பிடித்துள்ளன. இவ்வாறு இதன் கட்டுமானப் பணிகள் 1957ம் ஆண்டில் நிறைவுற்றன. [1]
வழிபாட்டு முறைகள்
[தொகு]இந்தியாவில் தோன்றிய பௌத்தம் ஆசிய நாடுகள் பலவற்றிற்கு பரவியது போன்றேசீனத்திற்கும் பரவியிருந்தாலும், ஏனைய நாடுகளின் பௌத்த விதிமுறைகளுக்கும் சீன பௌத்த விதிமுறைகளுக்கும் இடையே பாரிய வேறுபாடு உண்டு. வழிபாட்டு முறையிலும் வேறுபட்ட தன்மைகள் உள்ளன. இலங்கை பௌத்தம் என்பது அதன் இந்து வழிபாட்டு முறையில் இருந்து மருவல் பெற்றது என்பதால் அது இந்து வழிபாட்டு முறைகளை ஆதாரமாகக் கொண்டு அமைந்திருப்பது போன்றே, சீனப் பௌத்தம் என்பதும் சீனர்களின் ஆரம்பப் பண்பாடு, பழக்க வழக்கம் மற்றும் வழிபாட்டு முறைகளை ஆதாரமாகக் கொண்டு விளங்குகிறது. ஹொங்கொங்கர்களும் சீன மரபினர் என்பதால் அதையொத்த வழிபாட்டு முறையே ஹொங்கொங் பௌத்தர்களிடையேயும் காணப்படுகின்றது.
பிக்குகளின் உடைகள்
[தொகு]பௌத்தப் பிக்குகள் இங்கே காவி உடைக்கு பதிலாக கருப்பு உடை அணிந்துள்ளனர். பிரதான பிக்கு மட்டுமே மஞ்சள் உடையும் அதற்கு மேல் சிகப்பு மேலாடை ஒன்றும் அணிந்துள்ளார்.
பாதணிகள்
[தொகு]பௌத்த கோயில்கள் உள்ளே பாதணிகள் அணிந்து செல்லத் தடையில்லை. பிக்குகளும் பாதணிகள் அணிந்தே உள்ளனர்.
வழிபாட்டு முறை
[தொகு]பிக்குகள் சிறிய பறைகளை அடித்தவண்ணம், பாளிமொழியில் "பண" சொல்கின்றனர். பௌத்தர்கள் நின்று வழிபடுகின்றனர். முழங்கால் இட்டு வணங்கும் முறை இலங்கை, இந்திய முறைகளில் இருந்து வேறுபடுகிறது. முழங்கால் இடும் போது கால்கள் வலிக்காமல் இருப்பதற்கு சதுர வடிவிலான ஒரு பஞ்சணை போடப்பட்டுள்ளது. அதன்மீது கால்களை முழங்காலிட்டு வழிபடுகின்றனர். பின்னர் வரிசையாகச் சென்று பிக்குகளிடம் ஆசிர்வாதம் பெறுகின்றனர்.
இறந்தவர்கள் சாம்பல்
[தொகு]இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இல்லாத ஒரு பௌத்த வழக்கு சீனப் பௌத்தர்களிடம் உள்ளது. அதாவது பௌத்த விகாரையின் உள்ளே சுவர்களில், தங்க நிறத்திலான சிறிய பெட்டிகள், சிறிய புத்தர் சிலை பதிக்கப்பட்டவை ஆயிரக் கணக்கில் உள்ளன. அந்த பெட்டிகளுக்கு இலக்கத் தகடு இடப்பட்டுள்ளது. அந்த இலக்கப் பெட்டிக்கு சொந்தக்காரர் அந்த பெட்டியின் உள்ளே தனது இறந்த உறவினர்களின் படங்களை வைத்து சாம்பலையும் பேணி வைக்கின்றனர். புத்தர் அவர்களுக்கு ஆசி வழங்குவதாக ஒரு நம்பிக்கை இவர்களிடையே உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை சென்று அந்த சாம்பலுக்கு பூசைகள் செய்கின்றனர். உள்ளூர் வாசிகளான ஹொங்கொங்கர்கள் புத்தரை வணங்குவதற்கு செல்லாவிட்டாலும், சீன மரபு சார்ந்த இறந்தவர்களின் சாம்பலை எடுத்து பூசை செய்வதும், படையல் இடுவதும் போன்ற பாரம்பரிய பழக்க வழக்கங்களை மேற்கொள்ளும் வகையில் செல்வோர் ஒப்பீட்டளவில் அதிகம் காணப்படுகின்றனர்.
படையல் இடல் வழக்கம்
[தொகு]இந்த இறந்தவர்களுக்கான பூசையின் போது பழங்கள், உணவுகள், உடை, பூக்கள் போன்றவற்றை வைத்து படையல் இடல் வழக்கமும் இவர்களிடம் காணப்படுகின்றது.
ஊதுவத்தி
[தொகு]ஊதுவத்தி கொளுத்தும் வழக்கம் இந்த பௌத்த மடாலயத்தில் காணப்படுகின்றது. கொத்து கொத்தாக ஊதுவத்திகளைக் கொளுத்துகின்றனர்.
பலகடவுள் வழிபாடு
[தொகு]ஹொங்கொங் பௌத்தர்கள், பௌத்தரை வணங்கும் அதேவேளை, சீனர்களின் பாரம்பரிய பலதெய்வ வழிபாடு முறைகளையும் ஒருங்கே கொண்டுள்ளனர். அவற்றில் சீனக் கருணை தேவதை வழிபாடு, மற்றும் தமிழர்களிடம் (தமிழ் இந்துக்கள்) காணப்படுவது போன்று வீரப்பத்திரன், ஊர்க்காவல் தெய்வங்கள் போன்ற, சீன முறைச்சார்ந்த கடவுள்களும் உள்ளனர். அதில் நான்முகன் சிலையும் காணப்படுகின்றது. அவற்றைப் படக்காட்சியகத்தில் காணலாம்.
படக்காட்சியகம்
[தொகு]மேலதிக விபரங்கள்
[தொகு]ஹொங்கொங் சுற்றுலா தளங்கில் இந்த மடாலயமும் ஒன்று என்பதால் சுற்றுலாப் பயணிகள் செல்லும் இடங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.ஹொங்கொங்கில் ஏனைய இடங்களில் பொது மக்களுக்கான வசதிகளுடன் ஒப்பிடுகையில், இங்கே போதிய வசதிகள் இல்லை என்றே கூறலாம். உணவு உண்பதற்கோ, அமர்ந்து இருப்பதற்கோ ஆசனங்கள் போன்ற எந்த வசதிகளும் இல்லை. மடாலயத்தின் பராமரிப்பில் ஒரு உணவகம் உள்ளது. அதில் சைவ உணவுகள் உள்ளன. இருப்பினும் இவை சீன உணவுவகைகள் என்பதால் வெளியாளர்கள் அதனை விரும்புவதில்லை. இவ்வாறான மடாலயங்கள், கோயில்கள் பெரும்பாலும் முன்னுரிமை கொடுத்து பராமரிக்கும் நிலை இன்மையாலேயே வசதிகள் குறைவாக உள்ளமைக்குக் காரணம் எனக் கருதமுடிகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Film Service Office:Ten Thousand Buddhas Monastery". Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-04-06.
வெளியிணைப்புகள்
[தொகு]- 10000 Buddha பரணிடப்பட்டது 2012-01-19 at the வந்தவழி இயந்திரம்