தாராசனா சத்தியாகிரகம்
தாராசனா சத்தியாகிரகம் (Dharasana Satyagraha) என்பது 1930 மே மாதம் காலனித்துவ இந்தியாவில் பிரிட்டிசாரின் உப்பு வரிக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டமாகும். தண்டி, உப்புச் சத்தியாகிரகம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, மகாத்மா காந்தி பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான அடுத்த போராட்டமாக குசராத்தில் தாராசனா என்ற இடத்தில் உப்பு எடுக்கத் தேர்ந்தெடுத்தார். தாராசனாவில் காவலர்களால் நூற்றுக்கணக்கான சத்தியாக்கிரகிகள் தாக்கப்பட்டனர். அடுத்தடுத்த இந்தப்போராட்டம் இந்திய சுதந்திர இயக்கத்தின் மீது உலக கவனத்தை ஈர்த்ததுடன், இந்தியாவில் பிரித்தானிய ஆட்சியின் நியாயத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியது.
பின்னணி
[தொகு]மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு தலைமையிலான இந்திய தேசிய காங்கிரசு, 1930 சனவரி 26 அன்று பகிரங்கமாக சுதந்திரப் பிரகடனத்தை அல்லது முழு தன்னாட்சி அறிவிப்பை வெளியிட்டது. [1] ஏப்ரல் 6, 1930 அன்று காந்தி சட்டவிரோத உப்பு தயாரிப்பதன் மூலம் நிறைவடைந்த தண்டி உப்பு சத்தியாகிரகம், பிரித்தானிய அரசின் உப்பு வரிக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை நடத்தியது. மே 4, 1930 அன்று, காந்தி இந்தியாவின் தலைமை ஆளுநர் இர்வின் பிரபுவிற்கு கடிதம் எழுதினார், தாராசனாவி உப்பு எடுக்கும் தனது தனது நோக்கத்தை விளக்கினார். உடனடியாக காந்தி கைது செய்யப்பட்டார். முன்மொழியப்பட்ட செயல் திட்டத்தை தொடர இந்திய தேசிய காங்கிரசு ஜவகர்லால் நேரு, வல்லபாய் படேல் உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்ட நாளுக்கு முன்பே கைது செய்யப்பட்டனர். .
தாராசனா அணிவகுப்பு
[தொகு]அணிவகுப்பு திட்டமிட்டபடி முன்னேறியது. 76 வயதான ஓய்வுபெற்ற நீதிபதி அப்பாஸ் தியாப்ஜி, காந்தியின் மனைவி கஸ்தூர்பாயுடன் அணிவகுத்துச் சென்றார். இருவரும் தாராசனத்தை அடைவதற்கு முன்னர் கைது செய்யப்பட்டு மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர். [2] அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர், சரோஜினி நாயுடு மற்றும் அபுல் கலாம் ஆசாத் தலைமையில் அமைதியான போராட்டம் தொடர்ந்தது. அணிவகுப்பை வழிநடத்த ஒரு பெண்ணை காந்தி உயர்த்தியதை சில காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கவில்லை. [3] நூற்றுக்கணக்கான இந்திய தேசிய காங்கிரசு தொண்டர்கள் தாராசனா உப்பு எடுக்கும் வேலைகள் நடைபெறும் இடத்தை நோக்கி அணிவகுக்கத் தொடங்கினர். காவல்துறையினரால் திருப்பி விடப்படுவதற்கு முன்னர், நாயுடு மற்றும் சத்தியாக்கிரகிகள் அந்த இடத்தை அடைந்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் அங்கேயே இருபத்தெட்டு மணி நேரம் காத்திருந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். [4]